சந்நிதிக்கு எதிரே வந்து திரும்பிப் பள்ளிகொண்ட பெருமாளைப் பார்த்தார்.

கணிகண்ணன் போகிறான்…
காமரு பூங்கச்சி மணிவண்ணா
நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவன் நான்
சொல்லுகிறேன் – நீயும் உன்
பை நாகப் பாய் சுருட்டிக் கொள்.

கிழவிக்கு உத்தரவிட்டது போல பரந்தாமனுக்கு உத்தரவு. ‘ வா போகலாம்.. உனக்கென்ன வேலை இங்கே? ‘ என்கிற கோபம்.

உள்ளேயிருந்து யாரோ வெளியே வந்தார்கள். ரூபம் இல்லை… அரூபம். ஆனால் அசையல் தெரிந்தது. நடத்தல் தெரிந்தது. கோயில் தாண்ட உள்ளே தீபங்கள் பட்டென்று அணைந்தன. எல்லா தீபங்களும் ஒரே நேரத்தில் அணைந்தன. தெரு தாண்ட இருண்டது. ” ஐயோ…! ” கூறினார்கள். நரி ஊளை பின்னே கேட்டது. காற்று நின்று புழுக்கமாயிற்று. தெருமுனை மரம் சரிந்து விழுந்தது. அரசவை அந்தணர் வீட்டு நிலைப்படி தடெரென்று உட்கார்ந்தது. பசுக்கள் பரிதாபமாய்க் கத்தின.

நடக்க நடக்கப் பின்னே அந்த அரூபம் வந்தது. அரூபம் நகர்ந்து வர, ஊர் இருளாகியது. பெரிய எலிகள் தெருவில் குறுக்கும் நெடுக்கும் ஓடின. பூனைகள் கத்தின. கோட்டான்கள் அலறின.

காஞ்சிபுரம் வாசல் காவலர்கள் தீவட்டியால் முகம் பார்த்தார்கள்.

” காலையில் அரசதண்டனை பெற்றவன்தானே… போ, போ! ” என்று விரட்டினார்கள்.

” ஐயா, நீங்கள் ஏன் போகிறீர்கள்? ” – ஒரு வயோதிக காவலாளி திருமழிசைபிரானைக் கைகூப்பிக் கேட்டான்.

” என் சீடனைத் தண்டித்தால் அது என்னைத் தண்டித்தது போல. நான் வேறு, என் சீடன் வேறா? எனவே நானும் போகிறேன். ”

” ஐயோ… அது யார் பின்னால்…? ”

” சோதித்து பார் உன்னிடம் விளக்கு இருந்தால்! ” நடந்தார்.

வயோதிகர் விளக்கு உயர்த்தினார். பட்டென்று விளக்கு எகிறி விழுந்தது. நடந்து போகும் உருவத்தை பார்த்து ” ஐயோ” என்று அலறினார். மூர்ச்சையானர்.

காவல் மரம் பெரிய கிளை முறிந்து விழ, கோட்டைக் கதவு கோணலாய்ப் பிடிவிட்டு சரிந்தது.

” என்ன இது… ஏன் இருள்…? கதவு… கதவு விழுந்துவிட்டது. டேய், யாரங்கே… அம்மா… இப்படி இருட்டுமா. நிலவு மறைந்து தலைமுடி தெரியாத இருட்டு வருமா, ஊரில் துர்வாசனை பரவுமா…? ”

அரண்மனை விளிம்பில் எரிந்த தீப்பந்களும் அணைந்தன. ” ஏற்று… ஏற்று வேறு விளக்கேற்று. ”

சிக்கிமுக்கிக் கற்கள் செத்த பிராணிகள் போல் இருந்தன. ஒரு பொறி கூட இல்லை. ” இது விடியாத இரவா? ஏன் இந்த துர்வாசனை? ஏன் நரி ஊளை? ஏன் கோட்டான் அலறல்?”

” யாரையாவது கூட்டி வா… யார் அங்கே? ”

” அரசே, நான்தான் வண்ணமாலை. ”

” எங்கிருக்கிறாய்? ”

” இங்கே, உங்கள் அருகில். ”

” ஏன் விளக்குகள் அணைந்தன? ”

” ஒளிக்கு ஒளியானது போய்விட்டது.”

” என்ன…?”

” எது ஒளிக்கு ஒளியாய் இருந்ததோ… அது காஞ்சியில் இல்லை. ”

” என்ன சொல்கிறாய்? ”

” நெருப்பு எரிய ஒரு சக்தி வேண்டுமே, அது இல்லை. ”

” அது என்ன சக்தி? ”

” பரம்பொருள். கடவுள்! ”

” கடவுள் காஞ்சியில் இல்லையா…?”

” இல்லை… ”

” எங்கே?”

” என் திருமழிசைபிரானோடு போய்விட்டார்.”

