என் உயிர் ஆடி உலர்ந்தேயிருக்க
இவளை வேண்டி இருகை ஏந்தினேன்
தன் கதை சொன்னாள் தரணியிள் நல்லாள்
தன் கதை சொன்னாள் முண்டகக்கண்ணி
அவள் கதை இங்கே கவிதையில் வைத்தேன்
உரியவர் படிக்க உணர்ந்தவர் சிறக்க
உண்மை சொல்வோர் உள்ளுள் நிறைய
என்னை மீட்டாள் இக்கதை பரப்ப
எனதொரு கடமை இனிதே முடிந்தது
பாலகுமாரன் அனுபவம் பதிந்தது
என்னை வளர்த்தாள் நன்றிக்கடனிது
பலபேர் அவளை வாழ்த்தும் வழியிது

வாழிய மயிலை வாழிய மயிலை
முண்டகக்கண்ணி வாழிய வாழியவே
வாழிய மயிலை வாழிய மயிலை
கபாலி வாழ்க வாழ்க மயிலை
தொண்டை தேசம் வாழிய வாழிய
வாழிய மயிலை வாழிய மயிலை
சோழப் பெருங்கோ இராஜேந்திரன் வாழ்க
பண்டிதச் சோழர் பலநாள் வாழ்க
மயிலை நம்பி நெடுநாள் வாழ்க
கேட்டோர் எல்லாம் போவீர் உடனே
படித்தோர் எல்லாம் பணிவீர் உடனே
காண்போர் எல்லாம் களிப்பீர் நிச்சயம்
கைதொட்டணைப்பாள் உணர்வீர் நிச்சயம்

என்னை வளர்த்த தாயே வணக்கம்
என்னுள் நின்று உன்னை உணர்த்திய
உன் வரலாறு இங்கே கவிதையில்
என் தமிழ் காப்பாய் இளகிய மனதாய்
எம் குலம் காப்பாய் உரமழியாது

இன்னும் என்ன…என்னைக் கேளு
உடனடி செய்வேன் உவகை பொங்க
உனக்குச் செய்ய கொடுத்து வைக்கணும்
அன்பே அமுதே அருள்பெருங்கலையே
பண்பே எங்கள் வீரப் பசுங்கொடி
இதனைப் படிப்போர் மனமுள் புகுவாய்
உள்ளே சிலிர்ப்பை உடனே தருவாய்

மஞ்சள் வாசம் பாலுடன் கலக்க
உந்தன் இருப்பு உடன் தெரிவிப்பாய்
உனை நாடி தொழுதுறச் செய்வாய்
பெண்ணே உலகம் என்பது தெரிந்தால்
இம்மண் ஓங்கும் உயர்ந்தொரு விதமாய்
இது என் விருப்பம் அருள்வாய் தமிழே

 

-முற்றும்