Loading...
  • கங்கை கொண்ட சோழன், பாகம் – 2
  • முதல் பதிப்பு : April 2013
  • MRP:₹460
  • விசா பப்பிளிகேஷன்

கங்கை கொண்ட சோழன் உருவான விதம்

பரமானந்தமாக இருக்கிறது. எழுதி முடித்துவிட்டோம் என்று உணர்ந்தவுடன் பரவசமாகவே இருந்தது. கடவுளே கடவுளே என்று அரற்றத்தான் தோன்றியது. சத்குருநாதா என்று மனத்திற்குள் கைகூப்பி தொழுதல் ஏற்பட்டது. போர்த்தி கொண்டு சுருண்டு படுத்து விடலாமா சிறிது நேரம் அப்படியே கிடக்கலாமா என்று அயற்சி வந்தது. நிஜமாகவே எழுதி முடித்துவிட்டோமா? எப்படி முடிந்தது என்று வியப்பு ஏற்பட்டது.

நான் கூடுதலாக அரற்றவில்லை,அல்லாடவில்லை,இந்த நாவல் எழுத ஆரம்பித்ததும் எனக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. மரணத்தின் விளிம்பு வரை போய் வர நேரிட்டது. பயணம் செய்யவே முடியாது வீட்டில் ஒரு அறையில் கட்டிலோடு கிடக்க வேண்டிய வாழ்க்கை தான் உனக்கு என்று தெள்ள தெளிவாக சொன்னார்கள். கையெழுத்து வாங்கி கொள்ளுங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நேரும் என்று தெரிவித்தார்கள். மருத்துவர்கள் பெரிதும் உதவி செய்தார்கள்.ஆனால் அவர்கள் பயமுறுத்தும்படியான ஒரு நிலையில் இருந்தேன் என்பது உண்மை. எப்படி மீண்டேன் என்று தெளிவாக சொல்ல முடியவில்லை.

ஆனால் நான் மனதிற்குள் என் சத்குருவோடு பேசினேன். மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது. நுரையீரல் இரண்டும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. நுரையீரலில் கால்பகுதிதான் வேலை செய்கிறது. உணர்ச்சி மிகுந்தால், எழுந்து நின்றால் மூச்சு வேகமாக இரைக்கிறது, இழுப்பு வருகிறது, விலாஎலும்பு துரித்து கொண்டு இருமல் நேரிடுகிறது. வேகமாக பிராண வாயுவை வேகமாக அழுத்தி அனுப்புகிறார்கள். அதில் மூச்சு திணறல் குறைகிறது, பிறகு அந்த வேகத்தை குறைக்கிறார்கள். பிராணவாயுவோடே இரு என்று சொல்கிறார்கள். நான் அப்பொழுது குருவிடம் பேசினேன்,”போதுமா, வந்துவிடட்டுமா” இன்னும் எழுத வேண்டியது நீங்கள் கட்டளையிட்டபடி செய்யவேண்டியது இருக்கிறதே. எதற்கு இப்படி மல்லாக்க போட்டு இருக்கிறீர்கள். நீங்கள் சொல்லுங்கள் வந்துவிடுகிறேன்.நான் மரணத்தை முழுமனதோடு வரவேற்க தயாராக இருந்து அவரிடம் பேசினேன்.எப்பொழுது என்ன மாற்றம் நடந்தது என்று என்னால் தெளிவாக சொல்லமுடியவில்லை.ஆனால் ஒரே இரவில் ஒரு புரளல் ஏற்பட்டது போல சட்டென்று தொற்று நோய் குறைய ஆரம்பித்துவிட்டது.

மருந்துகளுக்கு அந்த நோய் கிருமிகள் பணிந்தன குறைந்தன, விலகின. இதற்கு ஏழு நாள்களுக்கு பிறகு நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அப்பொழுதும் தலைமாட்டில் ஆக்சிஜென் சிலிண்டர் இருந்தது. அப்பொழுதும் அவ்வப்போது மூச்சு திணறல் ஏற்பட்டது. உண்பதற்கு, குளிப்பதற்கு மெல்ல நடப்பதற்கு எல்லாம் என் சத்சங்கத்தார் உதவி செய்தார்கள். மிக கவனமாக பக்குவப்படுத்தப்பட்ட உணவே என் வீடு எனக்கு கொடுத்தது. நரகமான நாட்கள் அவை.

அதற்கு முன்பு ஆறு முறை கங்கைகொண்ட சோழன் எழுதி கிழித்து போட்டு விட்டேன். ஏழாவது கையில் இருந்தது ஒரு மாதம் கழித்து ஏதேனும் செய்யலாம் என்று மெல்ல ஏழாவதாக எழுதி நூற்று சொச்ச பக்கத்தை படித்து பார்த்தேன். என் எழுத்து எனக்கே அபத்தமாய் இருந்தது.கோபமாய் தரையில் தூக்கி போட்டேன். பாக்கியலக்ஷ்மி பதறினார். இப்படியே செய்தால் என்ன அர்த்தம். எப்படி எழுதுவது என்றார். நான் யோசிக்கிறேன் இது இல்லை என்று மறுதலித்தேன். பாக்கியலக்ஷ்மி நான் அதை வைத்து கொள்கிறேன் என்றார், இல்லை அதை கிழித்து போடு அது வெளிவர கூடாது என்று கொஞ்சம் கோபமாக சொன்னேன். மனமேயில்லாமல் என் உதவியாளர் பாக்கியலக்ஷ்மி அதை கிழித்து போட்டார்.

கங்கைகொண்ட சோழன் எழுதுவேனா இல்லையா எனக்கு தெரியவில்லை. இதை யோசிக்க முடியுமா இதற்காக படிக்க முடியுமா இதற்காக பயணப்பட முடியுமா எப்படி முடியும் சாந்தாவுக்கு என்மேல் கடும் கோபம். கமலா கை எடுத்து கும்பிட்டாள். தயவு செய்து எனக்கு புருஷனாக மட்டும் இருங்கள் வேறு எதுவும் வேண்டாம் என்று கண்ணீர் விட்டு கெஞ்சினாள். எனக்கு புரிந்தது. ஆனால் வெறும் புருஷனாக இருக்க மட்டும் என்னால் முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.

