“நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா” என்று அந்த அரண்மனை தாதிகள் பாடியிருப்பார்கள்.

அன்று பௌர்ணமி அல்லவா, சிறிய மேகங்கள் நகரும் சித்திரை மாதம் அல்லவா, மேகங்கள் நகர, நிலவும் நகர்வது போலத்தானே இருக்கும். நிலா ஓடுவதும், மேகத்தில் மறைவதும், பிறகு மறுபடியும் வெளிப்படுவதுமான அழகை ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி என்கிற அந்தக் குழந்தை கண்டு குதூகலித்தது. குழந்தை அனுபவிக்கிறான் என்பதால் தாதிகள் கூடவே பாடினார்கள். நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா என்றார்கள்.

இராமா என்று அழைக்கின்ற ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியும் அவ்விதமே அழைத்தார். மறுபடியும் அழைத்தார். தாதிகளைப் போல கொஞ்சி அழைத்தார். ஆனால் நிலவு வரவில்லை. எங்கேயோ நகர்ந்து போய்க் கொண்டிருந்தது.

பரம்பொருள் அழைப்பதால் பூமிக்கு வந்து விட வேண்டும் என்று நிலவுக்குத் தோன்றியிருக்கும். ஆனால் தெய்வமே அழைத்தால் கூட இயற்கை விதியை மீறக் கூடாது என்று நிலவு தன்னை கட்டிப் போட்டுக் கொண்டது.

இராமன் என்கிற அந்தக் குழந்தை துக்கப்பட்டது. நான் அழைத்தால் லகூஷ்மணன் வருகிறானே, பரதன் வருகிறானே, சத்ருக்கணன் வருகிறானே, நிலவு ஏன் வரவில்லை. விக்கித்து நின்றது. ஏமாற்றம் அடைந்தது. உதடு பிதுக்கி அழத் துவங்கியது. அழுகையினூடே நிலவை அழைத்தது. பிறகு அழைப்பை நிறுத்தி நெஞ்சுக் கூடு விம்ம விம்ம உரத்து அழுதது.

இராமர் அழுவதைப் பார்த்து லகூஷ்மணர் அழுதார். லகூஷ்மணன் அழுவதைப் பார்த்து பரதன் அழுதான். பரதன் அழுவதைப் பார்த்து சத்ருக்கணன் அழுதான். குழந்தைகள் அழுவதைப் பார்த்து ராணிகள் அழுதார்கள். ராணிகள் அழுவதைப் பார்த்து தாதிகள் அழுதார்கள். காவலர்கள் அழுதார்கள். விளக்குகள் பொறுத்தப்பட்ட அந்த அரண்மனையிலிருந்து வெளிச்சத்தை விட வேகமாக அழுகை சத்தம் வந்து கொண்டிருந்தது.

அத்தனை குரல்களில் இராமன் குரலைக் கேட்டு தசரதர் துடித்து எழுந்தார். ஏன் குழந்தை அழுகிறான் கோபத்தில் கூவினார். அவர்கள் நடப்பைச் சொன்னார்கள். ஏதேனும் செய்யுங்கள். குழந்தைகள் மனதை மாற்றுங்கள் தாதிகளை நோக்கி கட்டளையிட்டார். தாதிகள் பதறினார்கள். ஆடினார்கள். பாடினார்கள். கோலாட்டம் போட்டார்கள். ஆனால் குழந்தை வான் நிலவை விட்டு கண்களை எடுக்கவில்லை. வதனத்தை வேறு எங்கேயும் திருப்பவில்லை. தசரதர் மேலும் சிடுசிடுக்க, தாதிக் கூட்டம் படபடத்தது. ராணிகள் அயர்ந்து போனார்கள். குழந்தை இராமன் ஏங்கி ஏங்கி வாய் ஒழுகலை கட்டுப்படுத்த முடியாது அழுதான். அந்தக் காட்சி உயிர் குலையை அறுத்தது.

ஒரு தாதி யோசித்தாள். குழந்தை நிலாவை வரச் சொல்லும்படி கேட்கிறான். ஆனால் நிலவு வராது. குழந்தையும் நிலவிடம் போக முடியாது. அது அப்பாலுக்கு அப்பால் உள்ளது. நிலவு வரவேண்டாம், நிலவு என்கிற விஷயம் வரவேண்டுமல்லவா, வரலாமே. அவள் உள்ளே ஓடினாள். பெரிய தங்கத் தாம்பாளத்தை கொண்டு வந்து முற்றத்தில் வைத்தாள். அதில் ஒரு குடம் நீரை நிரப்பினாள். தலும்பல் அடங்க காத்திருந்தாள். தண்ணீர் அமைதியாயிற்று. அந்தத் தாம்பாளத்தில் நிலவு பிம்பம் தெரிந்தது.

“ஹே இராமா, இங்கே வா. நிலவு வந்து விட்டது. இங்கே வா. உன்னைத் தேடி வந்து விட்டது. சீக்கிரம் வா”

குழந்தை அரசியின் மடியை விட்டு இறங்கியது. தாதியிடம் ஓடியது. காட்டுபவர் காட்டினால் யார் காணாதாரே. நீரிலுள்ள நிலவு பிம்பத்தை தாதி காட்டினாள். இராமன் பார்த்தான். திகைத்தான். இதோ நிலா என்றான். எல்லோரும் கரகோஷம் செய்தார்கள். ஆடினார்கள். பாடினார்கள். ஸ்ரீ இராமன் நிலவைப் பார்த்து பார்த்து சிரித்தான். அரண்மனை சிரித்தது. அரசர் சிரித்தார். அயோத்தியே சிரித்தது. மற்றக் குழந்தைகளும் நிலவைப் பார்த்து சந்தோஷமடைந்தார்கள். இராமர் நிலவை தொடப் போனான். வேண்டாம் என்ற தாதி வேண்டிக் கொண்டாள். இராமன் நிலவு பிம்பத்தை நோக்கி கை கூப்பினான். உதடு குவித்து முத்தம் அனுப்பினான். பிம்பத்தை பார்த்து “நிலா நிலா ஓடிவா ” என்றான்.

மேலே உள்ள நிலா உண்மை. சத்தியம். அது கீழே வராது. ஆனால் நிலவை ஒரு சிறிய இடத்தில் பிம்பமாகக் காட்டலாம். அது உண்மை அல்ல. சாயா. ஆனாலும் நிலவின் அதே ரூபத்தை , தன்மையை அந்த பிம்பம் கொண்டிருக்கிறது. அருகேயும் இருக்கிறது.

சத்தியம் அல்லது கடவுள் அல்லது இயற்கை மிக உயரத்தில் எட்டாத தூரத்தில் இருக்கிறது. தங்கப் பாத்திரம் போன்ற கோவிலும், கோவிலுள்ள அர்ச்சா விக்ரஹங்களும் அந்த நிலவின் தன்மையை, சாயலை நமக்கு அண்மையில் கொண்டு வந்து காட்டுகின்றன.

நிலவின் குளுமையை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் முகத்தில் காணலாம். கருணை நிலவு பொழியும் வதனத்தில் கபாலியை காணலாம். எல்லா வழிபாட்டுத் தலங்களும் , எல்லா கடவுள் விக்ரஹங்களும் கடவுளின் சாயா.

குரு என்கிற தாதி காட்ட, குழந்தை மனதுடையோர் கண்டு குதூகலிப்பர். அந்த சாயலை மனம் தொடர்ந்தால் சத்தியம் புரியும்.