” உன் திருமழிசைபிரானை நான் போகச் சொல்லவில்லையே? ”

” அவர் சீடனை நாடு கடத்தினீர்கள் அல்லவா… நரனைப் பாடமாட்டேன் என்றவனை ‘ வெளியேறு ‘ என்று துரத்தினீர்கள் அல்லவா?”

” நான் மன்னன். விஷ்ணு அம்சம்.”

” திருமழிசைபிரான் சிவன், விஷ்ணு, பிரம்மா எல்லாமானவர். ஆதிநாராயணர்… நாராயணனின் சக்ரவர்த்தி ஆயுதம் அவர். ”

” எனக்குப் புரியவில்லை… ” மன்னன் பரிதவித்தான்.

” ஆமெனில் புரிந்தவரைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். இல்லையெனில் கடைசிவரை இருள்தான். ”

” என்ன செய்யச் சொல்கிறாய் வண்ணமாலை? ”

” பின்னால் ஓடிப் போய் கெஞ்சிக் கதறுங்கள். ‘ புரியவில்லையே… புரியவில்லையே என்று பரிதவித்து எழுந்திருங்கள். நீரில் அழுத்தப்பட்டவன் எத்தனை விதமாய்த் திமிறி மூச்சுக்காக மேலெழுவானோ, அத்தனை வேகமாய்ச் செயல்படுங்கள். கடவுளைப் புரிதல் எளிதல்ல. ”

மன்னன் எழுந்தான். ஊர் எழுப்பிய ஓலங்கள் அவனைக் கலவரமடையச் செய்தன.

” கடவுளே கடவுளே ” என்று கதறிப் பின் தொடரந்தான். கால் இடறி விழுந்தான். எழுந்து ஒடினான். திசை தெரியாது அலைகழிந்தான். தடுமாறினான். தட்டித் தடவி கோட்டை வாசல் அடைந்தான்.

பாலாறு தாண்டி ‘ ஓர் இரவு இருக்கை ‘ என்கிற இடத்தில் திருமழிசைபிரான் அமர்ந்து கொண்டார். ‘ ஓரிருக்கை’ என்று மக்கள் அழைக்கும் சிறிய கிராமம் அது. பிரான் பாடினார்.

சுருக்குவாரை இன்றியே
சுருக்கினாய் சுருக்கியும்
பெருக்குவாரை இன்றியே
பெருக்க மெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள்
தீர்த்த தேவ தேவனென்று
இருக்கு வாய் முனிக் கணங்கள்
ஏத்த நானும் ஏத்தினேன்.

திருமழிசைபிரான்க்கு எதிரே அரூபமாய், அடர்ந்த சக்தியாய் எந்தப் பொருளாலும் ஏற்றப்படாத ஜோதியாய் பெருமாள்… எழுந்து வரச் சொன்னதும் எழுந்து வந்த பெருமாள்… சொன்ன வண்ணம் செய்த பெருமாள் இருந்தது. எங்கும் அதன் ஒளி இருந்தது. மேல்கீழ், இடம்வலம், முன்பின் எல்லாவற்றிலும் இருந்தது. திருமழிசைபிரானுள், மரத்தில் செடியில் நீரில், நிலத்தில், ஆகாயத்தில் பரவியிருந்தது. உற்றுப் பார்க்க, ஓர் உருவாகவும் பாராதபோது உருவற்றும் அமர்ந்திருந்தது.

கணிகண்ணன் தன் வசமற்று நின்றிருந்தான். எல்லாம் தெரிந்து போன அதிசயத்தில் திகைத்திருந்தான். எங்கு போயினும் நீயிருக்க நன்மை என்ன, தீமை என்ன?

அச்ச நோயொடல்லல் பல்பிறப்பு
அவாய மூப்பு இவை
வைத்த சிந்தை வைத்த ஆக்கை
மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன், அனந்த கீர்த்தி
ஆதி அந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த
நாதன் வேத கீதனே

கடவுள் அறிய எந்த வேதனையும் இல்லை. புருஷோத்தமன் உள்ளே இருப்பது தெரிய உடம்பே இல்லை. உடம்புக்குத்தானே நோயும் அல்லலும் அச்சமும் மூப்பும் பிறவிகளும். வானம் போல மனசு, மனசு போல உடம்பு. உடம்பே வானம்.

எனக்கு என்ன தருவாய் என்று குருவைக் கேட்டேன்… கிழவிக்கு உடம்பு மாற்றினாயே! எனக்கு என்ன என்று கணநேரம் யோசித்தேன்…. குரு மனசு மாற்றி விட்டது.

தானும் வெளியே வந்து கடவுளையும் வெளியே கொண்டு வந்துவிட்டது. இதோ பார் கடவுள் என்று காட்டிவிட்டது. எல்லாம் கடவுளே என்று கணிகண்ணனாகிய எனக்கு காட்டிக் கொடுத்துவிட்டது. குருவே கடவுள், கடவுளே குரு. இரண்டுமே ஒளி. எதனாலும் தோன்றாத ஒளி. எல்லாம் நிறைந்த ஒளி.

