ஐந்து வீடுகள் கூட கொடுக்க மாட்டேன். ஐந்து ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்பதால் சண்டையாம். இது யார் நிலம். யாருக்குத் தருவது. என் சொத்து என்று நிலத்தை எப்படிச் சொல்வது. கோடானு கோடி ஜனங்கள் வாழ்ந்து மாய்ந்த இடத்தை என் இடம் என்று எப்படிப் பிரிப்பது. பிரித்து என்ன செய்ய.

என்ன பேதமை இது. என்ன மனிதர்கள் இவர்கள். பிறகு என் காற்று உன் காற்று என்று பிரிப்பார்களோ. ஓடுகிற ஆற்றில் என் குமிழி உன் குமிழி என்று பிரிப்பார்களோ, அட, முட்டாள் ஜனங்களே.

வியந்தான். வியந்து வியந்து நடந்தான். வெகு நாட்கள் நடந்தான்.

பசித்தது. மெல்ல சுற்று முற்றும் பார்த்தான். சலசலப்பு கேட்டது.

மெல்ல ஒரு அந்நிய வாசனை வந்தது. புதர்களுக்கு நடுவே ஒரு மான் தலைதூக்கிப் பார்த்தது.
வழக்கம் போல் ஆள்காட்டி விரல் நடுவிரல் நடுவே சரம் தொடுத்தான்.

“உயிர்களை துடிக்க விடாதே. ஒரே வீச்சில் கொல். உண்ண மட்டுமே வேட்டையாடு.”

கிருஷ்ண போதனை நினைவுக்கு வந்தது.

“மானே, உன்னை உண்ணவே கொல்கிறேன். மன்னிப்பாயாக”

சரம் வில் விட்டு சீறிற்று. “ஆ…” என்று மனிதக் குரல் கேட்டது. பதறி குரல் வந்த இடம் ஓடினான்.
கிருஷ்ணன், நீல மேக சியாமள வண்ணன் கால் கட்டை விரலில் அம்பு தைத்து வெளியே வந்திருந்தது.

“ஐயா!” கதறினான்.

“வா ஏகலைவா”

“ஐயா நான் மானென்று..உங்கள் பாதத்தை மானென்று நினைத்து…” தேம்பினான்.

“வேடனே, என் கதை உன் கையால் முடிந்தது. மனித உடம்பு எடுத்த நான் மரணமடையத்தான் வேண்டும். வருந்த வேண்டாம்”

“பொறாமையும் சூழ்ச்சியும் ஆத்திரமும் கொண்ட மனிதர்கள் கையால் மரணமடைவதை விட, உன் கையால் மரணமடைய விரும்பினேன். அன்பும், கருணையும் ஆசிரிய பக்தியும் கொண்ட நல்ல மனிதர் கையால் எனக்கு மரணம் வந்தது. உமது விரல்கள் பலமுள்ளவை. உமது குறி இலக்கு தப்பவேயில்லை. எனக்கென்று ஒரு அம்பு அன்றே உம் தூளியில் வைத்து விட்டேன்.”

கிருஷ்ணன் சிரித்தான்.

“உம்மைப் போல் நான் நல்லவனில்லை. வேடனே யார் என்ன என்னைப் பணிந்து கேட்டாலும் கொடுத்து உதவிய நான், நீர் கட்டை விரல் கேட்டபோது மறுத்தேனே”

“அதன்பலன் இது…மெல்ல அம்பை நீக்கி எம்மை விடுதலை செய்யும்.”

“ஐயா! இந்த பாபத்துக்கு நான்…” அவன் தடுமாறினான்.

“இல்லை வேடனே. உண்ணவே குறி வைத்தீர். இது பாபமல்ல. மான் என்று தெரிந்த பிறகு சரம் விட்டீர். இது குற்றமல்ல. உம்மைப் போல் வெள்ளை மனது இங்கே உள்ள வரை மழை பொழியும். புல் துளிர்க்கும். காடு செழிக்கும். நாடு வளரும். எம்மை விடுதலை செய்யும். அம்பை நீக்கி விட்டுத் திரும்பிப் பாராமல் வீட்டிற்குப் போகவும்”

அவன் கைகள் நடுங்க அம்பு நீக்கினான்.

வில்லையும் அம்பையும் தூக்கி எறிந்து விட்டு வேக வேகமாய் அந்தக் காட்டுக்குள் நடந்தான்.

திடீரென இடி இடித்தது.

மின்னல் மின்னியது.

மேகம் திரண்டது.

பெரிய மழை…அடர்த்தியான மழை தரை இறங்கியது.

அந்த யுத்த பூமியின் சூடு குறைக்க, விடாது தொடர்ந்து பொழிந்தது. அவன் இலக்கின்றி, கிருஷ்ணா…கிருஷ்ணா என்று அரற்றியவாறு எங்கோ நடந்து கொண்டிருந்தான்.

-முற்றும்