தன்னுடைய அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவன்தான் பிறர் அந்தரங்கத்தில் நுழைய விரும்புகிறான். நாலு பேருடன் அதை அலச முற்படுகின்றான். இந்த வாக்கியம் எனக்குத் தெரியும்.

ஆனாலும் நான் ஒரு ரிப்போர்ட்டர். கிசுகிசு ரிப்போர்ட்டர்.

ஊரான் வினையை அறுத்து வாரந்தோறும் பத்திரிகைகளில் தூவி ஊர்முழுக்க பச்சை முளைப்பதைப் பார்த்துக் களிக்கும் எழுத்து விவசாயி. பெண் பெயருக்குப் பின்னால் அழகாய் ஒளிந்துகொண்டு அடுத்தவன் அந்தரங்கத்தைப் பூரணம் பொதிந்த கொழுக்கட்டையாய் படைக்க வல்லவன். சினிமா செய்திகள் பிரபல்யமானவுடன் நானும் பிரபல்யமானவன். திரைக்கு அப்பால் நடப்பவற்றை மறைக்காமல் வெளிப்படுத்துபவன்.

வேலையில்லாத போது ஐந்து வருடத்திற்கு முன்பு விளையாட்டாய் வெள்ளைத்தாளில் இது அப்படியாமே.. அது இப்படியாமே என்று எழுதிப் பேட்டி பத்திரிக்கையில் செய்தி வெளியாகி சன்மானமும் உடனே வந்து விட்டது. இன்று அரசு வங்கி உத்தியோகம், ஆயிரம் ரூபாய் சம்பளமும், வீடும், வாகனமும் மனைவியும் வந்த போதும் அட்டகாசமாய்த் தொடருகிறது.

என் ஸ்கூட்டர் சப்தம் கேட்டு நடுங்காத சினிமா நடிகை இல்லை. என் இருப்புக் கண்டு எரிச்சலுறாத சினிமா நடிகன் இல்லை. என்னைக் கண்டு பயப்படாத திரை உலக நபர் மிகக் குறைவு. ஆனாலும் என் ஹலோவுக்கு பதில் ஹலோ சொல்லாமல் இவர்கள் நகர்ந்து போவது இல்லை. அப்படிச் சொல்லாததே செய்தியாய் வந்து சிரிக்க அடித்துவிடுமோ என்ற பயத்தில் என்னைக் கவனிக்காமல் விட்டதில்லை.

சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறைகளிலும் எனக்குக் கடுமையாய் வேலைகள் இருக்கும். நகரத்தின் எந்த மூளைக்கும் போக வசதியாய் வாகனமும் தமிழ் பண்டிதரான அப்பா சொல்லிக் கொடுத்த அழகு தமிழும் இந்தக் காரியத்துக்குப் பேருதவியாய் இருந்தன.

‘வடிவான நடிகைக்கும், அழகு என்று முடியும் நடிகருக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை வருமாம். மலைப்பிள்ளையார் ஊரில் நடந்த படப்பிடிப்பில் இது அதிகமாயிற்றாம். தயாரிப்பாளரைக் கேட்டால் பூனைகள் எதற்குச் சண்டை போடும் தெரியாதா என்கிறாராம். ஒரு நாள் முருகா சரணம் என்று இந்தச் சண்டை முடிந்து விட்டதாம்.’

என் எழுத்துக்கள் இப்படித்தான் பார்வைக்கு இருக்கும். ஆனால் எல்லாருக்கும் புரியும், புரிந்தது. சுவாரஸ்யம் தாங்காமல் சினிமாக்காரர்களே இது யார் சார் என்று என்னையே கேட்க வைத்தது இவங்கதானே சார் என்று இன்னொரு தகவல் கொடுத்து உதவி செய்தது.

அது ஒற்றுமையில்லாத ஜாதி. நான் அங்கே சந்தோஷமாய் கழைகூத்து நடத்தி ஜெயித்து வந்தேன்.

