
உ
யோகிராம் சுரத்குமார்
அஹோபிலம்
எது கடவுள் என்ற கேள்விதான் உலகத்தில் இருக்கின்ற எல்லா மதங்களும் தோன்றக் காரணமாய் இருந்திருக்கிறது. எல்லா மதங்களினுடைய முதல் கேள்வியும், எது கடவுள் என்பதும், இதுவே கடவுள் என்று சொல்வதுமாகவே இருந்திருக்கின்றன. கடவுள் தேடுதல் ஒரு அயற்சியான விஷயம்தான். மிக மிக சத்தியத்தோடு இருப்பவர்களுக்கே சத்தியம் வசப்படும். இவ்விதம் கடவுளை வசப்படுத்தி அளப்பரிய ஆனந்தம் அடைந்தவர்கள். இது தான் வாழ்வு இதுதான் வாழ்வில் உண்மையான என்பதை கண்டுகொண்டு குதித்தவர்கள். அதை மற்றவருக்கு சொல்ல முயற்சித்தார்கள். இந்து மதத்திலுள்ள அம்மாதிரியான முயற்சிகளுக்கு புராணக்ககதைகள் என்று பெயர். கடவுளைக் கண்ட திகைப்பில் வேத வரிகளாக வந்தவை, இன்னும் விளக்கமாகி உபநிடதங்களாக மாறி, உபநிடதங்களின் விளக்கமாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் புராணக் கதைகளாக மாறின. எல்லா புராணக்கதைகளும் கடவுள் தேடுதலை, கடவுள் பற்றிய ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்பவை.
எது கடவுள்? அது மாபெரும் சக்தி.எல்லையில்லா சக்தி. அது எங்கிருக்கிறது? எங்கும் இருக்கிறது. அப்பா…நீ சொன்னது புரியவில்லையே, விளங்கும்படி சொல் என்று கேட்பவர் கூவ, அறிந்தவர் மறுபடியும் சொல்லத் துவங்குகிறார். அது மேலேயும் இல்லை. கீழேயும் இல்லை. அது உள்ளேயும் இல்லை. வெளியேயும் இல்லை. அது வெளிச்சத்திலேயும் இல்லை. இருட்டிலேயும் இல்லை. அடடா…என்ன சொல்கிறீர்கள். இங்கேயும்மில்லை அங்கேயுமில்லை என்றால் நான் எப்படி புரிந்து கொள்வது? எங்கே இருக்கிறார் என்று சொல்லுங்கள். இவை இரண்டுக்கும் நடுவே இருக்கிறார் என்று பதில் வந்தது. இன்னும் தெளிவாகச் சொல்லுங்கள். கேள்வி எழும்பியது.
-தொடரும்
Post your comment