மறுபடி மறுபடி என் குருநாதரிடம் பேசினேன். மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்தாயே முழுவதுமாய் வெளியே மீட்டு எடுத்துவிடேன். படிக்க வேண்டுமே பயணப்பட வேண்டுமே என்று தினம் தினம் அவரிடம் பேசினேன்.

என் குரு நாதர் சத்திய சொரூபம். உள்ளே இன்னும் தீவிரமாக கங்கைகொண்ட சோழனிற்காக நான் பேசியபோது சட்டென்று உடம்பில் மாற்றம் ஏற்பட்டது. தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள். முயற்சி செய்யுங்கள். நான் அவரோடு பேசிய ஷனத்தில் நோயாளி, அவரோடு பேசி முடித்த பிறகு ஒரு அமைதி. அதற்கு அடுத்த நொடி நான் சரியாகிவிட்டேன். மூன்று நொடிகள் தான் இந்த மாற்றம் நடந்தது. இதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் இது என் தெளிவான பரிபூரணமான அனுபவம்.

அட மூச்சு சரியாக வருகிறதே என்று சுவாசத்திற்கான பயிற்சிகள் செய்யும் பொழுது முன்போலவே திணறல், மூச்சு நெஞ்சு ஆழம் வரை இடிப்பது தெரிந்தது. படி ஏறலாமா ஏறி பார்த்தேன் நடக்கலாமா நடந்து பார்த்தேன். பிறகு மூன்று நாள்கழித்து கங்கைகொண்ட சோழனுக்காக நான் நீலகண்ட சாஸ்திரியார் படிக்கத்துவங்கினேன்.

இதை என் இடத்திலிருந்த தயவுசெய்து நீங்கள் பார்க்க வேண்டும். அறுபத்துஆறு வயது, இரண்டு முறை பைபாஸ் நடந்தது. திண்மை இல்லாத உடற்கூறு. ஓவ்வொரு படியாகத்தான் இறங்க வேண்டும். நிதானமாக தான் நடக்க வேண்டும். கங்கை கொண்ட சோழனுடைய கதையோ பிரமாண்டமான வாழ்க்கை. ஏகப்பட்ட புத்தகங்கள் படிக்க வேண்டும்.

என்னுடைய குடந்தை நண்பர் சீதாராமன் உதவி செய்வதாக வாக்கு அளித்தார். நிறைய தகவல்கள் அனுப்பினார். புத்தகங்கள் எல்லாம் என்னவென்று பட்டியலிட்டார். நான் பல புத்தகங்கள் நண்பர்களை வாங்கி வர சொன்னேன். என்னுடைய கட்டிலில் அமர்ந்தவாறே கட்டில் மீது ஒரு சாய்வு மேஜை போட்டு படிக்க துவங்கினேன். நோய் வந்தது நல்லதாயிற்று. வெளியே எங்கும் போவது இல்லை தொலைக்காட்சி பெட்டி பிரியமில்லை.எனவே நிறைய படித்தேன். என்னுடைய அறையை சுற்றி நிறைய மர பீரோக்கள் இருக்கும். அந்த மர பீரோக்களில் எல்லாம் வெள்ளை பேப்பர் ஓட்டினேன். நான் எடுத்த குறிப்புக்கள் எல்லாம் அதில் எழுதினேன்.

மைலாப்பூர் பங்குனி உற்சவத்தில் அதிகார நந்தியை பார்த்து விடுவது என்னுடைய விருப்பமான வழக்கம். அந்த கூட்டத்தில் போனால் மறுபடியும் தொற்று நோய் வந்துவிடும். கூடாது என்று வீடு மறுத்தது. செல்வி ரம்யா இடுப்பு உயர சிலிண்டரை நெஞ்சோடு அணைத்து கொண்டு பின்னால் வர அதிலிருந்து டியூப் வந்து என் முகத்திற்குள் முகமூடியோடு சேர அந்த பிராண வாயுவை சுவாசித்துக்கொண்டே அதிகார நந்தியை நான் தரிசனம் செய்தேன். மயிலாப்பூர் மக்கள் கூட்டம் சுற்றி சுற்றி வந்து கண்ணில் நீர் விட்டது. என்ன சுவாமி இப்படி ஆயிற்று எதற்கு சுவாமி வெளியே வருகிறீர் என்றெல்லாம் பிரியமுள்ளவர்கள் பரிதாபமாக பேசினார்கள். அதிகார நந்தி இன்னொரு தெம்பு கொடுத்தது.

வழக்கம்போல் இந்த முறையும் சத்சங்கம் அன்னதானம் செய்ய வேண்டும் என்று நான் கட்டளை இட நிச்சயம் செய்கிறோம் ஆனால் நீங்கள் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அவர்களே முன் நின்று அன்னதானம் செய்தார்கள். நான் இல்லாது அன்னதானம் நிறைவேறியது. அதற்கு பின்பு மேலும் தெம்பு கூடியது.

நான் எழுதியவற்றை திரும்ப திரும்பப்படித்து மனதில் தேக்கி கொண்டேன். புத்தகமாக இருப்பது மனதில் பதிவதை விட போக வர பீரோ முன் நின்று நான் எழுதியவற்றை நானே அடிக்கடி படித்துப்பார்த்து கொள்கிற போது பல்வேறு விஷயங்கள் மனதில் ஆழ பதிந்துவிடும் இது ஒரு யுக்தி. ஆகவே எல்லா இடங்களிலும் சுவர்களிலும் வெள்ளை பேப்பர் ஒட்டி குறிப்புகள் எழுதப்பட்டன. மறுபடியும் எழுத துவங்கினேன்.