ஆனால் நானே கயிறு கட்டி நானே நடந்து காட்டின இந்த கம்பு வித்தையில் ஒரு நாள் நானே கால் தடுக்கி விழுந்தேன். மாயவரத்திலிருந்து என் தங்கை கடிதம் எழுதியிருந்தாள். பெண் பெயரில் ஒளிந்து எழுதுவது நான்தான் என்று அவளுக்கு தெரிந்து விட்டதாம். அந்த ஊர்ப்பக்கம் இவ்விதச் செய்திகளை எல்லோரும் விரும்பி படிக்கிறார்களாம். அவள் பதின்மூன்று வயது நாத்திக்கு ஷூட்டிங் பார்க்க மிகவும் ஆசையாம். சென்னை வருகிறாளாம். ஒரு வாரம் வைத்திருந்து வேண்டுமென்கிறபடி ஷூட்டிங் காண்பித்து ஊர் அனுப்பி வைக்க வேண்டுமாம். ‘ தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடாதே. இது கூட உங்க அண்ணாச்சியால் செய்ய முடியாதா? பணம் கேட்டோமா பட்டு கேட்டோமா என்று இடித்துக்காட்ட ஆரம்பித்து விடுவார்கள் ‘ தயவுசெய்து என் நாத்தனரை நல்லபடியாய் ஊர் சுற்றிக்காட்டி அனுப்பு என்று எழுதியிருந்தாள்.

இரட்டை பின்னாலும் பாவாடை சட்டையுமாய் அந்தப் பெண் சென்னை வந்து சேர்ந்தது. மை தீட்டின கண்ணும் பவுடர் அப்பின முகமுமாய் என் வீட்டில் வளைய வந்தது. அவசரத்துக்கு உதவும் என்று நான் வைத்திருந்த நடிக நடிகையர் போட்டோக்களைக் கத்தரித்துத் தானே அழகாய் ஒரு ஆட்டோகிராப் செய்து கொண்டது சின்ன வயசானாலும் உடம்பில் வயசுக்கு மிஞ்சி ஒரு காவேரி ஆற்று வளமை தெரிந்தது.

ஒரு குறிப்பிட்ட நடிகனின் பெயரைச் சொல்லி, அவனோடு பழக்கம் உண்டா என்று கேட்டது. அவன் ஷூட்டிங் பார்க்க வேண்டும். அவனிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.

நான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததற்கே அவன் தான் காரணம். என் சிறப்பான தகவல் செய்தி அவன் பேச்சிலிருந்துதான் வெளியாயிற்று. ‘ எல்லா நடிகைகளுக்கும் ஆண்களைப் பற்றி முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம். அவ்விதம் இருந்தால்தான் நடிப்புத் துறையில் சுலபமாய் முன்னேற முடியும் ‘ என்று அந்த நடிகன் ஒரு முறை என்னிடம் சொன்னான். கையில் வைத்திருந்த அமெரிக்க பிலிம் மேகஸினிலிருந்து அதே மேற்கோள் காட்டினான். இதன் முழு அர்த்தமும் எனக்குப் புரிந்தது. ஆனால் இந்த முறைகள் அமெரிக்காவுக்கு சரிப்படும். நமக்கு சரி வருமா? இவன் இவ்விதம் சொன்னான் என்று எல்லா நடிகைகளிடமும் சொல்லி அவர்கள் அபிப்பிராயத்தைக் கேட்டேன். அமோகமாய் வரவேற்பு இருந்தது. நாலு வாரம் தொடர்ந்து சர்ச்சை நடத்தி, அவனை நாற அடித்தது. ஆசிரியரே போதும் இது என்று சொல்லும்படி ஆயிற்று.

அதற்குப் பிறகு நான் என்ன எழுதினாலும் ஆவலுடன் படிக்க ஆட்கள் இருந்தது.

இவ்விதம் செய்துவிட்டாயே என்று நேரே வருத்தப்பட்டான். நானும் போலியாய் அவன் புத்திக்கூர்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டேன். தொடர்ந்து பல இடங்களில் அவனைப் பற்றி எழுதினேன். அவன் ஒதுங்கினபோது நெருங்கினேன். ஒதுங்கினதையும் எழுதினேன்.

