கிருஷ்ணா, நீ யார் என்பதை ஓரளவு அறிவேன். இந்த சத்திரியகுலத்தை காப்பாற்று. தர்மத்தை நிலைநாட்ட வந்திருக்கிறாய். துரியோதனனும் , துச்சாதனனும், கர்ணனும் உன் மீது அளவு கடந்த பொறாமையும், ஆத்திரமும் வைத்திருக்கிறார்கள். என்ன சொன்னாலும் கேட்க மறுக்கிறார்கள். யார் சொன்னாலும் காதில் ஏறவில்லை. பாண்டவர்களை ஒழித்தே தீருவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ணன் ஒருவன் போதும், சகலரையும் துவம்சம் செய்து விடலாம் என்று முட்டாள்தனமாக துரியோதனன் நினைக்கிறான். விரட்டப்பட்ட பாண்டவர்கள் மிகுந்த பலத்தோடு திரும்புவார்கள் என்று அவனுக்கு புரியவில்லை. காயம்பட்ட புலி கடுமையாக தாக்கும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

கிருஷ்ணா, துரியோதனன் அறிவிலி. கர்ணனால் தான் காப்பாற்றப்படுவோம் என்று நம்பியிருக்கிறான். கர்ணன் கர்வம் தலைவிரித்தாடுகிறது. எல்லோரும் தன்னை நம்பியிருப்பதாக அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். யார் என்ன புத்தி சொன்னாலும் அவர்கள் காதில் ஏறுவதில்லை. பீஷ்மர் தான் பேசுவதை நிறுத்தி விட்டார். அடிக்கடி மடக்கி கேட்கிறார்கள் நீ யார் பக்கம் நீ யார் பக்கம் என்று கேட்கிறார்கள். இரவு பகலாக இதையே கேட்கிறார்கள். உங்கள் பக்கம் தான் என்று சத்தியம் செய்ய நெருக்கடி தருகிறார்கள்.

கிருஷ்ணா, உனக்கு எதிராக நான் போரிட நேரிடுமோ என்று பயப்படுகிறேன். பாண்டவர்கள் பக்கம் தான் தர்மம் இருக்கிறது. அதற்கு எதிராக நான் நடக்க வேண்டுமோ என்று அச்சமாக இருக்கிறது. வெட்கப்படுகிறேன். ஆனால் இவர்கள் பக்கமிருந்து எப்படி வருவது என்று தெரியாமல் விழிக்கிறேன். கிருஷ்ணா, நான் தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று எனக்கு உதவி செய். எனக்கு அந்த நிலைமையை கொடு. தர்மசங்கடமான ஒரு நிலைமையை ஏற்படுத்திவிடாதே. தர்மத்திற்கு எதிராக என்னுடைய வில் இயங்கக் கூடாது என்று நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை.

கிருஷ்ணா, நான் வயதானவனாக இருந்தாலும் நீ யார் என்று என்னால் உணர முடிகிறது. நீ தெய்வ ரூபம் அவதாரம். சத்திரியர்கள் பாரத்தை குறைப்பதற்காக வந்திருக்கிறாய். அவர்கள் செய்யும் அட்டகாசத்தை பூமாதேவி பொறுக்க முடியாமல் உன்னை அனுப்பியிருக்கிறாள். இங்குள்ள முனிவர்களும், ரிஷிகளும் சொல்வது உண்மை என்பதை உன்னைப் பார்க்கும் போது புரிகிறது. இல்லையென்றால் வெறும் வாழைப்பழத் தோலை விரும்பி யாரால் சாப்பிட முடியும்.

நீ பெரியவன் கிருஷ்ணா, மிகப் பெரியவன். என் வீட்டிற்கு வந்து என்னை கௌரவப்படுத்தியிருக்கிறாய். இது பூர்வ புண்ணியம். நான் செய்த புண்ணியம். என்னுடைய கொடுப்பினை. என் மனைவியினுடைய பூஜை. இடையறாது இடையறாது அவள் உன்னை நேசிப்பது, உன்னை பூஜிப்பது இங்கு உன்னை வரவைழைத்து விட்டது. அவளால் நானும் புண்ணியம் படைத்தவனானேன். எங்கள் இருவரையும் ஆசிர்வாதம் செய். உன்னை தெய்வம் என்று நினைத்து வணங்குகிறோம்.

புருஷனும் மனைவியும் ஶ்ரீ கிருஷ்ணரின் கால் தொட்டு வணங்கினார்கள். கிருஷ்ணர் மாயச் சிரிப்பாக சிரித்தார். எழுந்திருங்கள் எழுந்திருங்கள் என்று எழுப்பி தழுவிக் கொண்டார். சித்தி சாப்பிட்டாகி விட்டது. நல்ல உணவு. மிக்க நன்றி என்று சொல்லி சிரித்தார். விதுரரின் மனைவி வெட்கப்பட்டாள். கிருஷ்ணர் மெல்ல அவளை அணைத்துக் கொண்டார்.

ஶ்ரீ கிருஷ்ணர் கை கூப்பி விடை பெற்றார். மெல்ல வெளியே நடந்தார். கணவனும் மனைவியும் கிருஷ்ணர் போவதையே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் வந்து போனது கனவு போல அவர்களுக்கு இருந்தது. வாசலில் மிகப் பெரிய வாழ்த்துரைகள் கேட்டது. விதுரரின் வில் அதர்மத்திற்கு ஆதரவாக போரிடாது. தர்மத்திற்கு எதிராக நிற்காது. விதுரரை என்ன செய்ய வேண்டும் என்று ஶ்ரீ கிருஷ்ணர் தீர்மானித்து விட்டார். அதை விதைத்து விட்டுத்தான் போனார்.

தெய்வத்தை நேசிக்கிறவர்களுக்கு தெய்வம் சரியான சமயத்தில் தரிசனம் தரும். அருகே வரும். அவர்களை தர்மத்தின் பக்கம் இழுத்து நிற்க வைக்கும். தெய்வம் ஒருபோழுதும் தன்னை அண்டியவர்களை கை விட்டதில்லை.

-முற்றும்