கேள்வி: எங்கள் ஊரில் தினமும் பத்து ஏழைக் குழந்தைகளுக்கு உணவு போட்டு உதவி செய்து கொண்டிருந்தவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகி விட்டார். அவர் புண்ணியங்கள் அவரை காப்பாற்றவில்லை என்றுதானே இது காட்டுகிறது?

இல்லை சகோதரி. அவ்வளவு பெரிய மதுரையில் அவர் இறப்பு உங்களுக்குத் தெரிந்து உங்களை ஆட்டி வைக்கிறது எனில் அவர் செய்த புண்ணியம் காரணம். இதைச் செய்யாத வேறு எவரேனும் இறந்திருந்தால் நீங்கள் இத்தனை வருத்தப்பட்டிருக்க மாட்டீர்கள். அவர் மறைவு உங்களையும், உங்களைப் போன்ற நூற்றுக் கணக்கான மக்களையும் பாதித்து இருக்கிறது. இதுதான் அவர் செய்த புண்ணியத்தின் மிகப் பெரிய வெற்றி. அவருடைய மரணமும் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திடீரென்று அமைந்திருக்கிறது. எனவே, அது நல்ல சாவு என்று நினைக்கிறேன். செய்கிற உதவி பதில் எதிர்பார்க்காமல் செய்யப்படுவது நல்லது. ஆனால், செய்யும் உதவிக்கு நிச்சயம் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.