என் குடும்பம் பற்றி வாசகராகிய உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என் குடும்பம் இல்லாது நான் இல்லை என்பதாலேயே இந்த அறிமுகத்தை செய்யத் துணிகிறேன். என்னுடைய எல்லா வெற்றிக்குப் பின்னாலும் என் குடும்பம் இருக்கிறது. என் நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கு இரண்டு மனைவியர். கமலா சாந்தா. என் அம்மா தேர்ந்தெடுத்த பெண்மணி கமலா. நான் தேர்ந்தெடுத்த பெண்மணி சாந்தா.

கடந்த முப்பத்தேழு வருடங்களாக நாங்கள் மூவரும் ஒரே கூரை கீழ் மிக ரம்மியமாக, அமைதியாக, ஆனந்தமாக குடித்தனம் செய்து கொண்டிருக்கிறோம். சாந்தாவினுடைய தெளிவும், அன்பும், சுறுசுறுப்பும் கமலாவை கட்டிப் போட்டிருக்கின்றன. கமலாவின்னுடைய வெண்மை குணம், கரை கடந்த பிரியம் சாந்தாவை கைது செய்திருக்கிறது. இந்த இருவரும் என்னை அடக்கி உட்கார வைத்திருக்கிறார்கள். இது மிக சாதாரணமான, எளிமையான, உண்மையான ஒரு சூத்திரம். யாரும் சொல்லிக் கொடுக்காமல் இந்த சூத்திரத்தை எப்படி நாங்கள் கற்றோம் என்று எனக்குத் தெரியவேயில்லை. கமலாவிற்கு கௌரி என்ற மகள் பிறந்தாள். சாந்தாவிற்கு சூரியா பிறந்தான். நாங்கள் ஐந்து பேரும் அடித்த கொட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நான் மனைவியரை மிரட்டுவதில்லை. அவமானப்படுத்துவதில்லை. என் குழந்தைகளை ஒருநாளும் கோபித்துக் கொண்டதில்லை. மார்க் குறைவாக இருந்தாலும் என் வேலையை நான் செய்கிறேன், உன் வேலையை நீ ஏன் செய்ய மாட்டேன் என்கிறாய் என்ற கேள்வியோடு கையெழுத்து போட்டு விடுவேன். அவர்கள் நாணி தலைகுனிவார்கள். அடுத்த முறை பேயாய் உழைப்பார்கள்.

புயல் மையம் கொண்டிருக்கிறது. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று செய்தி வந்தால், நாங்கள் அனைவரும் கடற்கரைக்குப் போவோம். புயலை, மழையை ரெயின் கோட்டோடு அனுபவிப்போம். என்ன ரெயின் கோட்? சொட்ட சொட்ட நனைந்துதான் வருவோம். ஆனால் புயல் கடக்கிறபோது மணல் துகள்கள் வாரி அடிப்பதும், அலைகள் சீறி எழுவதும், கம்புக் கட்டைகள் பிய்த்துக் கொண்டு ஓடி வருவதும் ஒரு பயங்கரமான, அதேசமயம் துடிப்பான ஒரு அனுபவத்தை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். “அப்பா, உன்னைத் தவிர வேறு எந்த அப்பனும் புயல்ல பீச்சுக்கு கூட்டிட்டு போகமாட்டாங்கப்பா. வி ஆர் ப்ளஸ்ட்” என்று கௌரி பிற்பாடு சொல்லியிருக்கிறாள். இலக்கிய பாடல்களை நாங்கள் பாடியபடியே ஸ்கூட்டரில் பயணம் செய்த காலங்கள் உண்டு.

கௌரி எம்.எஸ்ஸி.பயோகெமிஸ்ட்ரி. சூர்யா பிகாம்.எம்.பிஏ. கௌரி திருமணமாகி திரு கணேஷுடன் ஷார்ஜாவில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஆகாஷ் என்கிற ஆண் குழந்தை. இப்போது இந்த இரண்டாயிரத்து பதினேழில் அவர் பதிமூன்று வயது கடந்து விட்டார்.

சூர்யா சுகன்யா என்ற பெண்ணை விரும்பி, எங்களிடம் வந்து சொல்ல, அந்தப் பெண்ணும் வந்து கை கூப்ப, எங்களுக்கு பிடித்துப் போயிற்று. நான் சோழ தேசத்தவன் என்றாலும் எனக்கு கீழை சாளுக்கியம் பிடிக்கும். கீழை சாளுக்கியம் என்பது ஆந்திரா. என்னுடைய உதவியாளர்கள், பல நண்பர்கள் கீழை சாளுக்கியத்தை அதாவது ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். அதிசயம் என்னவென்றால் என்னுடைய மருமகளும் கீழை சாளுக்கியம். சோழ தேசத்து பையனான சூர்யா கீழை சாளுக்கிய பெண் மீது ஆசைப்பட்டதில் அதிசயமில்லை. தமிழர்களுக்கு ஆந்திரர்களை பிடிக்கும். அந்த அளவுக்கு கன்னடர்களை பிடிக்காது. ஆந்திரர்களுக்கும் தமிழர்கள் மீது பெரிய மரியாதை உண்டு. பெண் வீட்டாரும் சம்மதிக்க நாங்களும் சம்மதிக்க, ஆர்பாட்டமான அவர் திருமணம் திருப்பதியிலும், வரவேற்பு சென்னை நியூ உட்லண்ஸ்ஸிலும் நடந்தது. சூர்யாவிற்கு இந்த இரண்டாயிரத்து பதினேழில் இரண்டு வயது நிரம்பிய அயான் என்கிற துடுக்கான துடிப்பான ஆண் குழந்தை இருக்கிறான். விதை ஒன்று போட்டால் செடி ஒன்று முளைக்குமா? அயான் வாய்க்கு வாய் “ஓ காட் ஓ காட்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். இரண்டு பேரன்களுக்கு நடுவே இருக்கும் போது வாழ்க்கையில் ஒரு வட்டம் வந்துவிட்டதை நான் உணர்கிறேன். இனி வாழ்கின்ற நாட்களெல்லாம் கடவுள் கொடுத்த போனஸ் என்பதாகவும் உணர்கிறேன்.

இந்த நேரம் இந்த சந்தோஷத்தோடு, வாழ்ந்த தெளிவோடு நிறைய எழுதத் துவங்கியிருக்கிறேன். முன்பு காட்டிலும் இப்பொழுது எழுதுவதில் ஒரு கணம் கூடியிருக்கிறது. இதைப்பற்றி விமர்சனங்கள் பின்னால் ஏதும் சொல்லக் கூடும். குறைவொன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா என்பதுதான் என்னுடைய நிலையாக இருக்கிறது. அதற்கு காரணமான என் குருவை நெடுஞ்சாண்கிடையாக வணங்குகின்றேன்.

யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.