ஶ்ரீமத் இராமாயணம் ஏன் எழுதப்பட வேண்டும். ஏன் மறுபடி மறுபடி படிக்கப் படவேண்டும். அப்படி என்ன உயர்வு இது என்ற கேள்வி ஒருவருக்கு வருமாயின் (வரவேண்டும்) அதற்குத் தெளிவான பதில் இருக்கிறது.

ஒரு கதை அல்லது கவிதை வாழ்வு பற்றிய விசாரத்தை எதற்கு இந்த வாழ்க்கை என்ற பெரும் கேள்வியை தன்னுள்ளே பதிலாக தேக்கி படிப்பவருக்குத் தரவேண்டும்.

பிறப்பும், இறப்பும் மனிதர் வசம் இல்லை. ஆனால் வாழ்வின் ஓட்டம் ஓரளவு மனிதர் வசம் இருக்கிறது. ஒவ்வொரு வினாடியும் கேள்விகளோடு வாழும் மனித குலத்திற்கு இந்த இதிகாசங்கள் சுவையாகவும், தெளிவாகவும் பதில் சொல்லின. வேதங்கள் சொன்ன விஷயத்தை, உபநிடதங்கள் சொன்ன விளக்கத்தை புரிந்து கொள்ள மக்கள் தடுமாறியபோது இதிகாசங்கள் என்னும் எளிய வழி தோன்றியது.

ஒரு பதினாறு வயது இளைஞன் இளவரசன் மறுநாள் பட்டாபிஷேகத்திற்கு தயாராக இருந்தவன் சக்கரவர்த்தி என்று அமரப்போகிறவன் முதல்நாள் காலை, ‘அவ்விதம் இல்லையப்பா நீ பதினான்கு வருடம் காட்டிற்கு போ. என் பிள்ளை அரசாள்வான்’ என்று சிற்றன்னை சொல்ல, ‘இது உன் தந்தையின் கட்டளை’ என்று விவரிக்க, முகத்தில் சிறிதும் சலனம் காட்டாது இதைச் சொல்ல தந்தை எதற்கு, நீங்கள் சொன்னாலும் வனம் போவேனே என்பவனை இந்த உலகம் முன்பு கண்டிருக்கிறதா.

என்ன மனத்தெளிவு. என்ன அடக்கம். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிற தர்மம் அவனுள் எப்படி வந்தது. காட்டுவாசியான குகனை ஆரத்தழுவி இன்று முதல் ஐவரானோம் என்று சகோதர வாஞ்சையை வெளிப்படுத்த யார் சொல்லிக் கொடுத்தார்கள். அடித்து நொறுக்கப்பட வேண்டிய இராவணனை இன்று போய் நாளை வா என்று அவமானப்படுத்தும் கம்பீரத்தை எங்கு கற்றான். இது கற்றதா அல்லது இயல்பிலேயே பெற்றதா. இயல்பு எனில் அவனை மனிதன் இல்லை கடவுள் என்கிறது இதிகாசம். ஆழ்ந்து படித்தால் ஆம் என்று நமக்கும் சொல்லத் தோன்றும்.

ஆனால் இதோடு முடிவதில்லை. அந்த புத்தி நமக்குள் பாய வேண்டும். நிலைப்பட வேண்டும். என்பதே இந்த இதிகாசத்தின் நோக்கம். இந்தத் தெளிவுள்ளவன் மாரீசனை துரத்தி ஓடுவதும், மனைவியை இழந்து அலறுவதும் நம் இதயத்தை நோகச் செய்யும். நல்லவன் அழுதால் எவராலும் தாங்க முடியாது.

இந்த சர்க்கம் படித்தால் வியாதி போகும். இந்த சர்க்கம் படித்தால் செல்வம் சேரும். இந்த சர்க்கம் படிக்க பகைத் தொலையும் என்பது படிக்கத் தூண்டுகின்ற உத்தி. மனிதரின் பதட்டம் நீங்கினாலே வியாதி ஒழியும். ஆரோக்கியம் செல்வம் சேர்க்கும். அமைதியானவரைக் கண்டு பகை மிரளும்.

ஆக, ஶ்ரீமத் இராமாயணம் என்கிற இந்தக் காவியம் படிக்க படிக்க பதட்டம் நீக்கும். ஆழ்ந்து உள் வாங்க அமைதி ஸ்திரமாகும். பரதகண்டத்தின் மிகப் பெரிய சொத்து இராமாயணம். எது தர்மம், யார் நல்லவர் என்று கதையாய் சொல்லும் விளக்கம்.

ஒவ்வொரு மனிதனும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு அனுபவம் ஒரு வழி. ஆச்சாரியன் இன்னொரு வழி. இம்மாதிரி இதிகாசம் எளிய வழி.

மனமொன்றி ஶ்ரீமத் இராமாயணம் புரிய வேண்டுமே என்று படியுங்கள். மிக உன்னதமான நிலைக்கு உங்களை அழைத்துப் போகும். இது தொன்மையான பக்தி இலக்கியம். பக்தி என்பது பதட்டம் இல்லாது இருத்தல்.

என் குரு திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் கட்டளையாக இதை எழுதத் துவங்கியிருக்கிறேன். குருவும், இறையும் உடன் இருந்து காக்கவேணும்.

என்றென்றும் அன்புடன்,
பாலகுமாரன்.