நேற்று காலை பத்து மணிக்கு மயிலையில் கூட்டம் துவங்கியது. கலைமகள் வாசகர் விழா என்று அச்சிட்டு அழைத்திருந்தார்கள். என்னை, எழுத்தாளர் தேவிபாலா, எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனை பேச அழைப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு உள்ளே நுழைந்தேன். கீழாம்பூரின் அன்பு கரங்கள் வரவேற்றன. வாசகர்கள் நிறைய பேர் வணக்கம் சொன்னார்கள். மேடையில் அபங்கு பாடல் நடந்து கொண்டிருந்தது. விழா துவங்கியது. கலைமகள் ஊழியர்களுக்கு கௌரவம் செய்தார்கள். உயர் திரு நல்லி சின்னசாமி செட்டியார் மிக அழகாக பேசினார். அடுத்து நான் பேசினேன்.

பையிலுள்ள பாட்டிலில் பத்து செந்தேள்கள் இருந்தன. அருகிலுள்ள கெனால் பாலத்திலிருந்து பிடித்தது. பன்னிரெண்டு வயது வாலிபனாக கலைமகள் வாசலில் வியப்போடு நின்றேன். அம்மா ஆசையோடு படிக்கும் புத்தகம். இதுதான் அலுவலகமா என்று வியப்போடு நின்றேன். உள்ளே ஒருவர் அழைக்க, வேண்டாம் கையில் தேள் இருக்கிறதென்று சொல்லிவிட்டேன். அவர் வியப்போடு பார்த்து உள்ளே போய்விட்டார்.அதே அலுவலகம் இன்று என்னை இலக்கிய சேவைக்காக கொண்டாடி மகிழ்வது காலத்தின் கோலம். என் மூத்தோர் புண்ணியம். கடவுளின் ஆசி. என் குருவின் கருணை. என் தாயின் வாழ்த்து என்றுதான் தோன்றுகிறது” என்று சொல்லி உடன் விருது பெறும் எழுத்தாளர் தேவிபாலா, எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனை பாராட்டி பேசினேன்.

‌விருது என்று அறிவித்திருந்தால் முகநூலில் முன்னமே போட்டு இன்னும் நூறு பேரை வரவழைத்திருக்கலாம். ஆனாலும் அரங்கு கொள்ளாத கூட்டம். பேருந்து வேலை நிறுத்தத்தை மீறி வாசக அன்பர்கள் வந்திருந்தார்கள். எலைட் ஆடியன்ஸ். கீழாம்பூர் வளர்ச்சி அபரிமிதமானது. படபடப்பானவர். கோபமானவர் என்று பெயர் வாங்கியவர். அவைகளை உதறி கம்பீரமாக கலைமகளை சுமக்கிறார். அமரர் கி.வா.ஜா விட்ட பணியை செம்மையாக செய்து வருகிறார். கீழாம்பூர் சங்கர சுப்ரமணியத்தை மனதாற வாழ்த்தினேன். மனநிறைவான ஒரு காலைப்பொழுது.