மாலை நேரம் இரண்டு மாடி ஏறி மேல் தளத்தில் நடக்க முடிந்தது. தளத்தின் குறுக்கும் நெடுக்கும் நடந்து சுவாச பயிற்சிகள் செய்து கீழே இறங்கி வெண்ணீரில் குளித்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு நன்றாக உறங்க முடிந்தது. உறங்கி இரவில் பனிரெண்டு பனிரெண்டரை மணிக்கு எழுந்து மறுபடியும் படிப்பது குறிப்புகள் எடுப்பது தொடர்ந்தன. ஒரு நன்னாளில் எழுத ஆரம்பித்தேன். மடமடவென்று அத்தியாயங்கள் எழுதி முடிக்கப்பட்டன. “ஐந்து மணிவரை தூங்காம இருந்தா உடம்புக்கு என்ன ஆவது” கமலாவும் சாந்தாவும் முனுமுனுப்பாய் எதிர்த்தார்கள். ஆனால் வெறுமே எப்படி கிடப்பது என்று கேட்டபோது பதில் சொல்லவில்லை. பார்த்து எழுதுங்கள் என்று உதவினார்கள். பாக்கியலக்ஷ்மி டேப்ரெகார்டரில் இருந்த கேசட் எடுத்து கொண்டு போய் அவர் வீட்டில் உட்கார்ந்து எழுதிவிட்டு மறுநாள் காலை கொண்டு வந்து கொடுப்பார்.

அடுத்து என்ன எழுத போகிறேன்? எப்படி இந்த கதை வளரும்? சௌமியா, பாக்கியலக்ஷ்மி, ஜெயலட்சுமி ஆகியோர் உட்கார நான் அந்த கதையை விவரித்து சொல்வேன். அவர்கள் ஹா என்று கேட்டு கொண்டிருப்பார்கள். மணிக்கணக்கில் நான் பேசுவதை செவிமடுத்து எதிரொலிப்பார்கள். அவர்கள் முகத்தினுடைய பாவங்களை புரிந்து கொண்டு மனதில் வாங்கி கொண்டு நான் டேப்ரெகார்டரில் கதை சொல்வேன். இவர்கள் எவரும் இலக்கியவாதிகள் அல்ல. சாதாரண குடும்பத்து பெண்கள். சாந்தாம்மா நீங்க செய்ற வத்த குழம்பு நல்லா இருக்கு எப்படி பண்றீங்க என்று பேசுபவர்கள்.என்னை வெளியே ஹாலில் உட்காரவைத்துவிட்டு என் அறையை துடைத்து பெருகி மெழுகி புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு போகிறவர்கள். சாந்தாம்மா நீங்க கடைக்கு போகாதீங்க.என்ன வேணும் சொல்லுங்க நாங்க வரும்போது வாங்கிட்டு வருகிறோம். தினமும் வருகை செய்வதால் சாந்தாவின் வேலை பளுவை குறைக்க அவர்களே கடைக்கு போய் வேண்டியவற்றை வாங்கி வந்து வீட்டில் சேர்ப்பார்கள்.

இது எல்லாம் போன ஜென்மத்து புண்ணியம். குருநாதரின் ஆசி. காசு பற்றிய கவலை இல்லாது பல ஆட்கள் நிறைந்து என்னுடைய கதை போக்கையும் காது கொடுத்து கேட்டு பேருதவிகளையும் என் சத்சங்கம் செய்தது.

நோயுற்றவன் அல்லவா குரு என்று கொண்டாடுகின்ற மனிதனல்லவா. எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று ஞாயிற்று கிழமைகளில் வந்துவிடுவார்கள். விதம் விதமாக பேசுவார்கள். உள்ளே போராடிக்கொண்டிருந்தீர்கள் வெளியே நாங்கள் அவஸ்தை பட்டோம் தெரியுமா. உங்களுடைய நுரையீரலுக்கு குழாய்செலுத்தி Stethescope மூலம் சோதித்தார்கள். மயக்க மருந்தே கொடுக்கவில்லை. ஆனால் நீங்கள் நன்றாக ஒத்துழைத்தீர்கள். அந்த நேரம் கண்ணாடி வழியே நின்று கொண்டு எல்லோரும் உங்களை பார்த்து அழுது கொண்டு இருந்தோம். என்னால் மறக்கவே முடியாது என்று சொல்லி ரம்யா சத்தமாக பேசினார். இவர்கள் கொடுத்த உற்சாகத்தில், செய்த உதவிகளில் உடல் தேறியது. நடந்தே ஆக வேண்டும் என்று இழுத்துக்கொண்டு போய் விடுவார்கள். உட்கார்ந்தால் எழுந்திருங்கள் நடங்கள் என்று கட்டளை இடுவார்கள். கோபித்து கொண்டால் பொறுத்து கொள்வார்கள். நான் அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு நடந்து என் நுரையீரலை பலப்படுத்தினேன். சத்குரு யோகி ராம்சுரத்குமார் துணை வந்தார்.

படித்தது போதாது பயணப்பட வேண்டும். கீழை சாளுக்கியம் நோக்கி மேலை சாளுக்கியம் நோக்கி சோழ தேசம் நோக்கி பிறகு ஒட்ட தேசம் வழியாக கங்கை கரை நோக்கி பல்வேறு விதமாக பயணப்பட்டேன். கங்கை கடலோடு சேரும் இடம் போனேன். அங்கிருந்து குலுத்த நாடு என்று அழைக்கப்படும் அஸ்ஸாமிற்கு போனேன்.

பிரம்மபுத்திராவையும் காமாக்யாவையும் தரிசித்தேன். ஒவ்வொரு பாகமாக வெளி வந்தது. நடுவே எத்தனையோ சோர்வு ஏற்பட்டது. வேறு என்ன என்ன சேர்க்க வேண்டும் என்ன வேண்டாம் என்ற எண்ணம் வந்தது. சரியாய் வருகிறதா என்ற கவலை வந்தது இரண்டு பாகங்கள் படித்துவிட்டு சிலபேர் சரியாய் இருக்கிறது என்று சொன்னதும் தொடர்ந்து மூன்றாம் பாகம் வந்தது.

ஸ்ரீவிஜயம் காம்போஜம் போக வேண்டும் என்று ஆசை. ஆனால் இயலவில்லை. எனக்கு துணை இரண்டு பேராவது வேண்டும். என்னுடைய மருத்துவர் நண்பர் டாக்டர் மகேஷ் கங்கை கரை வரை துணை வந்தார். தன்னுடைய முக்கியமான பொறுப்புகளிலிருந்து விடுப்பு எடுத்து கொண்டு எனக்காக பயணப்பட்டார். அம்மாதிரியே எல்லா நேரமும் செய்ய முடியுமா எனவே ஸ்ரீவிஜய பயணம் செய்ய முடியவில்லை.