“அவனைத்தானே பார்க்கணும், ராஜ உபசாரமாய்ப் பார்க்கலாம் வா ” என்று மல்லிகாவை, என் தங்கையின் நாத்தனாரை என் ஸ்கூட்டரின் பின்னே உட்கார வைத்து அழைத்துப் போனேன். இவளை சந்தோஷப்படுத்துவது என் தங்கையை சந்தோஷப்படுத்தும், படுத்த வேண்டும் என்றே அழைத்துப் போனேன்.

முதலில் நகருக்குள் இருந்த இரண்டு நடிகைகளை அவர்கள் வீட்டில் சந்தித்தோம். ஆரஞ்சு
ஜூஸ் குடித்தோம். ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டோம். ஒரு நடிகையிடம் ‘இந்த பெண் உங்களுடைய விசிறி ‘ என்று சும்மா அறிமுகப்படுத்தியபோது  ‘ இல்லை நான் அவருடைய விசிறி ‘ என்று இது பதில் சொல்லிற்று. அதனால் என்ன நானும் அவருடைய விசிறிதான் என்று நடிகை சமாளிக்கும்படியாக ஆயிற்று. நான் நடிகையின் பேச்சை மனதில் குறித்துக் கொண்டேன். ‘ இந்த நடிகை உங்களுடைய விசிறி என்று தன்னை சொல்லிக் கொண்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பற்றி ‘ என்று அவனிடம் கேட்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

நடிகையின் வீட்டிலிருந்து வெளியே வருகையில் மல்லிகா வயிற்றை பிடித்துக் கொண்டு வந்தாள். காரணம் கேட்டபோது இரண்டு நாளாகவே வலிக்கிறது என்று சொன்னாள். இடம் மாறுதல் சீக்கிரம் சரியாகி விடும் என்று தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். வீட்டுக்குப் போய்விடலாமா என்று கேட்டதற்கு ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்றாள்.

அந்த நடிகனுடைய படப்பிடிப்பு நகருக்கு வெளியே செங்கல்பட்டு ரோடில் ஒரு குக்கிராமத்தில் இருந்தது. இரண்டு பக்கமும் வயல்களும் பனைமரங்களும் உள்ள குறுக்குத் தார்ச்சாலையில் அரைமணி நேர ஸ்கூட்டர் சவாரி போதும், போய்ச் சேர்ந்து விட முடியும். மல்லிகா எனக்கு முன்னே வண்டியில் ஏறிக்கொண்டு போகத் தயாராய் இருந்தாள். பல்லாவரம் தாண்டி வலப்பக்கம் திரும்பி ஆறாவது கல்லில் ‘ ஐயோ ‘ என்று கத்தினாள். நான் சட்டென்று ஸ்கூட்டரைப் ப்ரேக் போட்டு நிறுத்தினேன். நிற்பதற்குள் என் மீது துவண்டு சரிந்த பெண்ணைத் தூக்கி நிறுத்தினேன்.

இடப்பக்கம் ஏரி, வலப்பக்கம் வயல்வெளி இரண்டு மூன்று புளிய மரங்கள் . கன்றுமில்லாது மாடும் இல்லாத இரண்டுங்கெட்டான் கறவை, உயரே தனியாய்ச் சுற்றும் ஒற்றை நாரை, சூரியன்.

இப்போது மல்லிகா கிட்டத்தட்ட மல்லாந்து விட்டாள். வலக்கையில் பெண்ணை அணைத்து இடக்கையால் வண்டியை இழுத்து நிறுத்தி, அவள் கன்னத்தைத் தட்டி விசாரித்தேன். நெற்றியும் முதுகும், பிடரியும் வியர்வை வெள்ளமாய் அந்தப் பெண்ணுக்கு பொங்கிப் பெருகியது. விழிகள் சொருகிச் சொருகி சாய்க்க, பிய்த்தெடுத்த கொடியாய், கைகளில் துவண்டது. நான் மரத்து நிழலில் மல்லிகாவை உட்கார வைத்தேன் . கைக்குட்டையை விரித்து முகத்தை துடைத்துக் கொள்ள சொன்னேன்.

