[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …]

அமைதியான காலத்தில் மதப்பணி செய்வது என்பது மிகமிக எளிது. நல்ல அரசனும் இருந்து, வளமான பூமியும் இருந்து, முறையாக பருவமழையும் பெய்திருப்பின் எவர் வேண்டுமானாலும் சமையற்பணி கல்விப்பணி சமுதாயப் பணி செய்யலாம். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் காலத்தில் அரசாங்க நிர்வாகமே சமுதாயப் பணியை செய்வது எளிதல்ல. அந்நியரின் படையெடுப்பால் தஞ்சையின் பொருளாதாரம் குறைந்து போய் இருந்த காலம் அது. பிஜப்பூர் சுல்தானும் மதுரை நவாப்களும் தஞ்சையின் மீது படையெடுத்து வர தஞ்சை மன்னர் பெரும்படை திரட்டி அவர்களைத் தடுத்து விரட்டி அடித்தார். தஞ்சையை தனது போர் திறனாலும் பெரும் செலவு செய்து போர்வீரர்களை பெற்றதாலும் காப்பாற்றிக் கொண்டார். அப்படிப் பெரும் செலவு செய்ததால் அரண்மனை கஜானா காலியாகியது. பல வீரர்கள் விவசாயத்தில் இருந்து விலகி வெகு தொலைவு போய் வந்ததால் ஒரு போகம் பயிர் செய்வதும் நின்று போயிற்று. மழையும் முறையாகப் பெய்யாமல் ஏமாற்றியது. பருவக் கோளாறினால் வேதனையும், அன்னியர் படையெடுப்பினால் அவஸ்தையும் ஒருங்கே ஏற்பட தஞ்சை திகைத்து போயிற்று.

மன்னர் மக்கள் நலம் விரும்பியவர் எனவே தானிய கிடங்கு திறந்து பயிர் செய்ய முடியாத விவசாயிகளுக்கும் மற்ற ஜனங்களுக்கும் தானியங்களை வாரி வழங்கினார். ஆனால் பொதுமக்கள் குறை தீரவில்லை. பஞ்சம் பட்டினியால் மக்கள் அல்லலுறுவது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் குறை தீர்க்க முடியாத மன்னனாக இருக்கிறோமே என்று குமுறினார்.

ஸ்ரீராகவேந்திரருக்கு ஓலை அனுப்பி தஞ்சைக்கு வந்து எழுந்தருளுமாறு வேண்டிக்கொண்டார்.

ஸ்ரீராகவேந்திரருக்கும் நிலைமை புரிந்தது. மன்னரின் அழைப்பை ஏற்று மடத்தின் முக்கிய பிரதிநிதிகளோடு அவர் தஞ்சையை நோக்கி பயணப்பட்டார். 18 வருடங்கள் முன்பு தான் துறவறம் ஏற்ற போது தஞ்சை எவ்வளவு செழிப்பாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய பக்கமெல்லாம் எவ்வளவு பசுமை. காவிரியில் நீர் புரண்டு ஓடுமே, மக்களிடம் ஒரு சந்தோசமும் ஒரு சிரிப்பும் குதூகலமும் இருக்குமே. எவர் வந்தாலும் பணிந்து வரவேற்பார்களே, தெருவுக்கு தெரு அன்னதான சத்திரங்களும் வேதபாட சாலைகளும் மடப்பள்ளிகளும் இருக்குமே, இப்போது  எதையும் காணோமே. ஜனங்கள் எவ்வளவு வாட்டமாக இருக்கிறார்கள் வந்தவுடன் வாழ்த்தி வணங்கிய மக்கள் இப்போது வாழ்த்தவும் செய்யாது வணங்கவும் செய்யாது சாமி என்று கையேந்தி நிற்கிறார்களே, என்ன கொடுமை இது? இயற்கை பழித்ததா அல்லது அன்னியர் படையெடுப்பா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? ஊர் எல்லையிலேயே மன்னர் அவரை வரவேற்று பூரண கும்ப மரியாதை செய்து முரசு ஒலிக்க அழைத்துப்போனார். ஆனாலும் ஜனங்கள் உற்சாகமின்றி இருப்பதை உணர முடிந்தது. அரண்மனைக்குள் போய் நின்றதும் சில நிமிடங்களே மன்னரோடு பேசினார்.

“நான் இந்த கொடுமையான வறுமையை நீக்க அடுத்தடுத்து சில விஷயங்கள் செய்ய போகிறேன் எனவே எனக்கு அரசர் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மன்னன் மிகப் பணிவாக “இதை விட பெரிய பாக்கியம் உண்டா” என்று கைகூப்பினான். ஸ்ரீராகவேந்திரர் தான் கொண்டுவந்திருந்த தானியங்களையும் செல்வங்களையும் மக்களுக்கு வாரி வழங்கினார். பிறகு அரசனுடைய தானிய களத்திற்கு போய் அன்னலட்சுமி குறித்த பீஜாட்சர மந்திரம்  எழுதினார்.

“இங்கே தானியம் ஒரு நாளும் குறையாது எங்கிருந்தாவது தானியம் வந்து கொண்டிருக்கும் நீயும் கொடுத்துக் கொண்டு இரு” என்று சொன்னார்.