ஆனாலும் எங்கெல்லாம் ராஜேந்திர சோழன் போயிருக்கிறானோ அந்த இடங்களிலெல்லாம் என் அறுபதுக்கு முன்னாலேயே போயிருக்கிறேன். சிங்கப்பூரும் மலேயாவும் பாங்காக்கும் வேறு விஷயங்களுக்காக போனேன் அங்கு போய் இறங்கும் போதெல்லாம் நான் சோழர்களைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அலையற்ற சிங்கப்பூரின் கிழக்கு கடல் காண்கையிலே இந்த இடம் இவன் நிச்சயம் இறங்கிருப்பான் என்று எனக்கு தோன்றியது. எனக்கு பிடித்த இடமாக இருந்தது. அதே போல் யாழ்ப்பாணத்தில் பல இடங்கள் சுற்றிய போதும் அந்த உணர்வு தோன்றியது.

கோதாவரி கரையில் சினிமா படப்பிடிப்புக்காக ஆறு நாட்கள் தங்கிருந்தேன். அது நடன காட்சி ஆனால் எனக்கு வேலை பளு குறைவாக இருந்தது. நான் படகு மூலம் அந்த நதிக்கரையின் பல பகுதிகளை சுற்றி பார்த்தேன். பாய்மரம் விரித்த படகில் போவது எப்படி என்பது எனக்கு புரிந்தது.

மூங்கில்காடுகள் மூங்கிலால் செய்யப்பட்ட தெப்பங்கள் பெரிய கப்பல்களிலிருந்து இறக்கப்படும்பொருள் என்று பலவும் கவனித்தேன்.

கங்கை நதி கரையின் பலபகுதிகளை டைமண்ட் ஹார்பர் உட்படபலதும் ஏறி இறங்கினேன். உடம்பு நன்றாக ஒத்துழைத்தது. மூன்றாம் பாகம் வெளிவந்தது. இவைகளெல்லாம் மனதுக்குள் தேக்கி சுருட்டி நான்காம் பாகத்தையும் எழுதி முடித்து விட்டேன்.

முதல் மூன்று பாகங்களும் புத்தக கண்காட்சியில் அடுக்கடுக்காக விற்பனை ஆவதை அருகே இருந்து பார்த்து ஆனந்தித்தேன். நன்றாக எழுதினால் சுவையாக விளக்கினால் தமிழ் கூறும் நல்லுலகம் நிச்சயம் ஆதரிக்கும் என்று தெரிந்தது. இந்த வேகம் எனக்கு நாலாம் பாகத்தை கொண்டு வரவும் உதவி செய்தது.

உடையார் எழுதியதன் மூலம் எனக்கு நிறைய சரித்திர ஆர்வலர்கள் சேர்ந்தார்கள். சசிதரனும் ரமேஷ் முத்தையனும் அதில் முக்கியமானவர்கள். அவர்கள் கங்கை கொண்ட சோழன் பற்றிய தகவல் கொடுத்தார்கள். சிங்கப்பூர் நண்பர் சக்திஸ்ரீ என்பவரும் கடாரம் என்ற நாவலை எழுதிய மாயா என்கிற எழுத்தாள பெண்மணியும் தொலைபேசிமூலம் பல தகவல்களை சொன்னார்கள். என் சந்தேகங்களை தீர்த்தார்கள்.

சென்னை கடல்சார் தொல்லியல் துறை உயர் அதிகாரி ஸ்ரீ ராஜவேலு அவர்கள் வெகுநாள் நண்பர். அவரும் நேரே பேசி அந்த கடற் படையெடுப்பு பற்றி பல தகவல்கள் சொன்னார். நண்பர் சுந்தர் பரத்வாஜ் அவ்வப்போது தகவல்கள் தந்து ஆதரித்தார்கள்.

பலமுறை கங்கை கொண்ட சோழபுரம்போய் ஊரினுடைய பலப்பகுதிகளை சுற்றி பார்த்து கோவிலின் பல பகுதிகளை போய் கவனித்து குறிப்புகளெடுத்து கொண்டேன்.செங்கமேடு அருகே இருந்த சாளுக்கிய கலிங்க காளி சிலைகளை தரிசித்தேன். எண்ணெய் தடவி விட்டு வந்தேன். சந்தன குங்குமம் இட்டேன். அதையெல்லாம் ராஜேந்திரசோழனுக்காக செய்கிறோம் என்ற நினைப்பிலேயே செய்தேன்

கங்கை கொண்ட சோழபுரத்தில் திரு ராஜாராம் கோமகன் என்கிற PWD என்ஜினீயர் ராஜேந்திர சோழனாகவே வாழ்கிறார். அவர் நினைப்போடவே இருக்கிறார். வித விதமாக தகவல்களை சொல்கிறார் அவரோடு அந்த இடத்தின் பல பகுதிகளுக்கு போய் வந்தேன். கொள்ளிடத்திலிருந்து எப்படி கால்வாய் பிரிகிறது எங்கு வருகிறது கருவாட்டு ஓடை என்று இருக்கின்ற இந்த கால்வாய்க்கு அப்பொழுது என்ன பெயர் என்றெல்லாம் அவர் விவரித்தார்.

அவர் வேலைபளு மிகுந்த ஒரு அரசு அதிகாரி. ஞாயிறு கூட ஓய்விருக்காது. நான் வந்ததும் சகலத்தையும் கீழே போட்டு விட்டு என்னோடு சுற்றியது சந்தோசமாக இருக்கிறது. கங்கை கொண்டசோழ பெருவுடையார் அவருக்கு ஆதர்சன தெய்வம். அது ஜென்மஜென்மாதி உறவு. அவரை சந்தித்தது அதிர்ஷ்டம்.

