” டாய்!”

பின்னால் குரல் கேட்டது. நான் விட்டமின் மாத்திரைகளும் காட்லிவர் ஆயிலும் வாங்கிக் கொண்டிருந்தேன். மீதிச் சில்லறைக்கு காத்துக் கொண்டிருந்தேன். எதிரே கடை ஆள் எனக்கென ரூபாய் நோட்டு எண்ணுவதை பிசகாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“டாய்!”

மறுபடி குரல் கேட்டது. அதுவரை காலோடு ஒட்டிக்கொண்டிருந்த ரமணன் என் எட்டு வயதுப் பையன் சட்டென்று என்னைவிட்டு குரல் வந்த இடத்தை வேடிக்கை பார்த்தான். பத்தே வினாடிகளில் என்னை உலுக்கித் திரும்ப வைத்தான்.

” அப்பா அங்கே பாரேன். ”

” டாய் எவனாச்சும் கிட்ட வந்தீங்க… வெட்டிப் போட்ருவேன் ஆம்மா… ”

வேட்டி துவள நடை சுழல யாரோ குடிகாரன் காற்றோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தான். கலைந்த தலையும் சிதறிய பார்வையுமாய்த் தள்ளாடிக் கொண்டிருந்தான்.

” நான் சீமான்டா. கிட்ட நெருங்கின… ஒரே குத்து… ”

” ரமணா நகரக் கூடாது. அவன் குடிச்சிருக்கான். கிட்டப் போகாதே. பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, ”

ஒரே நேரம் புத்தி மூன்று நான்கு காரியங்களில் ஈடுபட என் லேசான பதற்றம் எனக்கே எரிச்சலாய்க் கிளம்பி, ” ரமணா, தெருவுல இறங்கினே சுள்ளுன்னு கோவிச்சுப்பேன்.”

குரல் எழும்ப வைத்தது.

” அவன், ஏம்ப்பா அப்படி ஆடறான்? ”

” கொஞ்சம் இரு ரமணா.”

” நான் எறங்கலப்பா. இங்கியே இருக்கேன்.”

” தட்ஸ் குட். அறுபது, எழுபது, எண்பது… எண்பத்தி நாலு.. பத்து பைசா, தாங்க்யூ… ”

அந்த அரை நிமிட எரிச்சலைப் பிள்ளை மீது கோபமாய்க் காட்டியது இப்போது தவறாகப் பட்டது.

வித்யாசமான எதையும் சட்டென்று உற்றுக் கவனிக்கும் வழக்கம் எந்தக் குழந்தைக்குமே உண்டு. அது என்ன? இது என்ன? என்ற கேள்விகள் இயல்பு. பிள்ளையின் கேள்விக்குப் பதில் சொல்லாத தகப்பன் பொறுப்பில்லாதவன் என்பது என் கணிப்பு.

” குடிச்சா தலை கிர்ருன்னு சுத்தும் ரமணா. மூளையைப் பாதிக்கும். என்ன பேசுறோம் என்ன செய்யறோம்னு தெரியாது குடிச்சவங்களுக்கு.”

” ரொம்ப சுத்துமா தலை? ”

” ம்…சுத்தும்… ”

” விழுந்துடமாட்டான்?”

” கொஞ்ச நேரம் கழிச்சு விழுந்துடுவான். எங்கயாவது ரோட்டோரத்தில் கெடப்பான். ”

சாராயக்கடை திறந்த பிறகு, தெருவுக்கு ஒரு சாராயக்கடை வந்த பிறகு குடித்து விட்டு ஆடுவதும் சண்டையிடுவதும் கூக்குரலும் தெருவோரம் துவண்டு கிடப்பதும் சாதாரணமான காட்சிகளாயின.

கௌதமரின் தகப்பன் போல் கெட்ட விஷயங்களைத் தெரியாமல் பிள்ளையை வளர்க்க எனக்கு வசதியில்லை. அப்படி வளர்ந்த பிள்ளை இங்கே போராடி ஜெயித்து வாகை சூடுமா என்று தெரியவில்லை. நல்லவையோடு கெட்டவைப் பற்றியும் ஒருவருக்கு ஞானம் வேண்டும் என்பது என் கொள்கை.