” என்ன மல்லிகா? என்ன ஆச்சு. பசி மயக்கமா? வெயில் கடுமையா? பின்னால் உட்கார்ந்தபடியே தூங்கினையா என்னம்மா என்ன ஆச்சு? ”

” திரும்பிப் போயிடலாமா? சித்த நேரம் படுத்துக்க மல்லிகா. ”

” தரையில் வேணாம், மல்லிகா என்மேல் சாஞ்சிக்க ” தோளைத் தொட்ட என் கைகளை அந்தப் பெண் சட்டென்று தள்ளிவிட்டது.

” விடு போ, எனக்கொன்னுமில்ல. அன்னாண்ட போ. யம்மா… ” என்று மீண்டும் கத்திற்று.

கணநேரம் மல்லாந்து மறுபடி மண்ணில் மரவட்டையாய்ச் சுருண்டு கொண்டு விட்டது.

இது என்ன ஹிம்ஸை. என்ன ஆயிற்று இந்தப் பெண்ணுக்கு, உதவிக்கென்று கூட ஆள் இல்லாத இடமாய்ப் பார்த்து, ஒரு குவளை ஜலம் கூட கிடைக்காத இடமாய் நின்று என்ன அவஸ்தை அது!

” மல்லிகா, கொஞ்சம் சமாளிக்சுக்க. திரும்பி பல்லாவரம் போய்டலாம்; அங்கு சோடா வாங்கித் தரேன், எழுந்து நில்லு. கொஞ்சம் சரியாயிடும்.”

அந்தப் பெண் குழந்தையைத் தூக்கி நிறுத்தி அவள் உடைகளைப் பார்க்கையில் தான் எனக்கு சர்வமும் புரிந்தது. இனியும் இந்த பெண் குழந்தையில்லை.

திட்டுத் திட்டாய் மெல்ல பரவும் ஈரமாய்… ஈஸ்வரா… முருகப் பெருமானே… என்ன சிக்கல் இது. உடனடியாய் என்ன செய்ய வேண்டும் இதற்கு?

முதலாவது ஒரு பெண் வேண்டும். விவரம் தெரிந்த பெண் வேண்டும். இந்தக் குழந்தைக்குப் பயம் காட்டாமல் மனசு தேற்றும்படி ஒரு பெண் வேண்டும்.

எதிரே பால் பிடிக்காத பச்சைக் கதிர்கள் தலை சுழற்றி ஆடின. கீழே எது நடந்தாலும் அதோடு எனக்கு சம்பந்தம் ஏதுமில்லை என்று மேலே வெள்ளை மேகங்கள் மிதந்து போயின.

நெட்டுக்குத்தான ஏரிக்கரையில் மூச்சு வாங்கி ஏறினபோது, நான், மல்லிகா, என் ஸ்கூட்டர் தவிர வேறு ஜுவனே தென்படவில்லை.

” மல்லிகா நான் போய் யாரையாவது கூட்டிகிட்டு வரட்டா?”

” அம்மா… அம்மா எனக்கு இது வாணாமே. எனக்கு இது வாணாமே. என்னால் முடியல்லே. ”

ஈஸ்வரா, யார் முகத்தில் விழித்தேன் நான்?

இந்த வேளையில் இந்த இடத்தில் இது இப்படி ஆயிற்று என்று தெரிந்தால் என் தங்கையை சம்பந்தி அம்மாள் கிழித்துப் போட்டு விடுவாளே! மூவேழு ஜென்மத்துக்கும் என் மனைவியை இடித்துக் காட்டுவாளே!

” உனக்குத்தான் அறிவில்லை, ஆம்பிளை. உன் பெண்டாட்டிக்குத் தெரிய வாணாம். இன்னிக்கு வெளியே போகாதடின்னு சொல்ல வேணாம். பொண்ணு பெத்து வளர்ந்த குடும்பம் தானே உங்களதும் முகத்தை பார்த்த தெரியாது சூட்டிங் பார்க்க ஊரைத் தாண்டி கூட்டிக்கிட்டு போனானாம். இவளும் சுருக்க வந்துடுன்னு சொல்லி அனுப்பிச்சாளாம்.”

