எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் மகாபாரதம் – பாகம் 2 புத்தகத்தின் அட்டைப்படம் குறித்து அவரது மகன் திரு. சூர்யா பாலகுமாரன்

மகாபாரதம் நூல் வெளியீட்டு விழாவின் மற்றொரு நாயகன். ஓவியர் கேஷவ். மிகப்பெரிய கலைஞர். அப்பாவின் அதீத மரியாதைக்குறியவர். காரணம், இவருக்கு ஓவியம் தொழில் அல்ல தவம். பலமுறை இவரின் ஓவியங்களை பற்று முகநூலில் அப்பா குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இல்லத்தில் இருக்கும் ஓவியங்களை தடவித் தடவி தலையில் ஒற்றிக்கொண்டிருக்கிறார். கிருஷ்ணாவதாரம், மகாபாரதம் முதல் பாகத்திற்கும் இவரே ஓவியம். வீடு முழுவதும் விதவிதமான கிருஷ்ணர் படம் நிறைந்திருக்கும். அத்தனையிலும் ப்ரேமை வழிந்தோடும். நேசம் மிகுந்த ஒரு குடும்பம். தவிர்க்கமுடியாத காரணத்தால் அவர் சற்று நேரத்திலேயே விழாவிலிருந்து கிளம்ப நேரிட்டது. மேடையிலே செய்யவிருந்த மரியாதையை இன்று அவர் இல்லத்திற்கு சென்று நானும், அயானும், அம்மாவும், டாக்டர். மகேஷ்பதியும் செய்து மகிழ்வித்தோம்.

இரண்டாம் பாகம் முடிந்தவுடன் அப்பா அவரிடம், முடிச்சுட்டேன் சார். அட்டை படத்துக்கு மனசுல ஒன்னு இருக்கு. நேர்ல வந்து சொல்றேன் என்று கூறினார். அடுத்த சில நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தது. அவரின் மனதில் இருந்ததும், எது அட்டைப்படமாக வரவேண்டும் என்ற எண்ணமும் அவர் மனதோடே கறைந்து போனது.

நானும், அம்மாவும், பாக்கியலக்‌ஷ்மியும் திரு. கேஷவின் இல்லதிற்கு நேரில் சென்று சந்தித்தோம். உங்க கிட்ட எதாச்சும் சொன்னாளா சார் என்று வினவினேன்.

இல்ல, எழுதி முடிச்சுட்டேன், நன்னா வந்துருக்கு, நேர்ல வந்து என்ன வேணும், எப்படி இருக்கனும்னு சொல்றேன்னு சொன்னார். அதுக்குள்ள இப்படி ஆயிடுத்து. சொல்லுங்கோ என்ன பண்ணலாம் என்றார். மூவரும் விழி பிதுங்கி உட்கார்ந்திருந்தோம்.

அவரிடம் ஒரு ப்ரதியை கொடுத்து, நீங்க ஒருதடவ படிச்சுட்டு எது உங்களுக்கு தோன்றதோ அதையே போட்டுடலாம் சார் என்று கூறினேன். சிரமம் என்றாலும் உடனே ஒப்புக்கொண்டார்.

பாக்கியலக்‌ஷ்மி இரண்டாம் பாகத்தின் தொகுதிகளை அவருக்கு விளக்கினார், ஜெயராமன் ரகுநாதன் manuscriptடை முழுதாக படித்து சில குறிப்புகளை கூறினார், நானும் பாதிக் கடல் தாண்டினேன், இருந்தும் எது வேண்டும் என்ற தெளிவு கிடைக்கவில்லை. தேதி நெருங்கிக்கொண்டிருக்க, திருமகள் நிலையம் அண்ணாச்சி தினமும் ஒரு ரிமைண்டர் தரத்துவங்கினார்.

என்ன செய்வது என்று தெரியாமல் அப்பாவின் அறைக்குச் சென்று நான் எப்பொழுதும் உட்காரும் இடத்தில் மெதுவாக அமர்ந்தேன். அமைதியான அறையில் மிகச் சகஜமான குரலில் என்ன பண்றதுன்னு தெரியலப்பா என்றேன். உன் மனசுல என்ன இருந்தது? கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா, என்று கேட்டுக்கொண்டேன்.

எழுந்து வெளியே வர பாக்கியலக்‌ஷ்மியிடம் மீண்டும் பேச நேர்ந்தது. அவர் சொன்னதையே மீண்டும் விளக்க ஒரு விஷயம் மட்டும் சட்டென்று புதிதாக ஒட்டிக்கொண்டது. அது மனதில் ஒரு சின்ன ஒளியை ஏற்படுத்தியது.

என்ன சொன்னீங்க பாக்கி?

மார்கண்டேயர்..

அது இல்ல பாக்கி, அதுக்கு முன்னாடி ஒன்னு சொன்னீங்களே..

கிருஷ்ணர் கௌரவர் சபைக்கு தூது போறார்… எது தர்மம்னு சொல்றார்..போர் வேண்டாம்னு…

ப்பா…செம்ம மாஸா இருக்கே.. இது தான் பாக்கி நமக்கு வேணும். சற்று ஓட்டமாக சென்று அம்மாவிடம் எடுத்துக் கூறி அனுமதி வாங்கினேன். ஐந்தாவது நிமிடம் ஓவியர் கேஷவை தொடர்பு கொண்டேன்.

சரி, போட்டுத்தறேன் என்று ஒற்றைவரியில் ஒப்புக்கொண்டு போன் துண்டிக்கப்பட்டது.

மூன்று நாட்கள் கழித்து மறுபடியும் அழைத்து, சார் பப்ளிகேஷன்ஸ் கொஞ்சம் ப்ரெஷர் போடரா…கொஞ்சம் சீக்கிரம் கிடைக்குமா என்றேன்.

நினைச்சதவிட நுணுக்கங்கள் அதிகமா இருக்கு கொஞ்சம் டைம் ஆகும். நானே அனுப்பறேன் என்று துண்டித்தார்.

மறுநாள் காலை எனது மின் அஞ்சலில் கிருஷ்ணர் கௌரவர் சபையில் விஸ்வரூப தரிசனம் எடுத்து நின்று கொண்டிருந்தார். கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. நெஞ்சில் ஒரு நிறைவு ஏற்பட்டது, உள்ளே இருக்கும் நுணுக்கங்களை தேடித்தேடி ரசித்தது. இது தான் உன் ஆசையா? இதுதான் உன் மனதில் இருந்ததா? இது தான் நீ அவரிடம் விவரித்து சொல்லவேண்டும் என்று நினைத்தாயா? இது சரியா ?

சட்டென்று அதை ஒரு கலர் பிரிண்ட் எடுத்து, அவரின் அறைக்கு சென்று வைத்து விட்டு அவரின் புகைப்படத்தை உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். ஃபேன் காற்றில் ஓவியம் மெல்ல ஆடியது, பதில் சிந்தனைக்குரலாக ஒலித்தது.