‌இதைச் செய்ய யாருக்கும் விருப்பமிருக்காது. ஆனால் செய்துதான் ஆக வேண்டும். எனக்கு இது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. நானும் இதே மாதிரிதான் இறந்து போனேன். எனக்கும் இதில் ஈடுபட விருப்பமில்லை. என்ன செய்வது? ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும். வெட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். இதைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் இந்த வேலைக்கு நாங்கள் வந்து விட்டோம். மரணத்தை நோக்கி எப்போதும் தயாராகக் காத்திருக்கிறோம். நான் எண்பத்து மூன்று வயதில் மரணமடைந்தேன். பாவம், இவன் இளைஞன். முப்பத்தியாறு வயதில் மரணமடைந்து விட்டான்.

அவனை நான் மெல்ல அணைத்துக் கொண்டேன்.

அவன் கவலையோடு கீழே உள்ள தன் மனைவியைப் பார்த்தான்.

ஜனங்கள், அவன் உடம்பைத் தூக்கிக்கொண்டு பெரிய மைதானத்திற்கு கிளம்பினார்கள். அவன் மீது கொடி போர்த்தினார்கள். மலர்வளையம் வைத்தார்கள். போர் வீரர்கள் அவனைச் சுற்றி நின்று கொண்டார்கள். அணிவகுத்து மரியாதை செய்தார்கள். சில வீரர்கள் அழுது கொண்டிருந்தார்கள். அந்த தேசத்தின் மரியாதை அவனுக்கு இடையறாது கிடைத்துக் கொண்டிருந்தது. பெரிய தலைவர்கள் எல்லாம் வந்து கைகூப்பி வணங்கினார்கள்.

மேலேயிருந்து அவன் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

‌”இவர்களையெல்லாம் நான் பார்த்ததே இல்லையே ” என்றான் என்னிடம். பிறகு சிரித்தான். அந்தச் சிரிப்பில் சோகம் இருந்தது.

‌குழந்தைகள் இன்னும் தன் அருகில் வரவில்லையே என்று கவலைப்பட்டான். அவன் கவலைப்பட்ட அடுத்த கணம் அதற்குண்டான வழி பிறந்தது. யாரோ ஒரு பெரிய அதிகாரி அவன் மனைவியையும் குழந்தைகளையும் மரியாதையுடன் அழைத்து வந்து முக்காலி போட்டு உட்கார வைத்தார். பெரிய தலைவர்கள் எல்லாம் இவன் மனைவியுடன் ஆதரவாய் பேசினார்கள். குழந்தைகளை கட்டி அணைத்துக் கொண்டார்கள். நெற்றியில் முத்தமிட்டார்கள்.

அவன் நிறைவாய் சிரித்தான்.

“வேறு எதற்கு செத்துப் போவது இதற்குத்தானே” என்று என்னைப் பார்த்துக் கேட்டான்.

நான் அவனை கவலையோடு பார்த்தேன். மிகவும் வேதனைப்படுகிறானோ என்று நினைத்தேன். ஞானி அவன் முதுகு தடவினார்.

இப்பொழுது அவன் ஞானியைப் பார்த்து வணங்கினான். ஞானி அவனிடம் கீழே சுட்டிக் காட்டினார்.

-தொடரும்