நான், மயிலை யோகிராம் சுரத்குமார் சத்சங்கம் என்கிற குழுவிற்கு முன்னோடியாக இருக்கிறேன். உண்மையாக, ஆத்திரமில்லாத, முட்டாள்தனமாக பேசாத இளைஞர்களும் யுவதிகளும் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுடன் அவ்வப்போது திடீர் திடீரென்று எனக்குள் தோன்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். அடிப்படையான விதிகளை சொல்லித் தருவது வழக்கம். சிலரை உரசி நீ இந்த இடத்தில் இருக்கிறாய் என்று காட்டுவது வழக்கம். நான் தேர்ந்தெடுக்கும் நபர்கள் தான் இங்கு வர முடியுமே தவிர இதற்கு விண்ணப்பப் படிவமெல்லாம் கிடையாது. என் குருநாதர் யாரை என்னிடத்தில் அனுப்பி வைக்கிறாரோ அவரை நான் ஏற்றுக் கொள்கிறேன். வெறுமனே வந்து எனக்கு மந்திர உபதேசம் கொடுங்கள். தீட்சை கொடுங்கள் என்று அணுகுபவர்களை புன்னகையோடு அனுப்பி வைத்து விடுகிறேன்.