என்ன பைராகி ஒன்றும் புரியாமல் பேசுகிறார். பிள்ளைக்கறி வேண்டும் என்று கேட்டார். எவன் பிள்ளையை அறுக்க முடியும். தன் பிள்ளையை அறுத்து உணவாக வைத்திருக்கிறார். இப்பொழுது பிள்ளை என்று கேட்டால் அவர் என்ன செய்வார்.

சட்டென்று தெருவில் சதங்கை சத்தம் கேட்டது. அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். பரஞ்சோதியின் பிள்ளை மூன்று வயது முடிந்து நான்கு வயதிற்குள் நுழைந்திருக்கின்ற கனமான பிள்ளை. கால் சதங்கையோடும், இடுப்பு சங்கிலியோடும், கழுத்தில் தங்கச் சங்கிலியோடும், கைகளில் வளையங்களோடும், சுருள் முடியோடும், சிரிப்போடும் ஓடிவந்து அவனை உரசிச் சென்றது. அடேய் என்று கை நீட்ட, திரும்பி இரு என்று சொல்லிவிட்டு கதவு தள்ளியது. தாழிட்டப்பட்ட கதவு தானாக திறந்து கொண்டது.

திறந்த கதவின் வழியாக இரண்டு பேர் உணவிட உட்கார்ந்திருப்பது தெரிந்தது. பைராகியின் முகத்தை தூண் மறைத்தது. சேனாதிபதியின் முகத்தை பார்க்க நேரிட்டது. குழந்தை ஓடிவந்து பைராகியை விழுந்து வணங்கினான். அப்பாவின் மடியில் அமர்ந்து கொண்டான். அவன் வாய் விட்டு கதறினான். பிள்ளையை நோக்கி பரஞ்சோதியின் மனைவி ஓடிவருவதும், தாதி வந்து கன்னத்தில் அறைந்து கொண்டு அழுவதும் தெரிந்தது.

“பரஞ்சோதி” பைராகி வாய் விட்டு அழைத்தார்.

“எத்தனை பிள்ளைகளை கொன்றிருப்பாய். எத்தனை தந்தைகளை தவிக்கவிட்டிருப்பாய். கொன்ற அத்தனை மனிதருக்கும் தந்தை இருந்திருப்பாரே. கொன்ற அத்தனை மனிதருக்கும் பிள்ளைகளும் இருந்திருப்பார்களே. யுத்தம் என்ற பேரில் எத்தனைப் பேரை கொன்றிருப்பாய். அதுதான் உன் பிள்ளையை கொல்வாயா என்று பார்த்தேன். கொன்றாய். வென்றாய். வாழ்க பரஞ்சோதி. வாழ்க பரஞ்சோதி” உரத்த குரலில் கேட்டது.

இன்னமும் முகம் தெரியவில்லை. அவன் கை கூப்பினான். உடம்பு வியர்த்தது.கண்கள் சொறுகின. நாக்கு குழறியது. கையிலிருந்த பொன் மூட்டை தவறி காலின் கீழ் விழுந்தது. அவன் பரஞ்சோதியை பார்த்து கும்பிட்டபடி இருந்தான். பரஞ்சோதி அவனை பார்த்தது போல் இருந்தது. பைராகி பரஞ்சோதி ஓ..வென்று கத்தினார். பெரும் வெளிச்சம் பெரும் வெளிச்சம் அந்த வீட்டிற்குள் இருந்தது.வெளிச்சத்தில் சகலரும் காணாமல் போனார்கள். அந்த குழந்தை அங்கு உட்கார்ந்திருந்தது.

அந்த பைராகி எழுந்து வெளியே வந்தார். வாசற்படியில் நின்றார். நடையில் இறங்கினார். இடது பக்கம் திரும்பினார். அங்கு கை கூப்பி நிற்கின்ற சதாசிவத்தைப் பார்த்தார். சிரிப்பும் இல்லை. கோபமும் இல்லை. அமைதி. பரமசாந்தம். சகம். கம்பீரம். ஆதரவு. கருணை. ஆனால் லவலேசம்கூட இளிப்பு இல்லை. சகலமும் ஒரு உயர்ந்த நிலையில் அவன் மீது செலுத்தப்பட்டன. அன்பும், கருணையும் கண் பார்வையில் இருக்கும். ஆதரவும், சினேகமும் தொட்டுத் தடவுவதில் இருக்காது. நின்று திரும்புவதில் இருக்கும். ஒரு பார்வை, ஒரு திரும்பல், ஒரு அசைவு, ஒரு சிரிப்பும் இல்லாத சிரிப்பு. அதில் நட்பை தெரிவித்துவிட முடியும்.

அது பைராகியின் முகம் அல்ல. அது பரமேஸ்வரனின் முகம். அவனுக்குத் தெரிந்துவிட்டது. நீண்ட தாடியும், அடர்ந்த சிகையும், விலக்கி அந்த கண்களை, அந்த மூக்கை, உதடு விளிம்பை அவன் உள்வாங்கினான். மனதிற்குள் தேக்கினான். சிவோஹம் சிவோஹம் என்று அலறினான். தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அலறினான். ஊர் ஜனமும் அலறியது.

அந்த பைராகி எங்கு இறங்கினார், எப்படிப் போனார் என்றுத் புரியவில்லை. அந்த வீடு வெளிச்சமயமாகி இருந்தது. பரஞ்சோதியும், பரஞ்சோதியின் மனைவியும், பரஞ்சோதியின் பிள்ளையை கறி சமைத்த தாதியும் சிவனில் கலந்ததாக ஊர் சொல்லிற்று. அவன் பொற்கிழியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு அதனோடு சம்பந்தப்படாதவனாக மாமல்லைக்கு வந்து சேர்ந்தான்.