“உமக்கு எதற்கு கட்டை விரல் வேடரே”

“வில் வித்தை மறுபடி என்னிடம் வரவேண்டும். எல்லா வித அஸ்திர பயிற்சியும் என்னிடம் வரவேண்டும்.”

“ஏன்?”

“அதிகம் ஓடியாட வேண்டும். நின்ற இடத்தில் அம்பு தொடுத்து மான் பிடிக்கலாம். ஒரே அம்பில் பல பட்சிகளை வீழ்த்தலாம். இதோ இன்று மயிலுக்கு அலைவது போல் அலையாது மயில் பிடித்து வா என்று கட்டளையிட்டு வீட்டிலிருந்தே சரம் தொடுத்து மயில் கொண்டு வரச் செய்யலாம். என் குலமும் குடும்பமும் அதிகம் அலையாமல் உண்ணலாம்.”

அவர் சிரித்தார்.

“உமக்கு அஸ்திரம் வேண்டாம். தோழரே, உமது ஒரு அம்பால் ஊரிலுள்ள பட்சிகளை வளைத்து விட்டால் பூமியில் பட்சிகளே இல்லாது போகும்.”

“நடுவிரலும் ஆள்காட்டி விரலும் அதிகம் வலிக்கின்றன ஐயா. அதனால்தான் பலமுள்ள கட்டை விரல் கேட்கிறேன்” நீட்டிக் காட்டினான்.

“அவைகளுக்கு பலம் நான் தருகிறேன்”

நீட்டிய இரண்டு விரல்களையும் அழுந்தப் பற்றினார். அவன் உடல் நடுங்கிற்று. புதிய சக்தி தேகமெங்கும் பரவிற்று. வலி போன இடம் தெரியவில்லை.

விரல்கள் விடுவிக்கப்பட்டன. “உதறு” என்று கட்டளை வந்தது. உதறினான்.

புதிய வலிவோடு விரல்கள் இருப்பதை உணர முடிந்தது.

“மிக்க நன்றி ஐயா” வணங்கினான்.

“எந்த உயிரையும் அதிகம் துடிக்க விடாதீர்கள் வேடரே. ஒரே வீச்சில் கொன்று விடுங்கள். உண்ண மட்டுமே வேட்டையாடுங்கள்”

“உத்தரவு பெருமானே”

“அன்பும் கருணையும் கொண்ட உங்களுக்கு அஸ்திரங்கள் தேவையில்லை. வேடரே, வருந்த வேண்டாம். துரோணரின் செய்கை குறித்து மனதால் கூட கேள்வி வேண்டாம். அவர் உமக்கு நல்லதே செய்தார். ஒரு நாள் இதை நீங்களே உணர்வீர்கள். வருகிறேன்”

ஒரு நீல மேகம் போல் காடுகளினூடே போய் மறைந்தார்.

அவன் குதூகலத்துடன் தன் விரல்களைப் பார்த்தவாறு வீடு நோக்கிப் போனான்.

“கிருஷ்ணரும் மறுத்து விட்டாரா. இனி யாரைப் போய்க் கேட்பது. நீ ஒரு மக்கு. கட்டை விரல்தான் வேண்டும் என்று கேட்கக் கூடாதா. இது விதி. யாரை நோவது?” மனைவி விஷயம் கேட்டு சலித்துக் கொண்டாள்.

மேகம் இடி முழங்கிற்று. ஆம் என்றது.

-தொடரும்