ராமர் தினந்தோறும் அரண்மனையிலிருந்து அரசவைக்கு நடந்து வருவது வழக்கம். அரண்மனை வளாகத்திலேயே அரசவை இருந்ததால் குளித்து, ஜபதபங்கள் செய்து, உணவு உண்டு தாயாருடன் பேசிவிட்டு அன்றைய அரசவையை கவனிப்பதற்கு அவர் அரண்மனையில் இருந்து நடந்து போவார்.

தசரதர் அரசராக இருந்த காலமது. தசரதர் சிம்மாசனத்தில் வீற்றிருக்க, கீழேயுள்ள சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாங்க நடவடிக்கைகளை உன்னிப்பாய் ராமர் கவனிப்பார்.

ஒருநாள் அப்படி நடந்து வரும்போது அரண்மனையிலிருந்து அரசவைக்குப் போகும் பாதையில் புற்கள் மண்டியிருந்தன. சிறு கற்கள் இருந்தன. ராமர் பாதுகை அணிந்திருந்ததால் அவர் பாதங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை. அதேசமயம், இந்தப் பாதுகைகள் தன்னை முட்களிலிருந்தும், கற்களிலிருந்தும் பாதுகாக்கின்றனவே என்று பிரியத்துடன் அந்தப் பாதுகையை ராமர் பார்த்தார்.

அரசவைக்கு படியேறிப் போய் வாசலில் நின்றார். முனிவர்களும், அக்னிஹோத்திரம் செய்யும் பிராமணர்களும் சான்றோர்களும், மந்திரிமார்களும், வயது முதிர்ந்த தாயை ஒத்த பெண்களும், அரசரும் வீற்றிருக்கின்ற சபையில் தான் பாதுகைகள் அணிந்து போகும் மரியாதை இல்லை என்று நினைத்து வாசலிலேயே கழற்றி விட்டு உள்ளுக்குள் நடந்து போனார். அப்படி நடக்கும் போது மனம் சட்டென்று ஒரு வேதனையில் தவித்தது.

அரண்மனையிலிருந்து அரசவை வரை உள்ள இடத்திலுள்ள கற்களிலிருந்தும், முட்களிலிருந்தும் இந்தப் பாதுகைகள் பாதுகாத்தன. இந்தப் பாதுகைகள் பாதுகாக்கின்றனவே என்று நான் மனம் மகிழ்தேன். அவைகளைப் பிரியத்துடன் நோக்கினேன். ஆனால் என்ன செய்வது இந்தப் பாதுகைகளை நான் அரசவைக்குள்ளே கொண்டு வரமுடியவில்லை. அப்படி கொண்டு வருவது பொருத்தமாக இருக்காது. ‘இப்படி எனக்கு உதவி செய்த பாதுகைகளை நான் வாசலில் விட்டுவிட்டு வரும்படி நேருகிறதே’ என்று பாதுகைகளை கடைக்கண்ணால் பார்த்தபடியே அரசவைக்குள் போனார். அன்றைய அரசவையில் கலந்து கொண்டார்.

கருணாமூர்த்தியான, கடவுள் அவதாரமான ராமபிரான் கணநேரம் தன் பாதுகைகள் குறித்துக் கவலைப்பட்டது சாதாரணமாகப் போய் விடவில்லை. அந்தப் பாதுகைகள் பதினான்கு வருடங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்தன. அந்தப் பாதுகைகளுக்கு கீழே பிராமணர்களும், முனிவர்களும், சான்றோர்களும், மந்திரிகளும், சேனாதிபதிகளும், வயதும், அனுபவமும் மிக்க உயர்குல பெண்மணிகளும் அரசரும் இருக்கும் படியாயிற்று.

மரத்தாலான வெறும் பாதுகையை கணநேரம் நினைத்ததற்கே பதினான்கு வருடம் மிகப்பெரிய பாக்கியம், அரசாளும் யோக்கியதை வந்து விடுகிறது என்றால், அந்தக் கருணாமூர்த்தியின் கடாஷம் நம்மீது பட்டால் நாம் எவ்வளவு சிறப்படைவோம்.