” சர்க்கரை அண்ட் டால்டா. ”

” எவ்ளோ வாங்கணும்? ”

” சர்க்கரை அரை கிலோ, டால்டா ஒரு கிலோ.”

எனக்கு இவை ஞாபகம் இருந்தாலும் பிள்ளையையும் ஈடுபடுத்த ஆசை. அவன் எனக்கு பதில் சொன்னாலும் குடிகாரன் மீதிருந்த பார்வையை அகற்றவில்லை.

” அப்பா, அப்படி அவன் கீழே விழுந்துட்டா எப்படி வீட்டுக்குப் போவான்? ”

” போதை தெளிஞ்சதும் எழுந்துருவான்.”

” போதை எப்போ தெளியும். ”

” நாலு மணி நேரம் கழிச்சு மெள்ள மெள்ளத் தெளியும். ”

” அப்பா அந்த சாராயக்கடையைப் போய் எட்டிப் பார்க்கலாமா?”

” எதுக்கு ரமணா?”

” எப்படி குடிக்கிறாங்கன்னு பார்க்கலாம். ”

” வேண்டாம் ரமணா. ”

” அப்பா… ப்ளீஸ்ப்பா. ஒரு தடவைப்பா. ஒரே ஒரு தடவை.”

” டால்டா வாங்குறதுக்கு அது தாண்டித் தானப்பா போகணும். ”

போனோம். நின்று தெரு நடுவே தொலைவாய் நின்று சாராயக்கடை வியாபாரம் பார்த்தோம். உயரமான பிளாஸ்டிக் ஜாடிகள். கண்ணாடி டம்ளர்கள். சட்டையில்லாத மனிதர்கள், சுவாமி படங்கள் எல்லாம் தெரிந்தன.

டால்டா, சர்க்கரை வாங்கினோம். திரும்பினோம்.

” அம்மா நானும் அப்பாவும் ஒரு சாராயக்கடை பார்த்தோம்!”

” ரொம்ப சந்தோஷம். படபடப்பு கன்னத்துல போட்டுக்க வேண்டியதுதானே…”

” ஒத்தன் குடிச்சிட்டு டாய்னு ஆடினாம்மா, வேஷ்டி அவுந்துத் தொங்கறது. அதுகூட தெரியலை அவனுக்கு! ”

” போறும். படிப்புல ஒண்ணும் காணோம். கால் பரீட்சைல இரண்டு கணக்கு தப்பு. தொண்ணூறு மார்க் வாங்கிண்டு வந்து நிக்கறே. இன்னும் மூணு ஸ்தான பெருக்கல் தகராறு. அப்பாவும், பிள்ளையும் சாராயக்கடை பார்த்துட்டு வாங்கோ. இப்படியே போனா கணக்குல ஜீரோதான் வாங்கப்போற. விளக்கேத்தின உடனே படிக்க உக்காரணும்னு தெரிய வேண்டாம்? படிப்பு ஒழுங்கா இல்லே… கதி மோட்சமே இல்லை ரமணா. சரி டேபிள்ஸ் புக் எங்கே? எடு சீக்கிரம். படிச்சு வை. குக்கர் வச்சுட்டுப் பத்து நிமிஷத்துல வந்து கேட்பேன். ம்ம்…”

பிள்ளைக்கு உற்சாகம் வடிந்து போய் விட்டது.

” நீ ஒரு லூஸ்டா. அவகிட்ட போய் இதெல்லாம் சொல்றியே. எனக்கும் சேத்து டோஸ் விழறது பார்.”

சமாதானமாய் இரண்டு வார்த்தை சொல்ல என் பிள்ளைக்கு மறுபடி உற்சாகம் ரகஸ்யமாய்க் கிளம்பிற்று.

” நீ குடிப்பியாப்பா?”

” ச்சேச்ச… அது தப்பு ரமணா.”

” துளிக்கூட குடிச்சதில்லை?”

