உடம்பையும் மனதையும் அதிரடிக்கிற பெருமாள் தரிசனம். பழைய சீவரம் அருகே திருமுக்கூடல். இராஜேந்திரன் மகன் வீர ராஜேந்திரனின் முக்கிய கல்வெட்டுகள் உள்ள தலம்.
அச்சு அசலாய் திருப்பதி வேங்கடாசலபதி போல நெடிய உருவம் கண் மறைத்த திருமண். முகவாய் வெள்ளை. சங்கு சக்ரதாரி அபய ஹஸ்தம் அதே கையில் விரலிடுக்கில் தாமரைப் பூ. ஆயிரம் வருடத்துப் பெருமாள். பல நல்லவர்கள் நின்ற கருவறை வாசல். பல மன்னர்கள் நின்ற கற்றளி.

என்னால் திருமலைக்கு போக இயலவில்லை. கூண்டு வரிசையில் நின்று இருபத்தி ஏழு செகண்ட் தரிசனம் செய்ய இயலவில்லை. வயதானவர்களுக்கும் இதே போல வரிசைதான். அந்தத் தொலைவும் நடக்க இயலாது. ஐனாதிபதிக்கு மட்டும்தான நேரடி வழி ஏகாந்த சேவை. வீட்டில் பலமுறை போனார்கள் நான் முடியாமல் ஏங்கினேன்.

இங்கே அந்த ஏக்கம் ஏகாந்த சேவையில் தீர்ந்து மனம் பெரும் பரவசத்தில் அமிழ்ந்தது. பொஹேய் என்று எழுந்தது. கோவிந்தா கோவிந்தா என்று அலறியது. என் அப்பனே என் ஏக்கம் தீர இங்கழைத்தாயா வெறும் கையனாக வரவழைத்தாயா. நின்ற வாக்கில் நினைவு தப்பியது.

யாரோ அணைத்துக் கொண்டார்கள் தலை கோதினார்கள். பெரிய உள்ளங்கை முதுகு தடவியது. நெஞ்சு நீவியது. தோள் பிடித்தது ஒரு முகம் என் உச்சி முகர்ந்ததை உணர்ந்தேன். யாரும் அருகில் இல்லை. திகைத்து தள்ளி இருந்தார்கள் ஒரு சாட்சாத்காரம் உணர்ந்தேன். தெய்வம் மனுஷ்ய ரூபிணே. இதற்கர்த்தம் மனிதர்கள் தெய்வமாய் உதவுவார்கள் என்பது மட்டுமல்ல. தெய்வம் மனிதனைப் போல வரும் தொடும் முத்தமிட்டு முதுகு தடவும் என்றான வாக்யம்.

அலறி அடங்கிய பின்னர் ஒரு கவிழ்த்த பித்தளை டேக்சாவில் அமரவைத்தார்கள். மனம் பூமி தொட்டது. எதிரே பதுமைதான் ஆனாலும் உள்ளே சாந்நித்யம் நிச்சயம் நின்று பேசுகிறது.

இப்ப ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்கோ. இந்த ஊர் தொண்டைமான் ராஜாவுக்கு வெங்கடாசலபதி உயிர். குலதெய்வம். அவர் பிரத்யக்ஷம் வேணும்னு மன்னர் கேட்கரார். பலவித மன்றாடல். திருமுக்கூடலுக்கு வா… தரிசனம் தரேன்னு ஸ்வாமி சொல்லி இங்க தரிசனம் ஆச்சு. தொண்டைமான் என் அப்பன்னு ஸ்வாமியக் கட்டிக்கிறார். அதனால இந்த ஸ்வாமிக்கு அப்பன் வெங்கடேசன்னு பெயர். நீங்களும் அப்பா அப்பான்னுதான் அழுதேள். ஸ்வாமி தொட்டதா சொல்றேள். அணைச்சுண்டதா பரவசப்படறேள்.

நீங்க தொண்டமானா…? எனக்குப் புரியலை. அர்ச்சகர் ரகு பேசுகிறார்.

எனக்கு மட்டும் என்ன புரிந்தது. கூட வந்த மனைவி சாந்தாவும், உதவியாளர் பாக்யலட்சுமியும்
சிலவை சொன்னார்கள். நீங்கள் தெய்வத்திடம் கேட்டால் கேட்டது கிடைக்கிறது. எதுவும் கவனமாகக் கேளுங்கள்.

என்ன கேட்பது….. “என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்றா…?”

என்னைவிடுங்கள். திருப்பதிக்கு இணையான திவ்ய தரிசனம் தரப்படும் இடம் திருமுக்கூடல். உடம்பு உதறும் உணர்வு தருமிடம். தனியே போய் தனியே அமர்ந்து பெருமாளை உணருங்கள்.. செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் பழைய சீவரம் அருகே உள்ள ஊர். அப்படியே பழையசீவரம் மலையில் உள்ள நரசிம்மரையும் மனம் நிறைவாக தரிசிக்கலாம்.

கடைகள் ஏதும் அருகில் இல்லை எனவே பூ பழங்களை வீட்டிலிருந்தே வாங்கிப் போங்கள்.
என்ன அழகு பெயர்…… அப்பன் வெங்கடேசன்.