விளையாட்டாகத்தான் அது ஆரம்பித்தது.

வீட்டில் கடுமையாக அடக்குமுறை. வாலிப வயது வந்ததும் அந்த அடக்குமுறையை மீற வேண்டும் என்று அடிமன அரிப்பு ஏதேனும் செய்ய தூண்டியது.

சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன்.

நெஞ்சு நிமிர்த்தி முகவாய் தூக்கி கழுத்தை பின்பக்கம் சாய்த்து இடுப்பில் கைவைத்து சிகரெட் பிடிக்கிறபொழுது கம்பீரமான, எது குறித்தும் கவலைப்படாத ஆண்மகனாக நினைத்துக்கொண்டேன்

இந்த சிகரெட் தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தருவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.

சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிக்கை வாயிலாக தெரிந்தபோது எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.

நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்று அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது   சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?

நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அது ஒரு போதையான ரசாயனம். அது என்ன செய்யும்?

கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில், அந்த ரசாயனம் தாக்கும் போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது   அங்கிருந்து உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு அமைதி படர்கிறது. கண் கிறக்கமாகன ஒரு நிலைமை ஏற்படுகிறது.

இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உதவியும் செய்தது. என்ன உதவி?

சுற்றுப்புறம் என்ன மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக்க சிகரெட் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டேன். அப்படி சிந்திப்பதில்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட் வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்க்காகவே பல மணி நேரம்  கூட்டங்களில் உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து அமைதியாக பேச முடியவில்லை.

வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம், தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும் வெளியே போய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிட்ட நிறைவு பூர்த்தியாகும்.

இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்கிய குறைவான சிந்தனை. உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.

பத்தொன்பது வயதில் தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து நாற்பைந்தாவது வயதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இழுத்து இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் போயிற்று.இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரிதானது. மேல் வயிறு பெரிதாக இருந்ததால் நடக்கும் போது மூச்சு வாங்கியது. மாடிப்படி ஏறும் போது சிரமமாக இருந்தது.

எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் “இவனை மாற்ற முடியாது” என்று கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். நிச்சயம் ஒருநாள் நீங்களாக  விட்டுவிடுவீர்கள் என்றும் சொன்னார்கள்.

அது நேர்ந்தது.

திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள் . வளர்ந்து படிக்க வேண்டிய ஒரு மகன் இருக்கிறான் இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என் குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி என்று சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும்  வீட்டு வாசலில் நின்றே அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி குப்பை தொட்டியில் எறிந்தேன்.

மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை. முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரைமணி… இன்னும் அரைமணி… என்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்து ஆரோக்கியமாக தெரிந்தது.

அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன். இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு  பிறகு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை. நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.

நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக, நன்கு சுவாசிக்கின்றவனாக, மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக் கொள்பவனாக மாறினேன்.

ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா…..?

-தொடரும்