” ம் துளியூண்டு ஒரு தடவை குடிச்சேன். தொண்டை எரிஞ்சு… தூன்னு துப்பிட்டேன். ரொம்ப போர்டா அது…”

” விஸ்கி குடிச்சாக் கூட ஆடுவாங்களா? ”

” விஸ்கி? உனக்கெப்டீடா தெரியும்? ”

” ஒரு சினிமாவில் விஸ்கி குடிச்சிட்டு எல்லாம் ஆடறாங்களே. மேனால பார்த்தமே.. டபிள்யூ. ஹெச். ஐ.எஸ்.கே வொய்ன்னு பாட்டில்ல போட்டிருந்துதே… ”

” கண்ணா… இன்னிக்கு ஒங்கம்மா கிட்ட டின்னு கட்டிக்கப்போற நீ.”

” நான் மொள்ளதாம்ப்பா பேசறேன். ”

” வேணாம் போதும். ஸைலண்டா படிக்க உட்காரு. உம்ம் டேபிள்ஸ் புக் எடுத்தியா”

நான் நகர்ந்து குளிர்ப்பதன பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்தேன். பாட்டில் மூடியைத் திறந்து தாகம் தீர மடக் மடக்கென்று குடித்தேன்.

” அப்பா ஒன்னப் பார்த்தா விஸ்கி குடிக்கிறவனாட்டம் இருக்கு. ”

” எப்படி இருக்கு? ”

” இல்லல்ல. விஸ்கி வேற கலர். ஒன்னப் பாத்தா வெள்ளைக் கலர் சாராயம் குடிக்கிறவன் மாதிரி இருக்கு! ” பல் தெரியப் பிள்ளை சிரித்தான்.

எனக்கும் சிரிப்பு வந்தது.

திரும்பிச் சமையலறையைப் பார்த்து விட்டு அவனை ‘ டாய்’ என்று தள்ளாடினேன். உதடுகளைக் கோணி விழிகளை விசித்திரமாக்கி மிரட்டினேன்.

” டாய்… கணக்கு ஒழுங்காப் போடல கொன்னுடுவேன்” என்று நடித்தேன். “நான் குடிச்சிருக்கேன். தெரியுமா? கணக்குல நூத்துக்கு நூறு வாங்கல. ஒரே குத்து. ”

பிள்ளை வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தது. அம்மா இடித்துக் காட்டிய வேதனையை மறந்தது.

” குடிகாரன் மாதிரியே இருக்கப்பா.”

இது ஒரு ஸ்லிப். சந்தோஷத்தில் வாஞ்சையில் செய்த தவறு. இதை நான் செய்திருக்கக் கூடாது.

ஒரு பத்து நாள் கழித்து ஆபிஸ் நேரத்தில் பிற்பகல் வேளையில் ஒரு போன் கால் வந்தது. பெண் குரல் பேசிற்று.

” நான் ராணாவின் டீச்சர் மிஸஸ் மேரி மாத்யூஸ். உங்களுக்கு அலுவல் எப்போது முடிகிறது? இன்று மாலை நான்கு மணியளவில் உங்களை நான் பள்ளிக்கூடத்தில் சந்திக்க விரும்புகிறேன். ராணாவை பற்றி சற்றுப் பேச வேண்டும். ”

” ரமணாவை பற்றி… ரமணாவுக்கு என்ன…?”

” பதற வேண்டாம். ரமணாவுக்கு உடம்புக்கு எதுவுமில்லை. என்னருகில் நல்லபடி இருக்கிறான். அவனைப் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று மாலை நான்கு மணிக்கு வருகிறீர்கள் அல்லவா?”

சம்மதித்தேன். சற்றுக் குழம்பினேன். பர்மிஷன் போட்டு விட்டு ஸ்கூட்டரில் பறந்தேன்.

கைகூப்பிய முப்பதாவது விநாடியில் அந்த டீச்சர் மேரி மாத்யூஸ் வெடிகுண்டு போட்டாற் போலக் கேள்வி கேட்டாள்.