மீன்சுருட்டி வழியாக விருத்தாச்சலம் பெண்ணாடமும் மீன்சுருட்டிலிருந்து எசாலமும் எசாலத்திலிருந்து காஞ்சிபுரமும் போகிறவழியெல்லாம் நான் பயணப்பட்டேன். உடையாளூர் மறுபடியும் போய் வந்தேன். பூம்புகார் நாகை என்று அலைந்தேன் இப்பொழுது அங்கு ஒன்றும் இல்லை. ராஜேந்திர சோழனின் எந்த தடயமும் இல்லை. ஆனால் அவன் இங்கு இருந்திருக்கிறானே என்ற நினைப்பே சந்தோசமாக இருந்தது. காயாரோஹனர் கோவிலுக்குள் நுழைந்திருக்கிறானே அதுவே நிறைவாக இருந்தது.

ராஜேந்திரர் எங்கு இறந்து போனார் காஞ்சிபுரத்திலுள்ள பிரம்மதேசத்தில். அப்படியா போவோமே. கடும்கல்வழி இரண்டு தொடைகளிலும் நரம்பு எடுத்ததன் விளைவாக ரத்த ஓட்டம் கீழே போகிறதே தவிர மேலே வர திணறுகிறது.அதாவது one way ட்ராபிக் ஆகிவிட்டது. அதனால் வலி ஏற்படுகிறது. அதை பார்த்தால் முடியுமா, தோள் பிடித்துகொண்டு கொம்பு ஊன்றிக்கொண்டு பிரம்மதேசம் போனேன். மனது மிகவும் கனத்து அழுதது. இந்த கோவிலிலே படி ஏறிருக்கிறான். இதை சுற்றி வந்திருக்கிறான்.இந்த மண்டபத்தில் உட்கார்ந்திருக்கிறான் என்று அந்த இடத்தை சுற்றி சுற்றி வந்தேன். அந்த நதியை தடவி கொடுத்தேன். அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தேன். சந்தன குங்குமம் இட்டு வஸ்திரம் சாத்திவிட்டு வந்தேன். அந்த ஊர் பொது மக்கள் சூழ்ந்து கொண்டபோது இங்கு சக்கரை பொங்கல் செய்யுங்களேன் என்று ஐநூறு ரூபாய் காசு கொடுத்தேன். அந்த பெண்மணிகளுக்கு பெரும்சந்தோஷம். நிச்சயம் செய்கிறோமென்று சத்தியம் செய்தார்கள்.

எங்கே இருக்கும் சிலை? எங்கே இருக்கும் அவன் சமாதி? இதுதான் ராஜா சமாதியா? என் தந்தையார் தாத்தா சொல்ல கேட்டிருக்கேன். ராஜேந்திர சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடமாக இருக்கலாமென்று ஒரு மேட்டை காட்டினார்கள் புதர்மண்டி இருந்தது. நடுவே சிவலிங்கம் இருந்தது. சசிதரன் உதவி செய்ய பிரபு தேவா துணைக்கு வர பாக்கியலக்ஷ்மி அபிஷேகம்செய்ய கும்பிட்டுவிட்டு வந்தேன். ஆனால் பிரம்மதேயத்தின் சந்திர மௌலீஸ்வரர் கோவில் கொடுத்த சந்தோசம் இந்த இடத்தில இல்லை.

அங்குள்ள விஷ்ணு கோவில் செல்லி அம்மன் கோவில்பார்த்துவிட்டு வந்தோம்.அங்கும் அவன் கல்வெட்டுகள் இருக்கின்றன. கங்கைகொண்ட சோழபுரம் என்ற அற்புதமான இடத்தைவிட்டு இந்த ஊரில் இறந்து போயிருக்கிறானே என்ற வேதனை வந்தது.

ஒருநாள் முழுவதும் அந்த ஊரை சுற்றி வந்தோம் ஒரு கட்டத்தில் என்னால் அவன் இங்கு வந்து இறந்ததை தாங்க முடியவில்லை. கோவிலிலே சுருண்டு படுத்துவிட்டேன். பல்வேறு விஷயங்கள் அப்போது புரிந்தன. ஏன் இங்கு வந்து இறந்தான் என்று தெரிந்தது, மகனை விட்டு நகர்ந்து வந்துருகிறான். எதோ வேண்டுதலாக இங்கே வந்து இறங்கிருக்கிறான் என்றெல்லாம் தோன்றியது.

கிட்டத்தட்ட பல மாதங்களாக பித்து பிடித்தது போல ராஜேந்திர சோழனை பற்றி நினைத்து கொண்டிருந்தேன். இலக்கிய கூட்டங்களுக்கு போனால் மனம் சிதறுகிறது என்பதால் தவிர்த்தேன், குறைத்துக்கொண்டேன். சினிமா பார்ப்பதும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது அதனால் சினிமாவும் பார்க்க போவதும் இல்லை. ஆக எல்லாம் எல்லா நேரமும் ராஜேந்திர சோழனுடையே வாழுகின்ற நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. சந்தோசமாக வாழ்ந்தேன்.

என்னுடைய அறையில் பிரிண்டருக்கு கீழே கங்கை கொண்ட சோழன் பற்றிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அதற்கு மேலே மருந்து பாட்டில்கள் இருக்கும்.சுவர் முழுவதும் குறிப்புக்கள் ஒட்டப்பட்டு இருக்கும். கண் எதிரே ராஜேந்திர சோழன் மாதிரி இலச்சினை இருக்கும்.

எசாலம் திருஎந்தளூர் போன்ற செப்பேடுகளை பார்க்க ஆவல் ஏற்பட்டது. செப்பேடுகளை காக்கின்ற தொல்லியல் துறை உதவி செய்தது. அங்குள்ள நபர்கள் அவைகளோடு அழைத்து அவைகளை தொடும்படி காட்டினார்கள்.

தடவி தடவி படிக்க முடிந்தது.பரவசமாக பார்க்க முடிந்தது. இவையெல்லாம் புதிய உற்சாகத்தை கொடுத்தன.