சம்பந்தி அம்மாள் என்ன வேண்டுமென்றாலும் பேசிக் கொள்ளட்டும். இந்த பெண்ணை இந்த படத்திலிருந்து மீட்க ஆள் வேண்டும். உடனே வேண்டும். அவன் அந்த நடிகன் இந்தப் பக்கம்தானே வருவான். இப்படித் தானே வருவான் என்பது என்ன நிச்சயம். ஒரு வேளை போயிருப்பானோ?

தூரத்தில் புழுதிப்படலம் தெரிந்தது

நான் ஏரிக்கரை பாதி ஏறுவதற்குள் அந்த வெள்ளைக் காரும் ஒளியில் பளிச்சிடும் நம்பரும்… அவன்தான். அவனுடைய வண்டிதான்.

என்ன முருகேசன், ஏன் இங்க நிக்கறீங்க, வண்டி ப்ரேக்டவுனா… அடேடே பாப்பா யாரு… இடிச்சிட்டீங்களா? மூஞ்சியப் பார்த்தா நல்ல பேமிலி மாதிரி இருக்குதே, என்ன ஆச்சு முருகேசன்? ”

பின் சீட்டிலிருந்து இறங்கி என்னை நெருங்குவதற்குள் இத்தனையும் உடனடியாய் அவனால் பேச முடிந்தது. அவனால் தான் இப்படி பேச முடியும்.

துவண்டு கிடக்கிற பெண்ணை ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து நான் விஷயங்களைச் சொன்னேன்.

” கையை தள்ளிவிட்டுடுச்சா! இட்ஸ் நேச்சுரல் முருகேஷ்… நா பேசறேன் விடுங்க. பயந்து போயிருக்கும். நத்திங் டு ஒர்ரி. நம்ம கார்லயே வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடலாம்…”

” பாப்பா, என்னைப் பாரு. கண்ணைத் தெற… நான் யார் வந்திருக்கேன் பாரு. அடேடே பாப்பா நம்ம விசிறியா? வீட்டுக்கு ஒரு நா பாப்பாவை கூட்டிக்கிட்டு வாங்க முருகேஷ், பேர் என்ன? மல்லிகாவா?”

“டேய் மல்லிகா, கண்ணைத் தெற. என் வீட்டுக்கு வரையா. இது ஒண்ணும் இல்லடா எதுக்குப் பயப்படற ” அருகில் அமர்ந்து பெண்ணைத் தூக்கி மெல்லத் தன் தோளில் சார்த்தி டிரைவரை ப்ளாஸ்கிலிருந்து பானம் கொண்டு வரச் சொல்லி பாட்டிலிருந்து குளிர்ந்த ஜலம் எடுத்து முகத்தை துடைத்து சீட்டு விளையாட பயன்படுத்தும் பெரிய போர்வையை மேலே போர்த்தி, முதுகை வருடி தலையைக் கோதி மெல்ல பேசி, சிரிக்கவைத்து, அணைத்தபடி காருக்குள் கொண்டு வந்து உள்ளே அமர்த்தி, டிரைவரை என் ஸ்கூட்டரை எடுத்து வரச் சொல்லி என்னையும் ஏற்றிக் கொண்டு நகரம் நோக்கிப் பேயாய்ப் பறந்தான்.

இவனையா நான் பெண்களை மயக்குபவன் என்று எழுதினேன்? இவனையா நான் மதனகாமராஜன் என்று வர்ணித்தேன்? இவனையா நான் மலர் தேடும் வண்டு என்று சிண்டு முடித்தேன்?

முருகப்பெருமானே… என் வெட்கம் என்னை என்னுள் மறுகிக்கொன்று கொண்டிருந்தது.