” நீங்கள் மது அருந்துவீர்களா? ”

” நோ, நெவர். ”

” நான் ரமணாவின் டீச்சர். என்னிடம் பொய் சொல்ல வேண்டாம். உண்மை பேசுவது சகலருக்கும் நல்லது. ”

” இல்லை மேடம். எனக்குப் பழக்கமே இல்லாத விஷயம் அது. ”

” பின் உங்கள் பிள்ளை ஏன் அப்படி நடந்து கொள்கிறான்?”

” எப்படி மேடம்? ”

” இன்று பிற்பகல் மாரல் வகுப்பு. ஆளுக்கு இரண்டு நிமிடம் ஏதாவது நடித்துக் காட்டச் சொன்னேன். பிற்பாடு நாடகம் போட உத்தேசம். நன்கு நடிப்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் ஒடிவந்து ராதை கிருஷ்ணர் நடனம் ஆடினார்கள். ஒரு பையனும் பெண்ணும் குறவன் குறத்தியாய்ப் பேசினார்கள். ஒரு பையன் கோல் ஊன்றிக் காந்தி மாதிரி நடந்தான். இன்னொருத்தன் கட்டபொம்மன் வசனம் பேசினான். இவன்… உங்கள் பிள்ளை என்ன செய்தான் தெரியுமா? சுள்சுள்ளென்று நான்கு அடிகள் அடித்து விட்டேன். நான் பிள்ளைகளை அடித்து கொடுமைப் படுத்துகிற டீச்சர் இல்லை. ஆனால் இன்று அவ்விதம் நேர்ந்துவிட்டது. என்ன செய்தான் தெரியுமா? சட்டைப் பொத்தான்களைக் கழற்றிக் கொண்டு வாட்டர் பாட்டிலை ஏந்திய படி தலையைக் கலைத்து விட்டு கொண்டு உதட்டை கோணிக் கொண்டு என்னிடம் வந்து “நான் குடிச்சிருக்கேன் தெரியுமா? கொன்னுடுவேன்” என்றான். சுரீர் சுரீரென்று ஸ்கேலால் நாலு அடி. நான் அடிக்கிற டீச்சர் இல்ல. ஆனால் என்னால் தாங்கவே முடியவில்லை.

” அந்த டீச்சர் நடுத்தர வயதினள். சற்றுக் குள்ளமாய் பூசின உடம்பாய் கண்ணில் ஒரு சோகம் மின்ன இருந்தாள். கடைசி வரி பேசும் போது குரல் கம்மி நடுங்கியது. ” இதைச் சொல்லத்தான் உங்களை… ” டீச்சரால் பேச முடியவில்லை.

நான் மன்னிப்பு கேட்டேன். உறுதியாய்ப் பலமுறை என்னைப் பற்றிச் சொன்னேன். பிள்ளையை அடித்தது பற்றிக் கவலை இல்லை. அவனை இன்னும் சீராய் வளர்க்க உறுதி அளித்தேன்.

” நீங்களும் மறுபடி ராணாவை அடித்து விட வேண்டாம். அவனுக்கு நல்லவை போதிக்கப்பட வேண்டும் என்கிற அக்கறையில் உங்களை அழைத்துப் பேசினேன். தவறு இல்லை என்று நினைக்கிறேன். ”

” தவறே இல்லை மேடம். ” நான் மறுபடி பிள்ளைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ரமணாவை ஸ்கூட்டரில் வைத்து வெளியேறினேன். மெல்ல கடற்கரை சாலை வழியாக வண்டி ஒட்டி அங்கு உள்ள ஓட்டலில் உட்கார வைத்துக் குளிர்பானத்துக்கு உத்தரவிட்டேன். எப்படி பேச்சை ஆரம்பிப்பது?

” டீச்சர் அடிச்சது வலிக்கறதா ரமணா? ”

கேட்டவுடனேயே பிள்ளை விசுமிபிற்று. விசும்பல் கதறலாயிற்று. என் நெஞ்சில் ரத்தம் வழிந்தது.

குழந்தைகள் அழக்கூடாது. நிச்சயம் இவ்விதம் குற்ற உணர்வோடு கதறக்கூடாது. அடிவாங்கும் பிள்ளையே ஆரோக்கியமாய் வளரும் என்கிற அசிங்கம் என் தலைமுறையோடு முடிய வேண்டும்.