சரித்திர நாவல் என்பது தகவல் களஞ்சியம் அல்ல. ஆய்வு கட்டுரை அல்ல. அது ஒரு உணர்வு பெருக்கு. அப்படி சொன்னால்தான் வாசகருக்கு நன்கு போய் சேரும். பல ஆய்வு கட்டுரைகளை படிப்பது அதன் தேவை உள்ள எனக்கே அயற்சியாக உள்ளது. அந்த ஆய்வு கட்டுரைகளை எழுதியவர் நேரில் பேசுகிறார் என்று ஓடிப்போய் பார்த்தால் அது இன்னும் தொய்வாக இருக்கிறது. ஆய்வு கட்டுரைகளை சமர்பிப்பவர்கள் அதை சுவாரசியமாக கொடுப்பதில்லை. எனவே ஒரு சரித்திர புதினம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் தெளிவாக தெரிந்து கொண்டேன். அது ஒரு கதை போல இருக்க வேண்டும். நான் போரிட்டது இல்லை. யாரையும் வெட்டி கொன்றது இல்லை. ஆனால் மனதிற்குள் போரிட்டுருக்கிறேன். வெட்டி கொண்டிருக்கிறேன். பல ஆங்கில திரை படங்களில் இந்த வன்முறையையும் குதிரை ஓட்டத்தையும் அம்புகள் வீச்சையும் யானை ஓட்டத்தையும் சாகச செயல்களையும் பார்த்திருக்கிறேன். அவைகள் உள்ளே தங்கிருக்கின்றன.

ராஜேந்திர சோழனின் வளர்ச்சியை அவன் கல்வெட்டுகள் மூலம் அடுக்கி தெரிந்துகொண்டேன். எதற்காக அவன் ஸ்ரீவிஜயம் போனான், ஏன் கடல் கடந்தான் என்ற ஒரு விஷயம் ஒரு யூகமாகத்தான் சரித்திர ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. வணிகர்களுடைய தொல்லையை நீக்க வேண்டும் என்பதுதான் ஒரு அரசனுடைய குறிக்கோளாக இருக்க முடியும். ஸ்ரீவிஜயம் முரண்டு செய்தது என்பது சூசகமாக தெரிகிறது. அதனால்தான் அங்கு படை எடுத்திருக்க வேண்டும். சீனத்து வாணிபத்தை சோழ தேசத்து வணிகர்கள் தொடர்ந்து செய்வதற்காக அந்த உதவி செய்திருக்கிறான்.இது என்ன விதமாக நடந்திருக்கும் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். அதை எழுதினேன்.

வீரமா தேவி உடன்கட்டை ஏறினாள். ஏன் புருஷன் மேல் இருக்கின்ற பிரியம் என்பது போதுமா, இல்லை என்று தோன்றியது. ஆனால் எங்கோ ஒருவர் ஒரு மூலையில் ராஜேந்திர சோழன் என்பதாவது வயதில் திருமணம் செய்து கொண்டான் என்ற தகவல் இருக்கிறது என்று சொல்ல, அதை பற்றி கொண்டேன். அது காரணமாக இருக்கலாமோ என்று யோசித்தேன். அரசர்கள் வாழ்க்கையில் பல திருமணங்கள் என்பது இயல்பு. அதிலும் தாண்டி அவர்களுக்கு நடன மாதர்களோடு தொடர்பு இருந்தது. அவன் சொடுக்கினால் வந்து நிற்க வேண்டி இருந்தது.இது அந்த கால வாழ்கை.

ஆனால் சோழ தேசத்தில் இதையும் நாகரிகமாகவே செய்தார்கள். அரசியல் திருமணங்களும், விருப்ப திருமணங்களும் அழகாக நடைபெற்றன. பரவைக்காக அவளுயர குத்துவிளக்கேற்றி மிக பெரிய மரியாதையை அவன் செய்திருக்கிறான்.அவளோடு தேர் ஏறி திருவாரூரில் வலம் வந்திருக்கிறான். இது கல்வெட்டு செய்தி. இதற்குள் புகுந்து யோசிக்கும் போது பெரிய விவரிப்பு கிடைக்கிறது.

உடையார் படித்து விட்டு ஆறு பக்கமும் அனுபவித்து விட்டு என் வாசகர்கள் உடனடியாக செய்த காரியம் தஞ்சை பெரிய கோவில் போனது. கல் கல்லாய் தடவி பார்த்தது என்று பல அன்பர்கள் எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். கங்கை கொண்ட சோழத்திற்கும் அவ்விதமாகவே மக்கள் போகவேண்டும் என்பது என் ஆசை.இது நிச்சயம் நிறைவேறும். அவன் வெட்டிய பொன்னேரியை நமது தமிழ் மக்கள் போய் பார்க்க வேண்டும். உடையார்குடி(காட்டு மன்னார் கோவில் ) போக வேண்டும். அங்குள்ள சிவன் கோவிலில் துரோகிகளான இரவிதாசன் பரமேஸ்வரனை பற்றி படிக்க வேண்டும். சோழவம்சம்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதித்த கரிகாலன் மரணம், உத்தம சோழன் ஆட்சி, ராஜராஜனின் தீவிரம், ராஜேந்திரனுடைய வளர்ப்பு,அவன் தந்தையிடமிருந்து பிரிதல், பிறகு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு நகர்ந்து பிறகு பெரிய நகரம் அமைத்துஅற்புதமான கோவில் எழுப்பி, எங்கோ பிரம்மதேயம் என்ற சிறிய கிராமத்தில் மரணம் அடைதல் என்பவற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.

எது சோழர் கால கற்றளி என்பதை பார்த்தவுடன் தெரிந்து கொள்ள வேண்டும்.சோழர் கால சிற்பம் எப்படி இருக்கும். அந்த தூண் எப்படி இருக்கும். பல்லவர் காலத்திற்கும் சோழர் காலத்திற்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் சாதாரண மக்கள் கூட தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டத்தான் இந்த நாவல் எழுதப்பட்டு இருக்கிறது.படிக்க சுவாரசியமாக இருப்பதற்காக தான் இந்த கதை வடிவம் அமைக்கப்பட்டது. எது கற்பனை எது சரித்திரம் என்பது உங்களுக்கு தேவை இல்லை. என்ன நடந்தது இதுவும் நடந்திருக்கக்கூடும் என்ற விஷயமேதான் ஒரு புதினமாக மாறுகிறது. இது நடந்தது என்ற கல் வீட்டின் மீது கால் வைத்துதான் இது நடந்திருக்கக்கூடும் என்பது எழுதப்படுகிறது.

