“சித்தி, பசிக்கிறது” ஆதூரமான அந்தக் குரல் செவிப்பறையில் மோதியது.

“என்ன?”

“சித்தி பசிக்கிறது” என்று மறுபடியும் சொன்னார். இப்படி தன்னை இந்த இறைவன் அழைக்க தான் என்ன கொடுப்பினை செய்திருக்க வேண்டும். என்னை சித்தி என்று நீ அழைக்க என் காதில் தேன் ஓடுகிறதே, கிருஷ்ணா, நான் உனக்கு உறவா, நான் உன்னை தெய்வமென்று கொண்டாடியிருக்கிறேனே, நீ என்னை சிறிய தாய் என்று அழைக்கிறாயே, நான் உனக்கு தாயா, யசோதையில்லையா, கிருஷ்ணா, நான் உன்னை துதிப்பது தெரிந்து விட்டதா உனக்கு. அதனால்தான் உணவு உண்ண வந்திருக்கிறாயா.” துரியோதனன் அகத்தில் உணவு உண்ணவில்லையா” அவள் வாய் திறந்து கேட்டாள்.

“கொடுத்தார்கள். விட்டு விட்டு வந்து விட்டேன். அங்கு சாப்பிட பிடிக்கவில்லை. சாப்பாடும் சரியாக இல்லை. அதனால்தான் இங்கு வந்து விட்டேன். சித்தி, பசிக்கிறது.”

“படுபாவி, இன்னும் பேசிக் கொண்டிருக்கிறேன். மூன்று முறை கேட்டு விட்டார்.” அவள் உணவு கொண்டு வர உள்ளே போனாள். எதை எடுக்க வேண்டும், எதை தொட வேண்டும் என்று தெரியவில்லை. பசிக்கிறது பசிக்கிறது என்று கேட்டதுதான் தெரிந்தது. மற்றவையெல்லாம் தட்டில் அடுக்கிக் கொண்டு வர நேரமாகும். உடனடியாக என்ன கொடுப்பது.

உள்ளேயிருந்து வாழைப்பழ தாரை தூக்கி வந்தாள். கிருஷ்ணருக்கு அருகே வைத்தாள். ஒரு பழத்தை பிய்த்தாள். உடனடியாக பசி அடங்க வாழைப்பழம் அற்புதமான விஷயம்.

“கிருஷ்ணா, சாப்பிடு”

தோலை உரித்தாள். பழத்தை தூக்கிப் போட்டாள். தோலை கையில் கொடுத்தாள். தான் என்ன செய்கிறோம் என்று அந்தப் பெண்மணிக்கு தெரியவில்லை. கிருஷ்ணரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னொரு பழத்தை எடுத்தாள். தோலை உரித்தாள். பழத்தை தூக்கிப் போட்டு விட்டு தோலை கிருஷ்ணர் கையில் கொடுத்தாள். கிருஷ்ணர் ஆவலோடு அந்தத் தோலை சாப்பிட்டார். இன்னொரு தோல், இன்னொரு தோல், இன்னொரு தோல் என்று பல வாழைப்பழ தோல்கள் அவர் சாப்பிட்டார். பழங்கள் முற்றத்தில் சிதறிக் கிடந்தன.

வாசற்கதவை திறக்கும் சத்தம் கேட்டது. விதுரர் கதவு திறந்து மறுபடியும் மூடினார். உள்ளே வந்தார்.

“என்னடி என்ன செய்து கொண்டிருக்கிறாய். பழத்தை தூக்கிப் போட்டு விட்டு தோலை கொடுத்துக் கொண்டிருக்கிறாயே. என்ன உடை இது. போ. போய் சீராக உடுத்திக் கொண்டு வா. நன்றாக இருக்கிறது நீ இருக்கின்ற லட்சணம். மயக்கமா உனக்கு” என்று மெல்ல கடிந்து கொண்டார்.

அவளுக்கு சுயநினைவு வந்தது. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும்போது அவள் தன் உடையை பார்த்து நாணினாள். உள்ளே ஓடினாள். வேறு உடை உடுத்த எடுத்தாள். அவள் மனம் கிருஷ்ணரின் காலடியிலேயே இருந்தது. அவள் இருந்த இடத்தில் விதுரர் உட்கார்ந்தார். வாழைப்பழத்தை உரித்து பழத்தை கொடுத்தார். தோலை ஓரமாக வைத்தார். கிருஷ்ணர் பழம் சாப்பிட்டார்.

“விதுரரே, அந்தத் தோலில் இருந்த சுவை நீங்கள் கொடுத்த பழத்தில் இல்லை” என்று மிருதுவாகச் சொன்னார்.

“ஆமாம். அவளுக்கு இருக்கின்ற பக்தி எனக்கு இல்லை. நான் அரசாங்க அதிகாரி. நான் அரசியல்வாதி. அரண்மனையில் சேவகம் செய்கிறவன். எனக்கு உன் மீது எப்படி பக்தி இருக்கும். என் அரசனுக்கு எதிரியாக வந்திருக்கிறாய். உன்னை நான் முழுமனதாக நேசிக்க முடியுமா. இந்த தொந்தரவெல்லாம் என் மனைவிக்கு இல்லை. அவள் முற்றிலும் முழுமனதாக எப்பொழுதும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் தோலை கொடுத்து பழத்தை தூக்கிப் போட்டாள். அந்தத் தோல் ருசியாகத்தான் இருக்கும்.

கிருஷ்ணா, என் வீடு தேடி வந்தாயே, துரியோதனன் சபையில் அளித்த அருசுவை உணவை நிராகரித்து விட்டு என் வீட்டிற்கு வந்தாயே. எவ்வளவு பெரிய பாக்கியம். நான் எப்பேர்பட்ட புண்ணியம் செய்திருக்கிறேன். நான் நின்று வரவேற்க வேண்டிய இடத்தில் என் மனைவி நின்று வரவேற்றிருக்கிறாள். உன்னுடைய துணியை சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் உன் பெயரைச் சொன்னால் மயங்கி விடுவாள். உன்னைப் பற்றி பாடினால் கண்கிறங்கி விடுவாள். உன் படத்தைப் பார்த்தால் சுருண்டு கீழே விழுந்து விடுவாள். அப்பேர்பட்டவள் எப்படி வந்தாள் உன்னுடைய இடத்தில் என்று எனக்குப் புரியவில்லை. உன்னுடையை வஸ்திரத்தை ஏன் உடுத்திக் கொண்டிருக்கிறாள் என்று எனக்கு புரியவில்லை. அவள் ஏன் தோலை கொடுத்தாள். நீ தின்றாய். எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னிலும் உயர்ந்தவள் என் மனைவி என்று எனக்குத் தெரியும். அவள் நேசிப்புக்கு முன்பு நான் கால் தூசுக்கு காணமாட்டேன்.

-தொடரும்