வேறொரு காட்டில் ஒரு வேடுவப் பெண் அவனைக் காதலித்தாள். காட்டிலேயே கந்தர்வ மணம் புரிந்து கொண்டாள். அவன் கதை முழுக்கக் கேட்டாள். போய் கிருஷ்ணர் என்பவரைப் பார். உன் விரல் போன கதை சொல். மறுபடி உன் விரலை அவர் கொடுத்தாலும் கொடுக்கலாம்.

“எப்படி?”

“அந்த கிருஷ்ணர் கடவுள் என்கிறார்கள் யாதவர்கள். மழைக்கு மலையைக் குடையாகப் பிடித்தாராம். நச்சுப் பொய்கையில் இறங்கி நாகத்தைக் கொன்றாராம். பெரிய ராட்சஸன் முரட்டுக் காளையாய் வர. கொம்பு பிடித்து கழுத்து ஒடித்து கொன்றாராம். உனக்கு ஒரு கட்டை விரல் தருவதா கஷ்டம் அவருக்கு.”

“நீ வாயேன். எனக்கு அந்த கிருஷ்ணனைக் காட்டேன்”

“நான் மாட்டேன். எனக்கு பயம்”

“ஏன்?”

“அந்தக் கிருஷ்ணன் அழகான பெண்களை மயக்கி விடுவதாக்க் கேள்வி”

“நீ ஒன்றும் அப்படிப்பட்ட அழகியில்லையே. வாயேன்”

“நான் அழகில்லையா. உன் மனைவி உனக்கு அழகாய் தெரியவில்லையா. இந்த வார்த்தைக்காகவே நான் வரமாட்டேன்”

கோபித்துக் கொண்டாள். அவன் தனியே கிருஷ்ணனைத் தேடிப் புறப்பட்டான். துவாரகைக்கு வந்தான்.

கிருஷ்ணர் ஊரில் இல்லையாம். நேற்றுதான் புறப்பட்டாராம். எங்கோ மன்னர்களுக்குள் தகறாராம். சமாதானம் செய்யப் போயிருக்கிறாராம்.

“எப்போது வருவார்?”

“தெரியாது” என்றார்கள். இனி அவருக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும். பார்ப்பது கடினம் என்றார்கள்.

அவன் சோர்வோடு காடு திரும்பினான். மனைவிக்கு முயல்களும் மான்களும் நிறைய அடித்துக் கொடுத்து சமாதானப்படுத்தினான். பிள்ளைகள் பிறந்தன. அவர்களுக்கு வில்லெடுத்து வேட்டையாட கற்றுக் கொடுத்தான்.

“அப்பா, கட்டை விரலால் அம்பு தொடுத்தால் சுலபமாய் இருக்கிறதே”

“தவறு குழந்தாய். ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் அம்பு தொடுக்க பயன்படுத்த வேண்டும்”

“ஏன்?”

“என் குருவின் கட்டளை”

பிள்ளை வியப்புடன் அப்பாவைப் பார்த்த்து.

“நான் சொல்வதைக் கேள் குழந்தாய். பெரியவர்கள் எது சொன்னாலும் தயங்காது கேள்”

பிள்ளை அப்பாவைப் போல சரம் தொடுத்தது. ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உபயோகித்தது.

மனைவி மயில் தோகை விரும்பினாள் என்று ஒரு நாள் மலை மீது சுற்றிக் கொண்டிருக்கும் போது தொலைவே ஒரு ரதம் வந்தது. இரட்டை குதிரை பூட்டிஅரசர்கள் வருவார்களே அந்த மாதிரி தேர். நின்று யாரையோ தேடுவது மாதிரி தெரிந்தது.

காட்டில் யாரை தேடுகிறார்கள்….உதவி செய்யலாமா….இறங்கி ஓடினான்.

தேருக்கு அருகே போய் வணங்கினான். யானைபோல் கரிய நிறமாய், மானைப் போல பெரிய விழிகளாய், புலியைப் போல உறுதியான தோள்களாய், தாமரை போல சிவந்த இதழ்களாய் ஒரு மனிதர் தேர் விட்டு இறங்கினார்.

மிருதுவான உள்ளங்கைகள் தூக்கி வாழ்த்தினார். உற்று அவன் முகத்தையே பார்த்தார். சிரித்தார்.

அந்தச் சிரிப்பில் அவன் சொக்கிப் போனான்.

-தொடரும்