அந்த இடத்தில் அவன் உருவப்படத்தை வைத்து மலர்களால் அலங்கரித்திருந்தார்கள். கடவுள் பெயரால் பாடல்கள் பாடினார்கள். தூப தீபங்கள் காட்டினார்கள். அந்த வாசனை இங்கு வந்து வீசியது. அந்த ஒளி இங்கே சுற்றியது.

ஞானி அவனுக்கு வேறு இடம் சுட்டிக் காட்டினார். அப்போது பூமியில் லேசாய் வெளிச்சம் பரவி இருந்தது. அங்கு இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.

“டேய், மனசு என்னமோ கஷ்டமா இருக்கு டா. அவனுக்கு நாம ஏதாவது பண்ணியாகணும்டா.” என்று பேசிக் கொண்டார்கள்.

“என்னடா பண்ணலாம்?” என்று இன்னொருவன் கேட்க, அவன் இருவரையும் ஆவலாகப் பார்த்தான்.

“நான் அவனுக்கு தர்ப்பணம் பண்ணப் போறேன்டா.” என்று சொல்ல, அவர்கள் இரண்டு பேரும் ஆற்றங்கரைக்கு போனார்கள். முங்கிக் குளித்தார்கள். கரையில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் குத்திட்டு உட்கார, மற்றவர்கள் அவர்கள் இருவரையும் “என்ன செய்கிறீர்கள்?” என்று விசாரித்தார்கள்.

“அந்த வீரனுக்கு தர்ப்பணம் பண்ணப் போறோம். வர்ரீங்களா?” என்று இவர்கள் கேட்க, மளமளவென்று அங்கு ஒரு கூட்டம் சேர்ந்தது. எல்லோரும் வரிசையாய் நின்றார்கள். பிறகு உட்கார்ந்து கொண்டார்கள்.

ஒருவர் உரத்த குரலில் தர்ப்பண மந்திரம் சொல்ல, எல்லோரும் கையிலுள்ள நீரை கட்டை விரல் வழியாகத் தரையில் விட்டார்கள். அந்த நீர் அவனை குளுமைப்படுத்தியது. இப்படி நீர் விடத் தெரியாதவர்கள் ஆற்றில் இறங்கி கையளவு நீரெடுத்து கிழக்கு நோக்கி ஆற்றிலேயே நீர் விட்டார்கள். அந்த நீரும் அவனை குளுமைப்படுத்தியது. தொண்டையை ஈரப்படுத்தியது. அவன் முகத்தில் குளுமை பரவியது. உடம்பு முழுவதும் குளுமை பரவி நிறையச் செய்தது. அவன் மெல்ல கனம் குறைந்தான்.

-தொடரும்