கேள்வி: அடுத்த தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஏதாவது சொல்லித்தானே ஆக வேண்டும். லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழாதீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புல் பிடுங்குவதோ, ஆணி அடிப்பதோ, அரசியல்வாதி ஆவதோ, விமானம் ஓட்டுவதோ எதுவாயினும் சரி, ஒரு லட்சியம் வைத்துக் கொண்டு அதை அடைய வேண்டுமென்று பாடுபடுங்கள்.

மது குடித்து விட்டு கிடைத்த இடத்தில் மல்லாக்க படுத்துக் கொண்டு, வாய் பிளந்து கால் அகட்டி தூங்காதீர்கள். பதட்டமும், புகை நெடியும், தவறான உணவுகளும், இறுக்கமான உடைகளும் உங்கள் வாழ்நாளை பாதிக்கின்றன. இன்று பெண்கள் பேசுவதற்கு எளிதாக கிடைக்கிறார்கள் என்பதால் அதிக நேரம் பேசுவது செயல் திறனை இழக்க வைக்கும். இது இரவு தூக்கத்தை குதறிப் போடும். ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் தூங்கினால் போதும். மற்ற நேரமெல்லாம் விழிப்போடும், உழைப்போடும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

ஜெயித்தவருக்குத்தான் பெண்களிடம் மரியாதை. கெக்கலிக்க பேசுகிறவர்களை மறுநாள் பெண் மறந்து விடுகிறாள். மறக்காத பெண் தன் வாழ்க்கையை தொலைக்கிறாள். ஏதேனும் ஒரு மொழியில் பாண்டித்யம் பெறுங்கள். உங்கள் சரித்திரத்தையாவது அறிந்து கொள்ளுங்கள். உலக சரித்திரத்தின் மீது கவனம் வையுங்கள். உங்களை விட பல கில்லாடிகள் ஒன்றும் இல்லாமல் போயிருக்கிறார்கள் என்பது சரித்திரம் படிக்கத் தெரியும்.

மிகச் சிறந்த மன்னர்கள் காணாது போனபோது பெயர் கூட இல்லாது போனபோது எதுவுமே செய்யாத நீங்கள் யார் மனதில் நிற்கப் போகிறீர்கள். என்னவாக இருக்கப் போகிறீர்கள். சரித்திரத்தில் இடம் பெற முயற்சி செய்யுங்கள், அல்லது குறைந்தபட்சம் மன நிம்மதியோடு இருங்கள். தேடிச் சோறு நிதம் தின்று பலச் சின்னஞ் சிறு கதைகள் பேசி என்று உங்களை நீங்களே இழிவாக்கிக் கொள்ளாதீர்கள்.

இதையெல்லாம் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அந்த லட்சியத்தோடு வாழுங்கள். இது ஒரு வேண்டுகோள்தானே தவிர அறிவுரை அல்ல.

கேள்வி: உங்கள் வாசகருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

படிக்கும் அனுபவத்தை பெரிதாக்கிக் கொள்ளுங்கள். படிப்பை என்ன செய்வது என்று யோசியுங்கள். அலட்டிக் கொள்ள படிப்பு அல்ல. அரட்டை அடிப்பதற்கு அல்ல. அது உள்ளே உங்களை திரும்பி பார்ப்பதற்கு. உங்கள் லட்சணம் என்ன என்று தெரிவதற்கு. ஒரு நண்பனைப் போல இலக்கியம் தான் உங்கள் தோள் மீது கை போட்டு, டேய் நீ செய்வது தவறு. இப்படி யோசனை செய் என்று உதவி செய்யும். இத்தனை அக்கறையாக நண்பர்கள் கிடைப்பது அரிது. ஆனால் இலக்கியம் அப்படிப்பட்ட அக்கறையான நண்பனாக இருக்கிறது. வெகு அருகே இருக்கிறது. எனவே படியுங்கள். நிச்சயம் படியுங்கள். படித்த பிறகு படித்ததைப் பற்றி யோசனை செய்யுங்கள். ஒரு குழுவாக திரிந்தீர்கள் என்றால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். அவன் குப்பை, இவன் சொத்தை, இவன் கிரேட் என்று ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடுவீர்கள். பிறகு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம் வேறு விதத்தில் நடக்கும். வெறும் ஜால்ரா சத்தம் நிறைக்கும்.

உங்களை மேம்படுத்திக் கொள்கின்ற தன்மையைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டுமே தவிர இலக்கிய வட்டம் என்பது முக்கியமில்லை என்பது என் எண்ணம். நான் தனியாகத்தான் வளர்ந்தேன். தனியாகத்தான் வெற்றி பெற்றேன். இன்னும் தனியாகத்தான் வாழ்கிறேன். என் வாழ்க்கை சுகமாக இருக்கிறது. குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா. குறையொன்றுமில்லை கோவிந்தா.