” மல்லிகா உனக்கு சயின்ஸ் தெரியாதா… உன்னுடைய ஹெல்த் ரொம்ப பெர்பஃக்ட்ன்னு இதுக்கு அர்த்தம். பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை மல்லிகா, இன்னும் வயித்துல வலி இருக்கா. டேய் பொய் சொல்லாத. என்னைப் பார்த்ததும் வயித்து வலி ஓடியே போயிட்டுருக்குமே சரிதானே நான் சொல்றது… வெரிகுட்… வெரிகுட்… வெரிகுட்… ”

இவனையா நான் நோய் உள்ளவன் என்று கிசுகிசு எழுதினேன்? இவனையா அருவருக்கத்தக்கவன் என்று வர்ணித்தேன்?

இவனையா நோய் உள்ளவன்….. வர்ணித்தேன்?

” அது ஒரு சைக்கிள் மாதிரி மல்லிகா. வேஸ்ட் ஆன மெல்லிய திசுக்கள் தானாக அகற்றப்பட்டு விடும். ” சுலபமான ரஸம்  கெடாத ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு வந்தான். ” வீட்டில என் ஒய்ப் இருக்கா. என் மன்னி இருக்கா. என்னைவிட அழகா இதை உனக்கு சொல்லிக் கொடுப்பாங்க. நத்திங் டு ஒர்ரி.”

” முருகேஷ், மன்னியிடம் விஷயம் சொன்னதும் அவள் புன்னகையுடன் காருக்குள் வந்து மல்லிகாவின் அருகில் அமர்ந்து கொண்டாள். தோளைக் கட்டிக் கொண்டு ‘ கங்கிராட்ஸ் ‘ என்று சொன்னாள். இந்தக் குடும்பத்து விஷயத்தையா தெருவுக்கு இழுத்தேன்?

வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி மல்லிகாவின் ஆட்டோகிராப் வாங்கி வாழ்த்துகள் என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.

சிவந்து நன்றி சொன்ன பெண்ணின் தலையில் கையை வைத்து ஆசிர்வதித்தான்.

இவனையா நான் காமுகன் என்று வசை பாடினேன்.

மன்னி வீட்டுக்குள் மல்லிகாவுடன் நுழைந்து விவரம் சொல்லி காருக்குள் திரும்பும் வரை எதுவும் பேச எனக்கு தோன்றவில்லை.

மன்னி அமர்ந்தவுடன் கார் சாவியை திருகப்போனவனிடம் மெல்ல நன்றி சொல்லி “இது சம்பந்தி வீட்டுப் பொண்ணு. வெளியே இதுபத்தி பேசாம இருந்துட்டாத்தான் நல்லது. என் தங்கை அனாவஸ்யமா ஹிம்ஸை படும். என் வொய்ப்க்கு கெட்ட பேர் வரும் ” என்றேன்.

ஓ ஹாஹொ பலத்த ராட்சஸன் மாதிரி சிரிப்பான் என தயங்கி சிரிடா, சிரிடா உன் ஆத்திரத்தை எல்லாம் என் மேல் கொட்டு என் முகம் சிறுத்துப் போறதைப் பார்த்து சந்தோஷப்படு. இது வேணும் எனக்கு இது வேணும், சிரிடா.

இல்லை. அவன் சிரிக்கவில்லை. நோ நோ… நெவர் யார்கிட்டயும் இது பற்றி பேசமாட்டேன். மன்னி நீங்களும் பேசவேண்டாம். வரேன் முருகேஷ், ஷூட்டிங் கான்ஸலாயிருக்கும். போய் மன்னிப்புக் கேட்கணும். வரட்டுமா?”

நான் மெல்லத் திரும்பி என் அறைக்குள் நுழைந்து அவனைப் பற்றி புதிதாய் கேள்விப்பட்ட அத்தனை செய்திகளையும் கிழித்துப் போட்டேன்.

தன்னுடைய அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவன் தான் பிறர் அந்தரங்கத்தில்….

எனக்கு அந்த வாக்கியம் முழுவதுமாய் இப்போது தான் புரிந்தது.

-முற்றும்