தானியங்கள் பெருமளவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தஞ்சை நோக்கி வந்தன. அரசாங்க அதிகாரிகள் முறையாக அதை வாங்கி வைத்தார்கள். எதையும் ஒதுக்காமல் பிரித்து வைத்தார்கள். ஜனங்களுக்கு வாரி கொடுத்தார்கள். மக்களின் செல்வமும் அரசனுடைய செல்வமும் வறியவர்களுக்கு உதவப்படுவதை பார்த்து ஸ்ரீராகவேந்திரர் மனம் நிறைந்தார்.

ஆனால் இது போதாது பருவமழை பொய்க்காது பெய்ய வேண்டுமெனில் இங்கு தெய்வ சாந்நித்தியத்தை அதிகப்படுத்த வேண்டும். தெய்வ சாந்நித்தியத்தை அதிகப்படுத்த வேண்டுமெனில் யாகங்கள் தான் உதவி செய்ய முடியும். எனவே வேத விற்பன்னர்களை வரவழைத்தார். யாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் முழுமனதோடு ஸ்ரீ ராகவேந்திரர் இட்ட பணியை ஏற்றுக் கொண்டார்கள்.

சதுரமாகவும் வட்ட வடிவமாகவும், பிறைவடிவமாகவும் ஹோம குண்டங்கள் அமைத்தார்கள். பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஹோம குண்டங்களில் தீ வளர்த்து வணங்கினார்கள். இறைவனால் கொடுக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் ஹோமகுண்டத்தில் இது உனக்கே இது உனக்கே என்று சொரிந்தார்கள்.

சிதறிக்கிடந்த வானத்தில் மேகங்கள் திரண்டன. ஹோமங்களில் இருந்து எழுந்த கரும்புகை அந்த மேகங்களை தொட்டன. மேகங்களோடு கரும்புகை கலந்த சில நிமிடங்களில் அதிக மேகங்கள் வந்தன. இடி இடித்து மின்னல் மின்னியது. பலத்த மழை சோழ தேசம் முழுவதும் இடைவிடாது பெய்தது.

காவிரியில் நீர் புரண்டது. பூமி குளிர குளிர நீரை உறிஞ்சியது. சேறாகியது, விவசாயிகள் மகிழ்ந்தார்கள். ஆடினார்கள். பாடினார்கள்.

ஸ்ரீராகவேந்திரரை வலம்வந்து கொண்டாடினார்கள். மன்னன் கண்ணில் நீர் துளிர்க்க அவரைப் பணிந்து எழுந்து நின்றான்.

“இது எப்படி ஹோமம் வளர்த்தால் மழை பெய்யுமா? ஹோம குண்டத் தீக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்? இது எவ்விதம் நடக்கிறது?” வியப்போடு வினவினான்.

மந்திரிகளும் சேனாதிபதியும் பண்டிதர்களும் ஸ்ரீராகவேந்திரர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று பார்த்தார்கள்.

நாம் எல்லோரும் இணைக்கப்பட்டு இருக்கிறோம் இந்த பூமியில் உள்ள அத்தனை உயிரினங்களும், பிரபஞ்ச சக்தியோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தனியாக எந்தத் துணையும் இல்லாமல் இருப்பது ஒன்று எதுவும் இல்லை. ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உயிரையும் பின்னிப்பிணைந்து கொண்டுதான் இருக்கிறது. பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொண்டுதான் இருக்கிறது. இந்த தொடர்பை புறக்கணிக்கிற பொழுது பிரபஞ்ச சக்தி உங்களை கைவிட்டு விடுகிறது. நாம் பின்னிப்பிணைந்து கொண்டு இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு அந்தப் பிணைப்பை உறுதிப்படுத்திக்கொள்ள, இங்கு பிரபஞ்ச சக்தி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உடனடியாக அனுப்புகிறது.

இது வெறும் விஞ்ஞான வித்தை அல்ல. ஹோமத்தில் எரிகின்ற தீயும், பொருள்களும் மழையை வரவழைக்கவில்லை. போட்ட விதம் வரவழைத்தது. நம் மனம் ஒன்றுகூடி மழை வேண்டும் என்று இறைவனை இறைஞ்சியது. நம் மனம் ஒன்றுகூடி இறைவனை இறைஞ்ச அந்த மனதின் சக்தி இந்த ஹோமத்தின் வழியாக பிரபஞ்ச சக்தியை தொட்டு பிரபஞ்ச சக்தி நெகிழ்ந்து இங்கு உங்கள் தேவைகளை உடனே நிறைவேற்றிற்று . இந்தத் தொடர்பு எந்நாளும் அழியக்கூடாது. யுத்தம் வந்திருக்கிறது என்றோ, யுத்தத்திற்கு போகவேண்டும் என்றோ வேறு வேலைகள் செய்ய வேண்டும் என்றோ நீங்கள் பிரபஞ்ச தொடர்பை அறுத்து விட்டு நகர்ந்தீர்கள் என்றால்  பிரபஞ்சமும் நகர்ந்து விடுகிறது. பிரபஞ்ச சக்தியின் அண்மை இல்லையெனில் இந்த பூமி இல்லை. பூமியில் உள்ள உயிர்கள் இல்லை. எனவே இடையறாது பலரோடும் நல்லவிதமாக தொடர்புகொள்ளலே வாழ்க்கை என்று சொன்னார்.

அவர்கள் கை கூப்பினார்கள் புரிந்தது என்றார்கள்.