வடக்கே முசுலீம்களின் படையெடுப்பு நடந்த போது இவன் கங்கை கரையை தொட்டிருக்கிறான் என்று சொல்லப்படுகிறது.ஒரு வெள்ளை கஜினி முகமதுவை நோக்கி ராஜேந்திர சோழன் படை எடுத்து சென்றிருந்தால் துருவர்கள் வரவு இன்னும் ஒரு நூற்றாண்டுகள் தள்ளி போடப்பட்டிருக்கும்.நடக்காதது விதியின் பிழை.

விடுமுறையில் ஊட்டி கொடைக்கானல் போகாமல் தஞ்சை கும்பகோணம் முழுவதும் சுற்றினோம் என்று வாசகர்கள் சொல்வது மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது.வெகு நிச்சயம் சரித்திரம் பற்றிய ஆர்வம் என் எழுத்துகள் ஊட்டிருக்கின்றன. உடையார் ஆறு பாகம் எழுதிய போது இது விற்குமா என்று என்பதிப்பாளர் கவலை பட்டார். இன்று அவர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

உடையார் பன்னிரெண்டாவது பதிப்பு வந்துவிட்டது. இது பெரிய சாதனை. ஆனால் இதற்கெல்லாம் அரசியல் தலைவர்களை அழைத்து கூட்டம் போட்டு நான் நெஞ்சில் பதக்கம் குத்திக்கொள்ள விரும்பவில்லை. என்னுடைய விஷயம் தமிழ் மக்களை சரித்திரம் பாற்பட்டு திருப்புவதே. சோழ தேசத்தின் மேன்மையை சொல்வதே. அது செவ்வனே நடந்திருக்கிறது.இந்த கங்கை கொண்ட சோழன் மூலம் அது மேலும் வலுப்பெறும். தமிழ் மக்கள் வெகு நிச்சயம் சோழர்களுடைய மேன்மையை தெரிந்து கொண்டுஅதை பற்றி சிலாகித்து பேசுவார்கள். இன்னும் சில தலைமுறைகளுக்கு கொண்டு செல்வார்கள்.

தமிழ் தமிழென்று வெறுமே உளறிக் கொண்டிருப்பதும் தாகமே மேகமே என்று எழுதுவதும் போதாது. நம்முடைய மூதாதையர்களுடைய வரலாறு தெரிய வேண்டும். எப்பேர்ப்பட்ட இனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அந்த சண்டேஸ்வரர் சிலையை இன்று யாராவது செய்ய முடியுமா என்ற கேள்வி வர வேண்டும். இத்தனை உயரம் கிரேன் இல்லாத காலத்தில் எழுப்பி இருக்கிறானே எப்படி என்ற கேள்வி வர வேண்டும்.களிமண்ணை பிசைந்து செய்வது போல கல்லில் செய்திருக்கிறானே என்ன இரும்பு என்ன கைவண்ணம் என்று தமிழர்கள் உரக்க முழக்கமிட்ட வேண்டும்.வடக்கே போய் சொல்ல வேண்டும்.

வடக்கே இருந்து வரும் யாத்திரிகள் கங்கை கொண்ட சோழபுரத்தை பெரிய கோவிலை நிச்சயம் பார்க்கவேண்டும் .

அரசியல்வாதிகள் தமிழ் தமிழ் என்று தன்னை பற்றியே பேசி கொண்டு இருக்கிறார்கள். அந்த மாயையிலிருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும்.

இந்த நாவலுக்காக நான் தேர்ந்தெடுத்த விஷயங்கள் பல நூறு இருக்கின்றன. பல சரித்திர புத்தகங்களை படித்த போது அவர்கள் நூற்றுக்கணக்கான பெயர்களை அந்த சரித்திர நாவலில் கொண்டு வந்து இருக்கிறார்கள். அதில் பத்து பெயர் கூட மனதில் தாங்காது. ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது தமிழர் வாசிப்பு திறன் குறைவு. அதில் உள்ளவர்களுக்கு இம்மாதிரி ஆய்வு கட்டுரைகளில் வருவது போல நூற்றுக்கணக்கான பாத்திரங்களை கொடுத்தால் அது புத்தகத்தை கீழே போட்டு விட வழி வகுக்கும். எனவே எவ்வளவு சொல்லவேண்டும் என்பதை சரித்திர புதினத்தில்முக்கியமாக கருத வேண்டும்.இதை சொல்வதில்தான் ஒரு நாவலுடைய வெற்றி இருக்கிறது.

நடை என்பது மிகமுக்கியம். பல சரித்திரநாவல்களில் இது பெரும் சிக்கலாக இருப்பதாய் நான் கவனித்திருக்கிறேன். கல்கியின் பொன்னியின் செல்வனுடைய நாவலின் தாக்கம் பல நாவலாசிரியர்களிடம் இருக்கிறது. இப்பொழுது ஆழ்வார்கடியானை விட்டுவிட்டு வந்தியத்தேவரை பின் தொடர்வோம் என்று கல்கி இட்டு கொண்டு போவார். அவருடைய பாணி அது. ஆரம்பத்தில் அது மிகச் சுவையாக இருந்தது. ஆனால் அதையே மற்றவர்கள் பின் தொடரும்போது அலுப்பு ஏற்பட்டு விடும். ஓவ்வொரு சரித்திர ஆசிரியரும் தனக்கென்று ஒரு பாணியை பின்பற்றி கொள்ள வேண்டும்.

எனவே கல்கினுடைய சாயல் சிறிதும் இல்லாதவாறு நான் என்னுடைய சரித்திர நாவலை அமைத்து கொண்டேன். அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இது கல்கி அவர்களுக்கு எதிரான விஷயம் அல்ல. வேறு தளத்திற்கு தமிழ் நாவலை அழைத்து போகும்முயற்சி.