ஊனில் மேய ஆவி நீ
உறக்மோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ
அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ
வளங்கடற் பயனும் நீ
யானும் நீ, அதன்றி
எம்பிரானும் நீ இராமனே ‘

திருமழிசைபிரான் பாடியது இதுதானா. தான் அறிந்ததை எனக்குச் செல்லாமல் சொல்லிக் கொடுத்துவிட்டதா. தன் தவத்தை, தவப்பயனை தாராளமாய் என்னுள் புகுத்திவிட்டதா.

யாரோ வருகிறார்கள்… யார் அது. யாரானால் என்ன? என்ன நடக்கும் இனி? எது நடந்தால் என்ன? உள்ளார்ந்த மௌனம், மௌனம் கூட இல்லை, சாந்தம் கணிகண்ணனுள் பரவிப் பெருகிக் கிடந்தது.

வந்தது பல்லவன். இருட்டிலிருந்து வந்தவன் ஒளியைப் பார்த்து திகைத்தான்!

ஒளியின் காலில் விழுந்தான். ” பள்ளிகொண்ட பெருமாளே! காஞ்சியை விட்டு போக வேண்டாம். என் மீது கோபம் வேண்டாம். ” புலம்பினான்.

” எனக்கெந்த கோபமும் இல்லையே. திருமழிசைபிரான் போனார். நானும் கூடக் கிளம்பினேன். ” ஒளி உணர்த்தியது.

பல்லவன் திருமழிசைபிரான் திருவடிகளில் விழுந்தான்.

” காஞ்சியை விட்டு ஏன் அகன்றீர்கள் ஐயனே? என்ன வருத்தம் என் மேல்? ”

” எந்த வருத்தமும் இல்லை அரசே. என் சீடன் துரத்தப்பட்டான். சீடனில்லாத இடத்தில் குருவுக்கு என்ன வேலை? எனவே, நானும் அவனைத் தொடர்ந்தேன். ”

” கணிகண்ணரே…” அரசன் இடம் மாறிப் பணிந்தான்

” பிழை பொருத்தருள வேண்டும். வண்ணமாலை சூசகமாய் எச்சரித்தது புரியாமல் தவறு செய்துவிட்டேன். காஞ்சி திரும்ப வேண்டும். குருவோடும் கடவுளோடும் என் நகர் வந்து அலங்கரிக்க வேண்டும். ”

கணிகண்ணன் சிரித்தான்.

கணிகண்ணன் செலவொழிந்தான். காமரு பூங்கச்சி மணிவண்ணா என்று திருமழுசைபிரான் ஒளியை விளித்தார்.

ஊர்ப் பயணம் போவதைத் தவிர்த்துவிட்டான், என் கணிகண்ணன் என்பதைச் செலவொழிந்தான் என்றார். காஞ்சிபுரத்துக்கு போகலாம் வா… அங்கு போய்… நீயும் உன் பைநாகப் பாயை விரித்துக் கொள் என்று பெருமாளிடம் பேசினார்.

ஒளியோடு குருவும் சீடனும் ஊர் திரும்பினார்கள். காஞ்சி பொலிவாயிற்று.

திருமழிசைபிரானை நோக்கி ” குருவே ” என்று கணிகண்ணன் விழுந்தான்…விம்மினான்.

” எந்த வேதமும் அறியாது, வெறுமே உம்மோடு இருந்த இந்தக் கட்டைக்கு இத்தனை பெரிய பரிசா… எனக்கு இதற்கான யோக்கியதை உண்டா?”

” நீ கேட்டுத்தானே தந்தேன் கண்ணா, என்றும் என்னோடிருக்கக் கேட்டாயல்லவா. இந்தத் திருமழிசைபிரான் இருக்கும் வரை இனி கணிகண்ணனும் இருப்பான். யோக்கியதை படிப்பால் வருவதல்ல கண்ணா. பக்குவத்தால் வருவது.”

அது சம்மணமிட்டு ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்தது.

கண்மூடி மெல்லிய சிரிப்போடு நீண்ட வெண்தாடியும் சிவந்த உதடுகளுமாய்ப் பரமானந்தத்தில் லயித்திருந்தது.

கணிகண்ணன் அருகே அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே சொன்னவண்ணம் செய்த பெருமாள் பள்ளிகொண்டிருந்தார். பெருமாளைப் பார்த்து குருவிடம் திரும்பினான்.

அதுவே இது… கணிகண்ணனுக்குப் புரிந்துவிட்டது. குனிந்து தன்னைப் பார்த்தான். இதுவே அது. மறுபடி தன் குருவைப் பார்த்தான். அவனுக்கு புரிந்துவிட்டது!

-முற்றும்