“மதியம் உணவு உண்ண விதுரர் வீட்டிற்கு வருகிறேன். சொல்லிவிடு.” என்று உத்தரவு பிறப்பிக்க, யாரோ வந்து விதுரர் வீட்டில் சொன்னார்கள். ஆனால் விதுரர் துரியோதனனுடைய சபை வாசலில் நின்று கொண்டிருந்தார். துரியோதனனும், திருதராஷ்டிரரும் உள்ளே இருக்க, பீஷ்மரும், விதுரரும், துரோணரும் வாசலில் காத்திருந்தார்கள்.

செய்தி விதுரரின் வீட்டிற்கு வந்தது. விதுரரின் மனைவி திகைத்தாள்.

“இந்த வீட்டிற்கா, உணவு உண்ணவா, அரண்மனையில் உணவு உண்ணவில்லையா?”

“இல்லை. ஏதோ காரணம் இருக்கும். அங்கு ஒரு முக்கியமான விஷயம் பேச வருகிறார். கை நனைக்க வேண்டாம் என்று இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனாலும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மரியாதைக்காக உட்கார்ந்து விட்டு இங்கேதான் உணவு உண்ண வருவார். எனவே தயவுசெய்து எல்லாவற்றையும் தயாராக வைக்கவும்.” என்று வந்தவன் சொல்லி விட்டுப் போக, அவளுக்கு தலை சுழன்றது.

“ஹே கிருஷ்ணா, உன்னை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தது போக, நீ என் வீட்டிற்கு வந்து உணவு உண்ண வேண்டும் என்று வரப் போகிறாயா. நான் உனக்கு நீர் உபசாரம் செய்யப் போகிறேனா, நான் உனக்கு உணவு பரிமாறப் போகிறேனா, நீ சாப்பிடுவதை பார்க்கப் போகிறேனா, நீ பேசுவதை கேட்கப் போகிறேனா, உன்னைப் பார்த்துக் கொண்டு உன் காலடியின் கீழ் இருக்கப் போகிறேனா, கிருஷ்ணா, கிருஷ்ணா இது என்ன பாக்கியம். நான் செய்கின்ற துதிகளெல்லாம் உன் காதில் விழுந்து விட்டனவா. என் வேண்டுதல்களெல்லாம் உனக்கு புரிந்து விட்டனவா. எனக்கு புரியவில்லையே கிருஷ்ணா, என்ன மாயம் செய்கிறாய். ஏன் எங்கள் வீட்டை தேர்ந்தெடுத்தாய்.” அவள் விம்மினாள்.

எப்படி இருக்கிறது வீடு, ப்பா…இது வீடா, ஒரு சின்ன குப்பைத் தொட்டி. மடமடவென்று எவ்வளவு சரி செய்ய முடியுமோ அத்தனையும் சரி செய்தாள். ஆசனத்தை அழுத்தி அசையாமல் இருக்கிறதா என்று பார்த்தாள். இன்னொரு ஆசனம் போட வேண்டாமா. இல்லை. அவருக்கு எதிரே யார் உட்காருவது. மற்ற ஆசனங்களையெல்லாம் விலக்கினாள். கீழே பாய் விரித்தாள். கம்பளி போட்டாள். நறுமண பூக்களைச் சுற்றினாள். குங்கிலியப் புகையும், சாம்பிராணிப் புகையும் எழுந்தன. மாடங்களை துடைத்து வைத்தாள். விளக்குகளை ஏற்றி வைத்தாள். இங்கே உணவு உண்ணப் போகிறாராமே, பகவானே, எனக்கு என்ன தெரியும். நெய் அப்பமும், கோதுமை உணவும், பழங்களை நசுக்கி தேனில் வைத்த பஞ்சாமிர்தமும், உப்பிட்ட கத்தரிக்காய் வறுவலும், பாலும், தயிரும் தயார் செய்தாள். வெளியே வந்தாள். தலை பரட்டையாக இருந்த்து . அவள் உடம்பு வீச்சும் அவளுக்கே சகிக்காமல் இருந்த்து. அட, குளித்து விடுவோம். அப்பொழுதுதான் நன்றாக இருக்கும் என்று சமையல்கட்டை மூடிவிட்டு குளியல் அறைக்கு போனாள்.

பெரிய அண்டாக்களில் இருந்த நீரை துணிகளை விலக்கி விட்டு மொண்டு மொண்டு குளித்தாள். வாசனை பொடியை தடவிக் கொண்டாள். தலை அலசினாள். முகம் அலம்பினாள். உடம்பு முழுக்க நீர் விட்டு குளித்தாள். எழுந்து நின்றாள். நெற்றிக்கு திலகமிட்டாள். வாசற்பக்கம் ஏதோ சத்தம் கேட்டது.

ஸ்வாகதம் கிருஷ்ணா, ஸ்வாகதம் கிருஷ்ணா என்று ஜனங்கள் அரற்றினார்கள்.

வந்து விட்டாரா, எங்கே? குளியல் அறை ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் கருடக் கொடி தெரிந்தது. கதவு திறந்து ஓடோடி வந்தாள். வாசற்கதவை திறந்து அவள் கீழ் இறங்கி உள்ளே தனியாக நடந்து வருவது தெரிந்தது. உடம்பில் ஒரு பொட்டு துணி கூட இல்லாமல் அவள் வாசற்கதவை திறக்க, தன் மேல் துணியை எடுத்து ஶ்ரீ கிருஷ்ணர் விதுர்ரின் மனைவி மீது போட்டார். அவள் அப்படி வந்தது யாருக்கும் தெரியவில்லை. அவர் உள்ளே போகட்டும் என்று சகலரும் விலகி நின்றார்கள்.

பீஷ்மரை பார்க்கவில்லையா. அதற்குள் முடிந்து விட்டதா. துரோணரோடு, துரியோதனரோடு பேச்சு வார்த்தை நடந்து விட்டதா. திடுக்கென்று இங்கே வந்திருக்கிறாரே.இரண்டு நாழிகை நேரம்தானே ஆயிற்று. அதற்குள் இங்கு வந்து விட்டாரே என்று அவள் வியந்திருக்க, தன் உடம்பில் அந்த ஒற்றை உடையை சுற்றியபடி உள்ளே அழைத்துப் போனாள்.

அவராக கதவை மெல்ல சார்த்தினார். உள்ளுக்குள் இருந்தார். கிருஷ்ணரே கதவை சார்த்திக் கொண்டதும் ஜனங்கள் வாசலில் நின்று கொண்டார்கள்.. உள்ளே நுழையக் கூடாது என்று கை கட்டி நின்றது.

அவள் கிருஷ்ணரை அழைத்துக் கொண்டு போய் ஆசனத்தில் உட்கார வைத்தாள். விழுந்து நமஸ்கரித்தாள். சுற்றி வந்தாள். மறுபடியும் நமஸ்கரித்தாள். பாதங்களை நீரால் கழுவினாள். நீரை எடுத்து வாயில் விட்டுக் கொண்டாள். தலையில் தெளித்துக் கொண்டாள். முகத்தில் தடவிக் கொண்டாள். கிருஷ்ணரை ஆதூரத்துடன் பார்த்தாள்.

-தொடரும்