ஓ…..அவள் எவ்வளவு அழகாக இருந்தாள் என்று எழுதுவது ஜெயகாந்தன் அவர்கள் பாணி. இதை பல நண்பர்கள் கடிதங்களில் கூட பின் பற்றிருக்கிறார்கள். மற்ற எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் சேர்த்தார்கள். ஆனால் நான் அதை விட்டு விலகி இருந்தேன். இப்பொழுது அவ்விதமாக எழுதினால் சிரிப்பாகக்கூட போய் விடும். அந்த பாணி பலமாக கைப்பற்றப்பட்டு உயர்வாக எழுதப்பட்டு பலபேரால் பாராட்ட பெற்ற பிறகு அதன் வலிவை மணத்தை அது இழந்துவிடும். வேறு ஒரு மணமும்,வலிவும் தேவைப்படுகிறது.அதைத்தான் ஒரு எழுத்தாளன் கண்டுபிடிக்க வேண்டும்.

என்னுடைய சரித்திர நாவலில் என்னுடைய பாணி தனித்த விஷயம். அவை செவ்வனே கையாளப்பட்டு இருக்கிறது. இது என் குரு எனக்கு கொடுத்த வரம். என் தாய் சுலோச்சனா அவர்கள் எனக்கு கொட்டி கொடுத்த தமிழின் மணம்.

என் வீடு பேருதவி செய்தது. என்னை சகித்து கொள்ளத் தனித்த குணம் வேண்டும். என் மூத்த மனைவி கமலாவிற்கும் இரண்டாவது மனைவி சாந்தாவிற்கும் அது இருந்தது. நான் திடமாக இருந்தபோதும் நோயுற்ற போதும் என்னை அவர்கள் கவனமாக பார்த்து கொண்டார்கள். வெறும் புருஷன் என்ற மரியாதைக்கு அப்பால் என்னைச் சுற்றி உள்ளவர்களின் மேன்மையை அறிந்து அவர்களையும் மிகவும் நேசித்தார்கள். பாகியலக்ஷ்மி இல்லாமல் சாந்தா எந்த புடவை கடைக்கும் போனதில்லை. பாக்கியலக்ஷ்மி கைப்பிடித்துதான் கமலா கோவிலுக்கு போவாள். வீடு ஒழிக்க வேண்டும் என்றால் பலபேர் ஓடி வந்து விடுவார்கள். குறைந்தபட்சம் ஏழு எட்டு பேராவது வேலை செய்வார்கள். என் வீடு அவர்களோடு கொஞ்சி பேசியும் சோறு பரிமாறியும் சந்தோசப்படும். அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு ஓடிப்போய் நிற்கும்.

என்னுடைய சத்சங்கம் யோகி ராம்சுரத்குமார் புகழ் மட்டும் பாடவில்லை. எனக்கு பேருதவி செய்தது. என்னை குளிப்பாட்டியது. துடைத்தது, கை கால்களுக்கு எண்ணெய் தடவியது. சோறு பிசைந்து ஊட்டியது. கால் பிடித்து தூங்க வைத்தது. நான் தூங்கும்போது அருகே நாற்காலி போட்டு என் சத்சங்கமும் தூங்கியது. நான் கண்களில் நீர் துளிர்க்க கை கூப்பி அவர்களுக்கு வந்தனம் சொல்கிறேன். எந்த ஜென்மத்தில் என்ன உதவி செய்தேனோ அது எனக்கு இப்பொழுது கிடைக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். அவர்களோ இந்த உதவி செய்ய நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். குரு என்று தான் என்னை வணங்குவார்கள். ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு பெரிய ஒரு குழு அமைவது என்பது ஆச்சிரியமான விஷயம். பொறாமை தரும் விஷயம்.

திருச்சிலிருந்து இறங்கி பிறகு தஞ்சாவூர் கும்பகோணம் போகும்போது ஒரு வாசக நண்பர், பாண்டியன் சுற்றுலா கம்பெனி நடத்துகிறவர் எனக்கு வண்டி கொடுத்து உதவி செய்வார். இதுவரை அவர் காசு கேட்டதும் இல்லை, நான் கொடுத்ததும் இல்லை. என் வீட்டில் உள்ள யோகி ராம்சுரத்துக்குமாருடைய மூன்றடி உயர ஐம்பொன் சிலை அவருடைய அன்பளிப்பு. ஐயா உங்களால் என் வாழ்க்கை சீராயிற்று. அதற்கு பதிலாக இவைஎல்லாம் ஒன்றும் இல்லை. ஏற்று கொள்ளுங்கள் என்றுதான் வேண்டுவார்.

ஊர் நண்பர்கள் பலபேர் தன் வாழ்க்கை மாற்றத்திற்கு என் புத்தகம் காரணம் என்று சொல்லுவார்கள்.சந்தோசமாக இருக்கும் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்ற நினைவு வரும். முகம் தெரியாத பல பேருக்கு என் எழுத்துக்கள் உதவி செய்து அவர்களை சீரும் சிறப்புமாக வைத்திருக்கின்றன என்பது ஆனந்தமான விஷயம் .

நான் பட்ட இளம் வயது வேதனைகள் எவருக்கும் வரலாகாது என்று நான் எழுதிய புதினங்கள் பலருடைய வாழ்க்கையை செப்பனிட்டு இருக்கின்றன. இதுதான் ஒரு எழுத்தாளனுடைய பணி. இதுதான் அவன் பிறந்ததிற்கான அர்த்தம்.அதை நான் செவ்வனே நிறைவேற்றிருக்கிறேன். என் குரு யோகி ராம்சுரத்குமார் அதற்கு துணை நிற்கிறார்.

இன்னும் சில விஷயங்கள் எழுத வேண்டும் அவைகளை மனதில் குறித்து வைத்திருக்கிறேன் தொடர்ந்து எழுதுவேன். அடர்ந்த இருள் படர்ந்த அழகாய் இருக்குது காடு. நான் கொடுத்த வாக்குகள் உண்டு காப்பதற்கு. தொடர்ந்து போக வேண்டும். இன்னும் பல காதம் கடந்து போக வேண்டும்.

மன நிறைவுடன் வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்

பாலகுமாரன்

இதைப்போன்ற புத்தகங்கள்

error: Content is protected !!