” ஏன் அழற… ரமணா… வலிக்கிறதா? எங்க அடிச்சா காமி…? ”

” வலிக்கலைப்பா… இப்ப வலிக்கலை… ”

” அப்போ வலிச்சுதாடா கண்ணா. எங்க… எங்க காமி? ”

” அப்போக் கூட ஜாஸ்தி வலிக்கலை. பொறுத்துண்டேன். ”

” குட் வெரிகுட். யூ ஆர் ரியலி கிரேட். இப்ப ஏன் அழறே ரமணா…? அப்பாவும் கோச்சுப்பேன்னு பயந்துட்டியா?”

” அதுக்கில்லைப்பா. எங்க டீச்சரும் அழுதாங்க. என்னை அடிச்சிட்டு அவங்களும் அழுதாங்கப்பா. அதான்… அதான்… ” என் பிள்ளை விக்கி விக்கி அழுதான்.

புரியவில்லை. ” ஏன் ரமணா டீச்சர் அழுதாங்க? ”

” அவங்க வீட்ல அவங்க வீட்டு மாமா தினமும் இப்படி குடிச்சிட்டு வந்து ஆடுவாங்களாம். சாமானெல்லாம் போட்டு ஒடப்பாங்களாம். எல்லாம் மறந்துட்டுப் பள்ளிக்கூடம் வரேன். இங்கயும் ஒருத்தன் ஆடறாண்டின்னு இன்னொரு டீச்சர்கிட்ட சொல்லி அழுதாங்கப்பா.”

எனக்கு டீச்சரின் கோபம் புரிந்தது.

” எங்க டீச்சர் பாவம்ப்பா. ”

என் பிள்ளையின் அழுகையும் புரிந்தது.

” அவங்க அடிச்சது அவ்வளவா வலிக்கலப்பா! பொறுத்துண்டேன். ஆனா அவங்க அழுதப்பதான் நானும் அழுதுட்டேன். அப்புறம்தான் ஒனக்கு போன் பண்ணினாங்க. எங்க டீச்சர் பாவம் இல்லைப்பா? ”

குடித்து விட்டு வீட்டில் சாமானை உடைக்கிற புருஷன் ஒரு அவமானம். சிறுமை. நிம்மதியின்மை. தான் படிப்பு சொல்லிக் கொடுக்கிற எட்டு வயதுப் பையனும் இவ்விதமே ஆடினாலும் அது நடிப்பென்றாலும் கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதிர்காலமே இருட்டாக விடுமோ என்கிற பயத்தைத் தவிர்க்க முடியவில்லை.

எனக்கு உங்கள் வேதனை புரிகிறது மிஸஸ் மேரி மாத்யூஸ்.

நான் என் பிள்ளையை நெருங்கி அணைத்து கொண்டேன். விம்முகின்ற நெஞ்சைத் தடவிக் கொடுத்தேன்.

மிஸஸ் மேரி மாத்யூஸ்! உங்களுக்காக நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் நல வாழ்வுக்காக நானும் என் பிள்ளையும் பிரார்த்தனை செய்வோம். உங்கள் சங்கடம் தீர மனமுருகி வேண்டுவோம். என் பள்ளிப் பிராயப் பாட்டு மனசுக்குள் ஒடிற்று. கடலைகள் போல ஆர்ப்பரித்து.

தேவபிதா எந்தன் மேய்பனல்லவோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆயுள் முழுவதும் என் பாத்திரம்
அவர் மேல் பனிநீர் அருளுகின்றார்
தேவபிதா…

வேறு என்ன செய்வது? ஊர் முழுவதும் விஷம் விதைத்து விட்டு எதை அறுப்பது? எதை உண்பது? குழந்தைகள் எதிர்காலம் என்று யோசிக்கும் பொழுது குலை நடுங்கப் பிராத்திப்பது அல்லாமல் ஒரு தனி மனிதன் யாரை நோவது? எங்கோ வெறித்துப் கொண்டிருந்த என்னை என் பிள்ளை தொட்டுத் திருப்பினான்.