இந்த கலியுகத்தில் மக்களுடைய ஒழுக்கம் எப்படி இருக்கும்  என்று உபகேள்வியாக தருமபுத்திரர் கேட்க, மார்க்கண்டேயர் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு பேசத் துவங்கினார்.

நாரதரும், கிருஷ்ணரும், தருமரின் சகோதரர்களும், திரௌபதியும் சுற்றியிருந்த பிராமணர்களும் கவலையோடு அவர் பேச்சை கேட்கத் துவங்கினார்கள்.

கலியுகத்தின் முடிவில் சத்திரியர்கள்  கோழைகளாக இருப்பார்கள். பிராமணர்கள் பொய்யில் இருப்பார்கள். பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவார்கள். வேறு வழியில்லை என்ற பதிலையே எல்லோரும் சொல்வார்கள். அப்போது ஆண்களும், பெண்களும் குட்டையாக இருப்பார்கள். அவர்களுடைய  ஆயுள் மிகக் குறைவாக இருக்கும். ஐம்பது வருடங்களே மிகப் பெரிய ஆயுளாக இருக்கும் . ஜனங்கள் பதட்டமானவர்களாகவும், கொடூரமான வார்த்தைகளை குறைவின்றி பேசுபவர்களாகவும், அடுத்தவரை கெடுப்பவர்களாகவும் இருப்பார்கள். அப்படி அடுத்தவரை கெடுப்பதை சாமர்த்தியம் என்று சொல்வார்கள். எவராலும் எதனாலும் எந்த பிரயோஜனமும் இருக்காது. சத்தியம் தள்ளாடும் .

சரி, கலியுகம் துவங்கிவிட்டது என்று சொல்கிறீர்கள். இந்த கலியுகத்தினுடைய நிலைமை என்ன, விளைவு யாது என்ற கேள்விகளை பவ்யமாக மார்க்கண்டேயர் முன்பு வைத்தார்.

கலியுகத்தின் ஆரம்பத்திலேயே வித்தைகளில் சிரத்தை குறைந்து விடும். வித்தைகளில் கூர்மை குறைந்தால் அங்கு ஏமாற்று வேலைகள் அதிகரிக்கும். பொய்யான கர்வங்களும், செய்து முடித்துவிட்டேன் என்ற பொய்களும், இவர் மிகப் பெரியவர், வீரர் என்ற புகழுரையும், அதற்கான கையூட்டும், நான் கீழ் இறங்கி வந்தால் என்ன ஆகும் தெரியுமா என்ற வாய்சவடால்களும், வெற்றுப் பேச்சுகளும் படித்தவரிடையே அதிகம் இருக்கும். படிக்காத பாமரர்கள்இதைக் கண்டு மிரண்டு போவார்கள். அவர்கள், இவர் சிறந்தவர், அவர் சிறந்தவர் என்று எந்த அறிவுமின்றி இரண்டாக பிரிந்துரைப்பார்கள்.

ஒரு கிராமம், ஒரு நகரம், ஒரு தேசம் துண்டாடப்படும். அமைதியின்மை ஏற்படும். படித்தவர்களை இழிவு செய்யவும், பாமரர்களை துன்புறுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படும். நல்ல மனிதர்கள்அரிதாகிப் போவார்கள். ஒழுக்கம் குறையும். பெண்களுக்கு துக்கம் அதிகமாகும். அவர்களால் பல கலவரங்கள் நடக்கும். பொன் கொடுத்து மயக்குவதைப் போல பெண் கொடுத்தும் மயக்குவார்கள். விருப்பமின்றி பெண்கள் அதற்கு துணை போவார்கள். ஒரு அழியும் சமுதாயத்திற்கு இதைவிட பெரிய ஆரம்பம் எதுவும் தேவையில்லை.

தானம் கொடுப்பதில் ஏமாற்று வேலை இருக்கும். கையூட்டும், தானமும் ஒன்றையொன்று கலந்தபடி இருக்கும். கையூட்டா, தானமா என்று புரியாதபடி இருக்கும். அமைதியாக இருக்கவேண்டிய அந்தணர்கள் தங்கள் கடமைகளை மறந்து ஆரவாரமாக இருப்பார்கள். உறுதியாக இருக்க வேண்டிய சத்திரியர்கள் கோழையாக இருப்பார்கள். கடும் உழைப்பில் இருக்க  வேண்டிய விவசாயிகள், தச்சர்கள், கருமார்கள் சுருண்டு சோம்பலாய் இருப்பார்கள். இதனால் பயிர், பச்சைகள் வாடும். அதையும் தவிர, இம்மாதிரியான ஏமாற்று வேலைகளால் பூஜை புனஸ்காரங்கள், ஹோம யஞ்ஞாதிகள் குறைந்து போனதால் மழை வளம் குறையும். மழை வளம் குறைந்ததால் பூமியின் சூடு அதிகரிக்கும். பசுக்கள் மடிந்து ஆடுகளின் பால்தான் கிடைப்பதாக இருக்கும். பயிர்கள் என்பது போய் மரங்களின் பட்டைகளை வெவ்வேறு விதமான பக்குவத்தில் தயார் செய்ய வேண்டியிருக்கும். ஏதோ ஒரு உணவு என்று அலுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

எட்டு வயது பெண்கள் பூப்படைவார்கள். ஒன்பது வயதில் கர்ப்பமடைவார்கள். பன்னிரெண்டு வயது சிறுவர்கள் ஒரு குழந்தைக்கு தகப்பனாவார்கள். படிக்கின்ற வயதிலேயே சம்சார பந்தத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அந்த ஆண்கள் சிறு வயதிலேயே கிழவர்களாக காட்சியளிப்பார்கள். முடி உதிர்ந்து விடும். நரை அதிகரிக்கும். வியாதிகள் விதம் விதமாகத் தோன்றும். உலகம் அதனுடைய இயல்பான சோபையிலிருந்து பின்வாங்கி கடும் வேதனையில் தத்தளிக்கும். சத்திய யுகத்தில் வாழ்ந்தவர்களால் கலியுகத்தின் வேதனைகளை கண்கொண்டு பார்க்க இயலாது . இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா சத்திய யுகத்தில் என்று கலியுகத்தினர் வியப்பார்கள். பொய் பொய் என்று கூச்சலிடுவார்கள். நம்ப மறுப்பார்கள். அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நல்லவர்கள் ஏக்கமடைவார்கள்.

இவை  எல்லாவற்றிக்கும் ஆதாரம் வித்தையில் சிரத்தை குறைவது