பல் தேய்த்த பிறகு சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

சுவாசப் பயிற்சியை முற்றிலுமாய் எழுதி தெரிவிக்க முடியாது. படித்து புரிந்து கொள்ள முடியாது. நல்ல யோகா மாஸ்டரிடம் கை கட்டி பணிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்வது ஒன்றும் கடினம் அல்ல. கடைபிடிப்பதற்குத்தான் கண்ணியம், கட்டுப்பாடு வேண்டும்.

“ஐந்தாயிரம் கொடுத்து யோகா கத்துண்டேன். நாலு நாள் பண்ணிணேன். அப்புறம் விட்டே போயிடுத்து. என்ன கத்துண்டோங்கறது கூட ஞாபகம் இல்ல.”

இது ஒருவகை தாரித்ரியம். நல்லது ஒட்டாத சாபம். தனக்குள் தான் பேசாத இழிநிலை. தன்னை உற்று கவனிக்காத பாபம். ஒரு விஷயம் கற்றுக் கொண்டால் அதன் அடியிலிருந்து நுனிவரை அலசி அறிந்து விட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட விதமாய் செய்து முடிக்க வேண்டும். முடியாமல் போன காரணங்கள் நூறு என்ன ஆயிரம் சொல்லலாம். காரணம் முக்கியமல்ல. காரியம் முக்கியம். நல்ல விஷயத்தை செய்ய திரானி இல்லாவிட்டால் செத்துப் போகலாம். அல்லது செத்துப் போனவர்கள் செய்யாது இருப்பார்கள்.

சிகரெட் பிடிக்காமல், பான்பராக் போடாமல், வெற்றிலை பாக்கு, பன்னீர் புகையிலை அதக்காமல், கஞ்சா சாராயம் என்று போகாமல் தெளிவாக வாழ நுரையீரல் நல்ல காற்றுக்கு ஏங்கும். எழுவது சதவீதமாவது நிரப்பு என்று கெஞ்சும். நாம் தலையை கவனித்த அளவுக்கு நுரையீரலை கவனித்ததில்லை.

நல்ல ஓட்டப்பந்தய வீரருக்கு எண்பது சதவீதம்தான் நுரையீரல் இயங்கும். யோகிக்கே நூறு சதவீதம். சாதாரண குடும்பிக்கு அறுபது சதவீதம். வயதானோருக்கு நாற்பத்தைந்து, ஐம்பது சதவீதம். தொண்டு கிழவருக்கு முப்பது சதவீதம். நுரையீரல் நோய் பட்டவருக்கு இருபது சதவீதம்தான் இயங்கும். சின்ன அசைவில் கூட மூச்சு வாங்கும். முதுகு விளா, கை, கால்கள் வலிக்கும். தலை கனக்கும். பிராண வாயு தேக்கமான நிலை அது. நீங்கள் என்ன உடற்பயிற்சி செய்தாலும் முதுமையில் இந்த நிலை வரும் மறக்க வேண்டாம். இந்த நிலைக்கே முதுமை என்று பெயர்.

ஒரு நல்ல யோகா மாஸ்டர் சொல்லுங்கள் என்று என்னிடமே கேட்க வேண்டாம். கொஞ்சம் மனம் வைத்து தேடுங்கள். சென்னையில் உள்ளவர்களுக்கு ஜெயகோபால் மாஸ்டர் என்ற என் நண்பரை சிபாரிசு செய்கிறேன். மிகத் திறமையானவர். யோகாவிற்கு தன்னை ஒப்புக் கொடுத்தவர். கனவான். அவர் குடும்பமே யோகப் பயிற்சியில் ஈடுபட்ட குடும்பம். அவர் செல் நம்பர் -98417 38039.

மூச்சுப் பற்றிய கவனம் ஒருவருக்கு வரவில்லையெனில் வாழ்வில் முன்னேற்றம் வராது. வந்தாலும் தங்காது. மூச்சு… அதுதானேயப்பா எல்லாம்.

(என் அப்பனல்லவா என் தாயுமல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா)