நுழைந்ததும் மாமனார் அதட்டினார்.

“நன்னாவேயில்லை நீ பண்றது…..சுருங்கின கிழவியா உன்னை நீ நெனச்சுக்கலாம். வாலிபமே போயிடுத்துன்னு சொல்லிக்கலாம். பட்டப்பகலில் தாலிக் கொடிய அறுத்துண்டுப் போறான். கிழவின்னு பார்க்கறானா…குமரின்னு பார்க்கறானா? அட கொடி போனாலும் போறது. கழுத்து அறுந்தா ….காது பிஞ்சா… குப்புறத் தரையோடக் கவுந்தா யாருக்கு அவமானம்? இருக்கிற இடமே அத்துவானா காடா இருக்கும். ஊர் சுத்தி பனந்தோப்பு, உறவெல்லாம் பங்காளிங்கற மாதிரி , கூப்பிட்ட குரலுக்கு ஆள் வருவானா பட்டணத்துல…. அதிகப் பிரசங்கித்தனத்துக்கும் ஒரு எல்லை வேண்டாமா? இனி ஏழு மணிக்குத் திரும்பறதானாப் போ. இல்லைனா போக வேண்டாம்.”

வீட்டில் ஸ்வப்னாவின் புருஷன் இல்லை. விளக்கு வெளிச்சத்தில் பேட்மிட்டன் ஆடப் போய்விட்டான் போலிருக்கிறது… மாமியார் டி.வி பார்த்துக்கொண்டிருக்க… மாமனார் இவள் சாப்பிட்டுக் கை அலம்பும்வரை சுத்திக் கொண்டிருக்கிறார்.

“பகவானேன்னு இவ காலைக் கட்டிப் போடற மாதிரி ஒன்னுக்கு ரெண்டா குழந்தை பிறக்கனும். அப்பதான் எல்லாம் சரிபடும். வெறுமே சுத்தி சுத்தி என் மார்தான் வலிக்கிறது.”

ஸ்வப்னா மாமனாருக்கு மாத்திரையும் ஜலமும் கொண்டு போய்க் கொடுத்தாள். போனவருடம் முதல் ஹார்ட் அட்டாக் வந்து தேறி, தினசரி மாத்திரை போட்டுக் கொள்கிறார்.

“இல்லை ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயி ஊர் சிரிக்கனும், அப்பதான் புத்திவரும். ஊர்ல இருக்கிறவன் நம்மளைன்னா வைவான். மாட்டுப் பெண்ணைத் தனியா அனுப்பிச்சிட்டு மல்லாந்து உட்கார்ந்துட்டையாக்குன்னு வைவான். ஊர் என்ன…. உங்க உறவே சட்டமா போஸ்ட் கார்டல விசாரிக்க கேக்கும். உங்க வீட்டு ஆம்பளைகளுக்கு அறிவே இல்லையான்னு கேக்கும். நாம பதிலுக்கு எழுதிப் போடனும். ஆமா எனக்கு அறிவே இல்லைன்னு. என் மருமகளுக்குத்தான் இலக்கிய அறிவு, தத்துவ அறிவு அதிகம்னு எழுதிப்போடனும். யாரை நொந்து என்னப் பயன்…. என் சொல்பேச்சு எடுபடப் போறதில்லை . காணமே காணமேன்னு தவிக்கிறதுதான் மிச்சம்.”

-தொடரும்